சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் – புராணக் கதைகள்!

107

சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் – புராணக் கதைகள்!

மதுரையில் குருவித்துறை என்ற ஊரில் உள்ளது சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இங்கு சித்திர ரத வல்லப பெருமாள் மூலவராகவும், செண்பகவல்லி அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி, குருப் பெயர்ச்சி ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச் சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இந்தக் கோயிலில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள் பாலிக்கிறார்.

வியாழன் (குரு) தனது மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவின் துறை (குருவித்துறை) என்றானது. குரு பகவானின் தவத்தால் மனம் மகிழ்ந்த நாராயணப் பெருமாள் அழகிய தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டுத் தந்தார். இதனால், இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

வியாழன் (குரு) பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு (வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர். வியாழன் பார்க்க திருமணம் விரைவில் நடந்திடும் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். குரு பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், குரு பகவான் (வியாழன்) கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து கொள்வோம். ஆனால், அந்த குரு பகவானுக்கே பாதிப்பு ஏற்பட்டால் யாரிடம் சென்று முறையிடுவது? குரு பகவான் தனது மகன் கசனுக்காக நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திர ரத வல்ல பெருமாள் கோயில்.

உலகத்திலேயே வியாழன் பகவான் நாராயணனை நோக்கி தவம் புரிந்த இடம் இந்த கோயில். வியாழன் பகவான் சுயம்புவாக தவம் செய்வது போன்று காட்சி தருவதும் இந்த கோயிலில் தான் என்று நம்பப்படுகிறது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தல வரலாறு:

பழங்காலத்தில் நடந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் அசுரர்கள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவர்களை அசுர குரு சுக்கிராச்சாரியார் மருதசஞ்சீவினி என்ற மந்திரம் மூலமாக உயிர் பெறச் செய்தார். அந்த மருதசஞ்சீவினி மந்திரத்தை தேவர்களும் கற்றுக் கொள்ள விரும்பினர். இதற்காக, தேவர்கள் தங்களது குருவான பிரகஸ்பதியின் (குரு பகவானின்) மகன் கசனை அழைத்து அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தைக் உபதேசம் பெற்று வா என்று சொல்லி அனுப்பினார்கள்.

அதற்கேற்ப கசனோ தனது தந்தையான வியாழன் பகவான் (குரு பகவான்) ஆசி பெற்று அசுரலோகத்திற்கு சென்றான். அங்கு சென்ற கசனை அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி ஒருதலையாக காதலித்தாள். அவள் மூலமாக கசன், சுக்கிராச்சாரியாரிடமிருந்து மருதசஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொண்டான்.

இதையறிந்த அசுரர்கள், கசன் உயிரோடு இருந்தால் அசுரகுலத்திற்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று பயந்து அவனைக் கொன்று சாம்பலாக்கினர். அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர். கசனை காணாமல் தவித்த தேவயானி, தனது தந்தை சுக்ராச்சாரியாரிடம், கசன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்படி வேண்டினாள். அவரோ, தனது ஞான திருஷ்டியால், கசன் தனது வயிற்றில் இருப்பதை அறிந்து கொண்டார்.

மேலும், மருதசஞ்சீவினி மந்திரம் மூலமாக கசனை உயிர் பெறச் செய்தார். ஆனால், அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால் சுக்கிராச்சாரியார் இறந்துவிட்டார். தன்னை உயிர்பெறச் செய்த தனது குருவை, மந்திரம் மூலமாக உயிர் பெறச் செய்தார். சுக்கிராச்சாரியாரோ, தனது மகள் தேவயானியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு, கசன் தங்களது வயிற்றிலிருந்து உயிர் பெற்று வந்ததால், தேவயானி எனக்கு சகோதரி முறை. அப்படியிருக்கும் போது எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி தேவலோகம் கிளம்பினான்.

ஆனால், ஆத்திரமடைந்த தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். இதன் காரணமாக, தனது மகனை காணாத பிரகஸ்பதி, இத்தலத்து பெருமாளிடம் மகனை மீட்டுத்தரும்படி தவம் செய்தார். அதன்படி, பெருமாள், சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். அதன் பிறகு பிரகஸ்பதி வேண்டுகோளுக்கிணங்கள் இங்கேயே எழுந்தருளினார்.