மகாலட்சுமியின் லீலைகள் பற்றி தெரியுமா? – பகுதி 1!
மேதஸ் முனி வினைகளின் வெம்மையால் வாடிக் கிடந்த சுரத-சமாதியர்க்குக் குளிரக் குளிரத் தாமஸீ எனும் மாகாளியின் மகிமைகளை விவரித்த பின்னால் மத்யம சரித நாயகியான மகிஷ மர்த்தினியின் கதையைத் துவக்குகிறார்.
அசுரர்களில் ரம்பன்-கரம்பன் என்ற பெயருடைய இரு சகோதர்கள் இருந்தார்கள்.
அவர்கள் உலகை வாட்டி வதைக்கும் கொடூரக் குணம் உடையவர்களாக இருந்தாலும் தங்களுக்குள் மிக அரிதான பாசப் பிணைப்பை உடையவர்களாக இருந்தனர். மூன்று லோகங்களையும் ஆளும் வல்லமையைப் பெற வேண்டும் என்று கருதி அதற்காக ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் ஓரிடத்தில் கடும் தவம் புரிந்தார்கள்.
இவர்களில் கரம்பன் நீரினடியிலும், ரம்பன் பஞ்சாக்னி மத்தியிலும் தவமிருந்தனர். கரம்பனை இந்திரன் வஞ்சனையால் கொன்றுவிட்டான். இதனால் கோபமுற்ற ரம்பன் அக்னிபகவானிடம் வரம் பெற்று இந்திரனை வெல்லும் ஒரு மகனை ஒரு பெண்ணெருமையிடம் பெற்றுப் பின் அக்னியிலிறங்கி உயிர்நீத்தான். அந்தப் புத்திரனே மகிஷாசுரன். எருமை முகமும் ஆசுரமான உடலும் பெற்ற அதிசயப் பிறவி இவன்.
ரம்பனின் வரபலத்தின் காரணமாக, மகிஷாசுரன் தேவர்களை வென்றுத் தேவலோகத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொணர்ந்தான். பின்னரும் அவன் கொடுமைகள் தொடர்ந்தன. இதனால் சகிக்கமுடியாத துயரை அனுபவித்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் சிவனாரையும் மகாவிஷ்ணுவையும் நாடிச் சென்றார்கள். அவர்கள் இருவரிடமும் மகிஷன் இழைக்கும் கொடுமைகளைச் சொல்லிச் சரணாகதி அடைந்தார்கள்.
உடனே விஷ்ணுவும் சிவனும் கோபமடைந்தார்கள். சாந்தகுண சம்பன்னர்களான இவ்விருவரும் அசுர வதத்திற்கு வேண்டிக் “கோபத்தைச் செய்து கொண்டார்கள்” என்கிறார் மேதஸ் முனிவர். கருணையால் கனிந்த நெஞ்சமுடையோராயினும் முகத்தை நெறித்து முனிந்த நினைவுடையோராய்ப் பராசக்தியைத் தியானம் செய்தனர் சங்கரரும் நாராயணரும்.
அரியும் அரனும் செய்த அந்த அற்புதத் தவத்தின் காரணமாக அவர்களின் சக்தி பேரொளி ரூபமாக அவர்கள் முகத்திலிருந்து வெளிப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து பிரம்மனும் மற்றைத் தேவர்களும் கூடத் தியானத்தில் ஈடுபட, அவர்கள் சக்தியும் வெளிவந்தது. இவை அனைத்தும் ஒன்று கலந்து ஒரு திவ்விய மங்கள ஸ்த்ரீ ரூபமாய் வடிவெடுத்தது.
சிவனாரின் வெண்மைப் பேரொளி அந்தத் தேவியின் முகமாக ஆகிற்று. நாராயணனின் நீலவொளியோ தேவியின் திருக்கரங்களாகியது. பதினெட்டுத் திருக்கரங்களோடு வடிவங்கொண்டிருக்கிறாள் இந்தத் துர்கா மகாலட்சுமி!
ஸாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியே பல்வேறு தேவசக்திகளாகப் பிரிந்திருந்தது. இப்போது அவையனைத்தும் கூடிப் பூரணப் பிரம்ம சக்தி ரூபமாகிவிட்டது! உபநிஷத் உரைத்தது போல், பேசரும் ஞானம் பெண்ணுருக் கொண்டுவிட்டது!
அனைத்துத் தேவரின் ஆயுதங்களின் அம்சங்களும் இத்தேவிக்கு ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும் ஆகின! அன்பு அன்னையும் திரிபுர சுந்தரியுமான இவளே திரிலோக இராணி. லலிதா சஹஸ்ரநாமம் உரைப்பது போல் தேவ காரியத்திற்காகவே உத்பவித்திருக்கிறாள். இவளுக்குத் தர்ம வடிவான சிம்மத்தை ஆசனமாகவும் வாகனமாகவும் அளித்து உகந்தான் ஹிமவான்.
பாரதம் போல் பதினெட்டு எனும் எண்ணிக்கையைச் சிறப்பாகப் பெற்றவள் இந்தப் பரமேச்வரி. இந்த எண் கடபயாதி சங்க்யைப் படி “ஜய” எனும் எழுத்துக்களைப் பெறும். இவளே ஜயலக்ஷ்மி. இவளே சண்டிகா பரமேச்வரி. “இவளே முக்கிய வழிபாட்டுக்குரியவள். இவளே மாகாளியும் மகா சரஸ்வதியுமாக இருக்கிறாள். இவளை விசேஷமாகப் பூஜிப்பீர்களாக” என்று அறிவுறுத்துகிறார் மேதஸ் முனிவர்.
கருணை மழை பொழியும் கார்முகிலாகவே தோன்றிய தேவி தேவர்களை நோக்கித் “தேவர்களே, மகிஷனை நான் வென்று நீங்கள் இழந்த செல்வத்தையும் இராஜ்ஜியத்தையும் மீட்டுத் தருவேன். அஞ்சேல்!” என்று அபய வாக்கு மொழிந்தாள்.
பின் சிம்மத்தின் மீது ஆரோகணித்த சண்டிகை சிம்ம கர்ஜனை புரிந்தவாறு மகிஷனின் இராஜதானி நோக்கி விரைந்தாள். “ஜய ஜய!” என்று ஜயலட்சுமியை வாழ்த்தியவாறு அவளைத் தொடர்ந்தனர் தேவர்கள்.
ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே |
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே ||
