Saturday, October 14, 2023
HomePurana Kathaigalஎட்டீஸ்வரர் ஆலயத்தின் புராணக் கதை!

எட்டீஸ்வரர் ஆலயத்தின் புராணக் கதை!

எட்டாத உயரத்தில் இருக்கும் செல்வத்தையும் எட்டிப்பிடிக்க அருள்புரியும் எட்டீஸ்வரர் ஆலயத்தின் புராணக் கதை!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் பையனூரில் அமைந்துள்ளது அருள்மிகு எழிலார்குழலி உடனுறை எட்டீஸ்வரர் திருக்கோயில் . இவ்வாலயத்தின் புராணக் கதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்…

ஆலயத்தின் சிறப்பு:

கிடைக்காத (எட்டாத)தையும் கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு. மேலும் இவ்வாலயத்தில் நந்திதேவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, காலபைரவர், சரபேஸ்வரர், சைவ நால்வர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், எழிலார் குழலிஅம்மன், சித்தர் இடைக்காடர் போன்ற பல சன்னதிகள் உள்ளன.

புராணக் கதை:

பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி செய்து. ஆலயத்துக்குச் சேர வேண்டியதை அங்கு சேர்த்து விட்டு, தங்களுக்கு உரிய கூலியை ஊர் சபையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பையனூரில் உள்ள பெரிய ஏரியை நாகனே தூர் வாரி சுத்தம் செய்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் ஊர் சபையின் உறுப்பினர்கள் சிலர், நாகனுக்கான கூலியைக் கொடுக்கும்போது மட்டும், அவனை வெறுங்கையோடு அனுப்பினர். அதாவது, உனக்கெல்லாம் கூலி எதுவும் இல்லை என்பது போல் அவனிடம் அலட்சியமாகப் பேசி விரட்டி விடுவார்களாம். கூலி இருந்தால்தானே வீட்டில் அடுப்பு எரியும்? அன்றாடப் பொழுது நல்லபடியாகப் போகும்? வேலையும் செய்து விட்டு, அதற்குரிய பலன் இல்லா விட்டால் என்ன பயன்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாகன், அந்த எட்டீஸ்வரரிடமே தன் குறையைக் கொட்டினான்.

அவரது சன்னதிக்கு முன்னால் நின்று கண்ணீர் மல்கத் தன் குறையைச் சொன்னான். பிறகு வீடு திரும்பினான். அடுத்த நாள் எட்டீஸ்வரர் ஆலயத்தின் முன்னால் எல்லோருக்கும் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் நாகனின் முறை வரும்போது அவனிடம், உனக்கெல்லாம் கூலி கிடையாது. போ போ என்றனர் ஊர் சபை உறுப்பினர்கள் சிலர். நாகன் மிகவும் நொந்து போனான். பிறகு கோபம் வந்தவனாக, எனக்குரிய கூலியைத் தர மறுப்பது தர்மத்தை மீறும் செயலாகும். இதற்குரிய தண்டனையை என்றேனும் ஒரு நாள் நீங்கள் அனைவரும் அனுபவிக்கத்தான் போகிறீர்கள்என்றான்.

நாகன் சொல்வதை ஊர் சபையினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை, சரிதான் போப்பா என்று அலட்சியமாகச் சொல்லி விட்டு, அடுத்த ஆளுக்குக்கூலியை அளிக்க முற்பட்டனர். அப்போது நாகன் சிவாலயத்தின் முன் வந்து நின்று ஈசனிடம் இந்த முறைகேடு பற்றி மீண்டும் முறையிட்டான். அதற்குள் ஊர் சபை கலைய ஆரம்பித்தது.

அப்போது அனைவரும் கேட்கும்படியாக, அனைவரும் நில்லுங்கள் அப்படியே என்றொரு குரல் அதிகாரமாகக் கேட்டது. வீட்டுக்குச் செல்ல முற்பட்டவர்கள் துணுக்குற்றுக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள். எவரும் இல்லை. யார்… எவனர் நம்மை அதிகாரத்தோடு அழைத்தது? என்று ஒருவருக்கொருவர் பயம் கலந்த முகந்துடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒலித்தது அந்த அசரீரி.

நாகனுக்கு உரிய கூலியைக் கொடுங்கள். அப்படி மறுத்தால், இது சம்பந்தப்பட்ட அனைவரையும் தீவினைகள் துரத்தும். குடும்பத்தில் நிம்மதியை இழப்பீர்கள். நோயினால் அவஸ்தைப்படுவீர்கள் என்றெல்லாம் அந்த அசரீரி சொன்னது. பிறகு குரல் வந்த திசையில் பிரகாசமான ஒரு ஜோதி தோன்றி,அது மெள்ள மெள்ள நகர்ந்து ஸ்ரீஎட்டீஸ்வரரின் கருவறைக்குள் போய் மறைந்தது. இதன் பின்னால்தான் இது எட்டீஸ்வரரின் எச்சரிக்கை என்பதை ஊர் சபையினர் உணர்ந்தார்கள்.

அதன் பின், இறைவனின் சந்நிதிக்குப் போய் மன்னிப்புக் கேட்டதோடு, நாகனிடமும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அவனுக்குச் சேர வேண்டிய கூலியை மொத்தமாகக் கொடுத்தனர். இனிமேலும் இது போல் எதுவும் நிகழாது. எங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம் என்று இறைவனிடம் சொல் என்று நாகனிடம் கெஞ்சலாக வேண்டிக் கொண்டனர். நாகனும் அவர்களை மன்னித்து, இறைவனுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டான்.

பிரார்த்தனை:

வழக்கு விவகாரங்களில் நீதி கிடைக்காமல் திண்டாடுவோரும், சகல செல்வங்கள் கிடைக்கவும் இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபாடு செய்கின்றனர். சுவாமி எட்டீஸ்வரருக்கும், அன்னை எழிலார் குழலிக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =

Most Popular