Saturday, October 28, 2023
HomePurana Kathaigalகருட புராணம் - பகுதி 12 -ஜீவன் யமலோகம் செல்லுதல்

கருட புராணம் – பகுதி 12 -ஜீவன் யமலோகம் செல்லுதல்

மானிடர் உலகத்துக்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம் இடைவெளி உள்ளது. யமதர்ம ராஜன் ஒவ்வொருவர் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படி யம தூதர்கள் மூவகையினரை அனுப்பி வைப்பான். அந்த யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டிப்பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைந்து யமலோகம் கொண்டு செல்வர். அங்கு யமனுக்கு எதிரில் ஆவியுருவச் சீவர்களை அவிழ்த்து நிறுத்தி அவர்கள் ஆணைப்படி நடக்கச் சித்தமாக இருப்பதாகக் கூறுவர். அப்போது கூற்றுவன் யமகிங்கரர்களிடம் அச்சீவன்களை மீண்டும் கொண்டு போய் அவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டு பன்னிரண்டு நாட்கள் கழித்த பிறகு, முறைப்படி மீண்டும் கொண்டு வருமாறு ஆணையிடுவான். இதனால்தான் இறந்தவன் உடலை உடனே எரிப்பதோ, புதைப்பதோ கூடாது.

யமகிங்கரர்களால் அவிழ்த்து விடப்பட்ட வாயு வடிவுடைய ஜீவன் சுடுகாட்டில் தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று திரும்பவும் புகமுடியாதவாறு தீப்பற்றி எரியும் உடலைப் பார்த்து ஓலமிட்டு அழும். புண்ணியம் செய்த ஜீவன் இவ்வுடல் எரிந்து ஒழிந்ததே நல்லது என்று மகிழ்ச்சி அடையும். தேகம் முழுவதும் எரிந்து சாம்பலான உடனே ஜீவனுக்குப் பிண்டத்தாலான சரீரம் உண்டாகும். இறந்தவனின் புத்திரன் முதல் நாள் போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாள் கழுத்தும் தோள்களும், மூன்றாம் நாள் மார்பும், நான்காம் நாள் வயிறும், ஐந்தாம் நாள் உந்தியும், ஆறாம் நாள் பிருஷ்டமும், ஏழாம் நாள் குய்யமும், எட்டாம் நாள் தொடைகளும், ஒன்பதாம் நாள் கால்களும், பத்தாள் நாள் சரீரம் முழுவதும் உண்டாகும்.

ஜீவன் உடலை விட்டுப் பிரியும் முன்பேயே உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று கதறிக்கொண்டு நிற்கும். பிண்ட உருவைப் பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் புத்திரனால் பிராமண முகமாய் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று மறுபடியும் யமகிங்கரர்கள் இழுத்துச் செல்ல திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே யமலோகத்தை அடையும். பயங்கரமான பாதையில் வாள் போன்ற இலைகள் கொண்ட செடி கொடிகள், வறுத்த மணல் இருக்கும் வழியில் செல்ல வேண்டும். இவ்வழியில் செல்லும் ஜீவன் படும் துன்பம் சொல்லத் தரமன்று. சர்வேசுரன் ஒருவன் உண்டென்றும் சுவர்க்கம், நரகர் அடைய நன்னெறி, தீய நெறி உண்டென்றும், பிறப்புக்கு அப்பால் உள்ள வாழ்வுக்கு இதமானவற்றைச் சொல்லுபவர்களோடு முரண்பட்டு சாதுக்களை ஏசித்திருந்தேனே, அவற்றின் பயனை இப்போது உணர்கிறேன் என்றும் ஏகாதசியில் உபவாசம் இருக்கவில்லை. நற்செயல், நல்வினை ஏதும் செய்யவில்லை, என்றெல்லாம் கூறிப் புலம்பும் ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

Most Popular