Sunday, October 15, 2023
HomePurana Kathaigalகருட புராணம் - பகுதி 13 - ஜீவன் செல்லும் பாதையில்...

கருட புராணம் – பகுதி 13 – ஜீவன் செல்லும் பாதையில்…

யம தூதர்களால் பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டு அவர்களிடம் உதைப்பட்டுச் செல்லும் ஜீவன் தான் மனைவி மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அடைந்த இன்பத்தை எண்ணி எண்ணி துன்பமுறும்.

தான் செய்த தவறுகளை, அதர்ம காரியங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கும்.

தன்னால், தன் பொருளால் சுகத்தை அனுபவித்த மனைவி மக்கள் எவரும் தற்போது கூட வரவில்லையே.

மற்றவர்கள் வயிறெரிய பொருள் சேர்த்தோம். இப்போது நம் வயிறு பற்றி எரிகிறதே என்று அலறித் துடிக்கும்.

அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து மனைவி மக்களே நித்தியம் என்று அறம் செய்யாமல் நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று?

நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பம், (அ) துன்பத்தைத் தரவல்லது.

பிறர் பொருளை அபகரித்தல் போன்ற அதர்மங்களை செய்யாமல் தர்மம் செய்து வாழ்ந்திருந்தால் இப்போது இக்கேடு வராதல்லவா? என்று பலவாறு இடித்துக் கூறி, பாசத்தால் நையப்புடைத்து முசலத்தால் புடைபுடை என்று புடைப்பார்கள்.

சேதனன் காற்று நிறைந்த வழியில் கடும் புலிகள் நிறைந்த பாதையில் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, புதல்வனால் இருபத்தெட்டாம் நாளில் செய்யப்படும் ஊனமாச சிரார்த்த பிண்டத்தை உண்டு, முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை அடைவான்.

அங்குப் பிரேதக் கூட்டங்கள் இருக்கும். மற்றும் பத்திரை என்ற நதியும், வட விருக்ஷமும் உள்ளன.

சிறிது நேரச் சிரம பரிகாரத்துக்காக யமகிங்கரர்களுக்கு அஞ்சி அவ்யாமியம் என்ற நகரில் தங்கி, இரண்டாவது மாசிய பிண்டத்தை உண்டு, தொடர்ந்து யமகிங்கரர்களால் ஆரணியத்தின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு துன்புற்று, திரைபக்ஷக மாமிச பிண்டத்தை வேண்டி அரசன் சங்கமனின் கௌரி நகரைச் சார்ந்து மூன்றாம் மாசிக பிண்டத்தைப் புசித்து அப்பால் சென்று வழியில் கடுங்குளிரால் வருந்துவான்.

யமகிங்கரர்கள் எறியும் கல் மழையால் வருத்தமுற்று குரூரன் என்ற அரசனின் குரூரபுரம் அடைந்து ஐந்தாவது பிண்டத்தைப் பெறுவான்.

அடுத்து கிரௌஞ்சம் என்ற ஊரை அடைந்து ஆறாவது மாசிகப் பிண்டத்தை உண்பான்.

அங்கு அரை முகூர்த்த காலம் சிரமபரிகாரம் செய்து கொண்டு பயங்கரப் பாதையில் செல்கையில் பூவுலக வாழ்வை எண்ணி புலம்ப, யம கிங்கரர்கள் அந்த வாய் மீதே புடைப்பார்கள்.

அடுத்து இரத்தம், சீழ், சிறுநீர், மலங்கள் நிறைந்த வைதாரணி ஆறு வரும்.

கோதானம் செய்திருந்தால் அது வந்து படகோட்டிகள் அருகில் உன்னை நதிக்கு அப்புறம் சேர உதவும்.

கோதானம் செய்யாதவர் அந்த ஆற்றில் நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும்.

எனவே பாரதத்தில் பிறந்து வாழும் ஒவ்வொரு ஜீவனும் வைதரணி கோதானம் செய்ய வேண்டும்.

அல்லது அவன் மரித்த பிறகு அவனுடைய புத்திரனாவது செய்ய வேண்டும்.

அடுத்த நமனுக்கு இளையோனான விசித்திரனது நகரை அடைந்து ஊனஷானி மாசிகப் பிண்டத்தை உண்டு, பிறகு அவ்விடம் விட்டுப் புறப்படுகையில், ஏழாம் மாதம் பிண்டத்தை உண்ணும்போது பிசாசுகள் தோன்றி நம்பினவரைக் கெடுத்த ஜீவன் அந்த அன்னத்தை உண்ணத் தகுதியற்றவன் என்று கூறி பலவந்தமாக பறித்துக் கொண்டு போகும்.

ஈத்துவக்கும் இன்பம் பெறாத ஜீவன், தன் புத்திரனால் அவனுக்காகக் கொடுக்கப்படும் மாசிகப் பிண்டம் அவனுக்குச் சேராமல் பைசாசங்களைச் சேரும் சாக்காடு நிச்சயம் என்று உணராமல் பிறர் பசிதீர அன்னதானம் செய்யாமல் வாழ்ந்த நான் படுந்தொல்லையை யாரிடம் சொல்வேன்? என்று துயருறும்.

மானிடப் பிறவி அடைந்த ஜீவன் தான, தரும, பூசை முதலியவற்றால் புண்ணியங்களைச் சேர்க்கவேண்டும்.

அப்பிறவியில் செய்யப்படும் நல்வினைத் தீவினைப் பயன்களையே அது அடையும்.

ஜீவன் உதககும்பதானம் செய்திருப்பின் அந்த உதக கும்ப நீரைப்பருகி தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் மீண்டும் பயணத்தைத் தொடரும்.

யமபுரிக்கான பாதையில் பாதி தூரம் கடந்து விட்டதால் அவனுக்குரியவர் பூவுலகில் அப்போது அன்னதானம் செய்யவேண்டும்.

பிறகு பக்குவப்பதம் என்ற நகரில் எட்டாவது மாசிகப் பிண்டத்தையும், துக்கதம் என்ற ஊரில் ஒன்பதாவது மாத பிண்டத்தையும், நாதாக்கிராந்தம் என்ற நகரில் பத்தாம் மாசிக பிண்டத்தையும் உண்பான்.

அதபதம் என்ற ஊரை அடைந்து பதினொன்றாம் மாத பிண்டத்தை உண்டு, அடுத்த சீதாபரம் என்ற ஊரை அடைந்து சீதத்தால் வருந்தி, பன்னிரண்டாம் மாத வருஷாப்தி பிண்டத்தை உண்டு, அடுத்து வைவஸ்வத பட்டணம் சேரும் முன்பே ஊனாப்திக பிண்டத்தை உண்டு யமபுரியாகிய அப்பட்டணத்தை ஜீவன் அடையும்.

பன்னிரண்டு சிரவணர்கள் அங்குதான் இருப்பர்.

ஜீவன்கள் அந்தப் பன்னிரெண்டு சிரவணர்களையும் ஆராதித்தால், அவர்கள் ஜீவன் செய்த புண்ணியங்களை மட்டும் யமனுக்கு எடுத்துரைப்பர்.

எனவே அந்தப் பன்னிரு சிரவணர்களை ஆராதித்தல் மறுமையில் நன்மை பயக்கும். இவ்வாறு ஜீவன் செல்லும் பாதையில் அது பரிதவிக்கும் நிலைகள் கூறப்பட்டன.

தொடரும்…bk

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 1 =

Most Popular