கருட புராணம் – பகுதி 22 (இறுதி பகுதி) ஆசௌம், துர்மரணம், குழந்தை பாபங்கள்

464

பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும், தாயாதிகளுக்கு பத்து நாள் வரையில் தீட்டு (ஆசௌசம்) உண்டு. ஆசௌசமுடையவர்கள் ஓமங்கள், தேவ ஆராதனை செய்யக்கூடாது. அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் யாரும் உணவருந்தக் கூடாது. அகால மரணம், அயல்நாட்டில் மரணம், மிருகங்களால் மரணம் ஆகியவற்றிற்கு உடனே கருமம் செய்யக்கூடாது. கிரியைகள் துவங்கப்படுகிற அன்று முதலே ஆசௌசம் உண்டாகும். ஒருவன் இறந்த செய்தி கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும்.

திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும், யாகஞ்செய்யும் காலத்திலும், உற்சவம் செய்ய கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும் ஆசௌசம் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தில் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்ததுடன் பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தார்க்கு நிவர்த்தியாகும். பசு, பிராமணர், மங்கையரைப் பாதுகாக்கும் விஷயத்திலும், யுத்த பூமியிலும், ஒருவன் தன் உயிரை இழந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநாள் மட்டுமே ஆசௌசம் உண்டு.

துர் மரணம் அடைந்தால்!

முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளால் மரித்தவனது உடலைப் போல் ஒரு பிரதிமை செய்ய வேண்டும். சிரசுக்கு நாற்பது, கழுத்துக்குப் பத்து, மார்புக்கு இருபது, வயிற்றுக்கு இருபது, தொடைகளுக்கு நூறு, இமைக்கு இருபது. இரு கரங்களுக்கு நூறு, முழந்தாள்களுக்கு முப்பது, இனக்குறிக்கு நாலு, விருஷணங்களுக்கு ஆறு, கால்களுக்குப் பத்தும் வைத்து; மறுபடியும் சிரசுக்குத் தேங்காய், முகத்துக்குப் பஞ்சரத்தினம், நாவுக்கு வாழைப்பழம், மூக்கிற்கு எள்ளுப் பூவும், காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்குச் சவுரியும், தோலுக்கு மான்தோலும், ஸ்தனப் பிரதேசத்திற்குக் குன்றிமணியும், நாபிக்குத் தாமரைப் பூவும், விருஷணர்களுக்குப் பனங்காயும், வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்கள் செய்தால் துர்மரணம் அடைந்தவன் நற்கதி அடைவான்.

குழந்தைகளின் பாபங்கள்

நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்கிற பாபங்கள் அவர்களுடைய பெற்றோரையே சேரும். பெற்றோர்கள் இல்லை எனில் காப்பாளர்களைச் சேரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பாவம் குழந்தைகளுக்குச் சேராது.

ஓம் பக்ஷ ராஜாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருடப் ப்ரசோதயாத்!

கருட புராணம் முற்றிற்று