உலக வாழ்வை விட்டு, உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படிச் செய்து, சபிண்டீகரணமும் செய்து அவன் குலத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும்.
அவ்வாறு செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான்.
இறந்த பன்னிரண்டாம் நாள், மூன்றாவது பக்ஷம், ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்யலாம்.
சபிண்டீ கரணம் செய்யும் வரையிலும் மரித்தவன் பிரேத தத்துவத்துடனேயே இருப்பான்.
புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜேஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தாயாதி செய்யலாம்.
ஒருவரும் இல்லாவிட்டால் புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களைச் செய்யலாம்.
ஓராண்டு வரையிலும் ஒருவனே கர்மம் செய்ய வேண்டும்.
நித்திய சிரார்த்தத்தோடு ஒரு குடத்தில் ஜலம் நிரப்பி உதக கும்பதானம் செய்ய வேண்டும்.
கர்மங்களைத் தவறாமல் செய்தால் இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகடைவான்
. கணவன் நல்லவனாயினும், தீயவனாயினும், அறிஞனாயினும், அறிவிலி ஆயினும், உயிரோடிருக்கும் போதும் இறந்த பிறகும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று பக்தி செய்து கற்பொழுக்கத்தில் நிலை நிற்பவளே உத்தமியாகும்.
தெய்வ வழிபாடு, அதிதி ஆராதனை, விரத, அனுஷ்டானங்கள் முதலியவற்றை கணவன் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனு கூலமாக யாவையும் செய்ய வேண்டும்.
அத்தகைய கற்புக்கரசி இறந்த பிறகு உயர் குலத்தில் பிறந்து உத்தமனான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து, நன்மக்களும் பெற்று குலவிருத்தி செய்து தந்தைக்கும், கணவனுக்கும் புகழை உண்டாக்கி, சுமங்கலியாகவே மரித்து உத்தம லோகத்தை அடைவாள்.
தொடரும்…
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!!!!
