ஒரு சமயம் இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் பெண்களிடம் போய்ச் சேர்ந்தது. மாதவிலக்கான மங்கை நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பே இருக்கவேண்டும். அவளைப் பிறர் பார்க்கக் கூடாது. முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலும், இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவள் போலவும், மூன்றாம் நாள் ஒலிப்பான் போலவும் காணப்படுவாள். நான்காவது நாள் ஸ்நானத்திற்குப் பிறகு சிறிது தூய்மை அடைவாள் போலவும் காணப்படுவாள். ஐந்தாம் நாள் சுத்தியடைந்து குடும்பக் காரியங்களைக் கவனிக்கும் தகுதி பெறுவாள்.
6 முதல் 18 நாள் வரை, ஏழு இரட்டை நாளில் அவளோடு கூடி மகிழ்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை குணவானாக, தனவானாக, துர்மிஷ்டனாக, விஷ்ணு பக்தி உடையவனாக இருப்பான். ரஜஸ்வாலை ஆன ஐந்தாம் நாள் பாயசம் போன்ற மதுர பதார்த்தங்களையே உண்ண வேண்டும். தம்பதியர் சந்தனம், புஷ்பம், தாம்பூலம் கொண்டு குளிர்ந்த மெய்யினராய் மனதில் மோகமுடையவராய் கூடி மகிழ வேண்டும். அவ்வமயம் சுக்கில, சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில். கரு ஏற்படும். சுக்கிலம் அதிகமானால் ஆண் குழந்தையும், சுரோணிதம் அதிகமானால் பெண் குழந்தையும் பிறக்கும்.
புணர்ந்த ஐந்தாவது நாள் கருவறையில் ஒரு குமிழியுண்டாகும். பதினான்கு நாட்களில் தசைகளும், இருபதாவது நாளில் மேலும் தசை அதிகமாகும். இருபத்தைந்தாவது நாளில் புஷ்டி அடையும். ஒரு மாதத்தில் பஞ்சபூத சேர்க்கை உண்டாகும். 2-ஆவது மாதத்தில் தோல், 3-ஆம் மாதத்தில் நரம்புகள் உண்டாகும். 4-ஆம் மாதத்தில் மயிர் புறவடிவம் ஏற்படும். 5-இல் காது, மூக்கு, மார்பு தோன்றும். ஆறில் சிரம், கழுத்து, பற்கள் உண்டாகும். 7-இல் பாலின் குறி தோன்றும். 8-இல் அனைத்து அவயவங்களுடன் ஜீவன் பிரவேசிக்கும். 9-இல் சுழிமுனை நாடி மூலம் பூர்வ ஜன்ம கர்மம் அறியும். பத்தில் குழந்தை பிறக்கும். பஞ்ச பூதாத்மகமாகிய உடல், பஞ்சேந்திரியங்களை அடைந்து இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று முக்கிய நாடிகளும், காந்தாரி, கஜசிம்மஹி, பூழை, அச்சு, அலாபு, குரு, விசாகினி என்ற ஏழுநாடிகளும் உடலில் முக்கியமானவை பெற்று தசவித வாயுக்கள் சேர்ந்துள்ளது. இந்தச் சரீரம். சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் ஆகிய ஆறு கோசங்கள் கொண்டது. உண்ணுகின்ற உணவின் சாரம் உடலில் பரப்புவது வாயு இவ்வாறு அண்டத்திலுள்ளவையெல்லாம் பிண்டத்திலுமுண்டு. பிண்டத்திலுள்ளவை எல்லாம் மனித உடலில் உள்ளன.
மனித உடலில் பதினான்கு உலகங்கள். சப்த குலாசலங்கள், தீவுகள், நவக்கிரகங்கள் இருக்கின்றன. ஒருவன் ஆயுள் அவனுடைய பூர்வ ஜன்ம கர்மானுசாரத்தை அனுசரித்து கருவிலுள்ள போதே பிரமன் நிச்சயித்து விடுகிறான். எனவே தீர்க்க ஆயுளும், உயர்ந்த வித்தையும், யோகமும், மற்ற யாவும் மறு ஜன்மத்திலாவது ஒருங்கே பெற்றிட ஜீவன் நற்கர்மங்களைச் செய்யவேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தொடரும்…
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
