கருட புராணம் – பகுதி 8 பிரேத ஜன்மத்தால் ஏற்படும் துன்பம்

356

பிறனில் விழைபவன், பிறர் பொருளைக் கவர்பவன், காற்று வடிவ பிரேத ரூபத்தைப் பெற்று, பசி, தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் மீறி, எங்கும் அலைந்து திரிவான். அவன் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும், உறவினர்களையும் துன்பப்படுத்துவான். பிதுர்க்களின் தினத்தில் வீட்டிற்கு வரும் பிதுர்க்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்துவான். அவர்களுக்குத் தரும் அவிசுகளை வாங்கிப் புசிப்பான். தன்னுடைய புத்திரனுக்கும் சந்ததி இல்லாமல் செய்வான். பலவித நோய்களை உண்டாக்குவான். அவன் தான் சார்ந்த குலத்தையே பீடிப்பான். தீய குணம் உடையோர்க்கு அவன் அதிகம் துன்பங்கள் விளைவிப்பான். பாவங்கள் செய்தல், ஆண் வாரிசு பிறவாதிருத்தல், பிறந்து பிறந்து இறத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, பசுக்களைக் காப்பாற்ற இயலாமை, நண்பருடன் விரோதம், உபவாசம் தடைபடல், நற்காரியங்கள் செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாதல், தாய் தந்தையரை இகழ்தல், அயலாரைக் கொல்ல முயற்சித்தல், அதர்மங்களையே நினைத்தல், பொருள்கள் அழிவு, களவு, மனைவியுடன் வாழ முடியாமை, சண்டை, சச்சரவு ஆகிய அனைத்தும் பிரேத ஜன்மம் அடைந்தவனாலேயே நிகழ்வதாகும்.

தான தர்மங்கள் செய்வோர், ஹரி நாம சங்கீர்த்தனம் செய்வோர், சிரார்த்தங்களைச் செய்வோர், புனிதத் தல யாத்திரை மேற்கொள்வோர் போன்றோர்க்குத் பிரேத ஜன்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. பிரேத ஜன்மம் அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும், வாள் போன்ற பற்களோடும் தன் குலத்தோர் கனவில் தோன்றி ஐயையோ ! என்னைக் காப்பாற்றுவதற்கு ஒருவரும் இல்லையா? நான் பசி, தாகத்தினால் அவதிப்படுகிறேனே, என் பிரேத ஜன்மம் நீங்கவில்லையே எனக் கதறுவான். இவ்வாறு எந்தக் குலத்தில் பிரேத ஜன்ம தோஷம் நேரிட்டிருக்கிறதோ அந்தக் குலத்தில் துயரமும் துன்பங்களும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!