Sunday, October 15, 2023
HomePurana Kathaigalகாரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு பகுதி - 2

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு பகுதி – 2

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு பகுதி – 2

பெறுதற்கரிய பேய் வடிவு பெறுதல்:

புனிதவதியார் பரமதத்தன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, “சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.

அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.
தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

ஈசன் அருளால் பேய் வடிவை பெற்ற புனிதவதியார், ஈசனை நினைத்து ஆலயம் பல சென்று பாடல் பாடி துதித்தார். புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்றார்.

கயிலாயம் சென்றார்:

அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே கைகள் கொண்டு நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, புனிதவதியாருடைய பக்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தார்.

பரமேஸ்வரனை நோக்கி “சுவாமி இந்த கயிலையில் காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே கைகள் கொண்டு நடந்து வரும் இந்த பக்தையின் பக்தியே என்ன என்று சொல்லி அழைப்பது” என்றார் பரமேஸ்வரி அன்னை.

அதை கேட்ட பரமேஸ்வரன் “இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற புனிதவதியார்.இந்தப் பெருமை பொருந்திய பேய் வடிவத்தையும் இவள் வேண்டிப் பெற்றாள்’ என்றார்.

பின் புனிதவதியார் சமீபத்தில் கயிலைமலையினை தலையினாலே கைகள் கொண்டு நடந்து வந்து அடைந்தவுடன் நந்தி தேவர் புனிதவதியாரின் சிவ பக்தி கண்டு வியந்து வணங்கி வரவேற்றார்.

புனிதவதியார் கண்ட பரமேஸ்வரன் உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, புனிதவதியார் பக்தியில் மனம் மகிழ்ந்து உலகிற்கு அம்மையும் அப்பனும் ஆன பரமேஸ்வரன் ஓடிவந்து அவரை நோக்கி, “அம்மையே வருக” என்று அழைத்தார்.

அது கேட்ட புனிதவதியார் “அப்பா” என்று சொல்லிக்கொண்டு பரமேஸ்வரன் திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, “உனக்கு வேண்டும் வரம் யாது” என்று வினாவினார்.

புனிதவதியார் வணங்கி நின்று, “சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்.” என்று விண்ணப்பஞ்செய்தார்.

சுவாமி அவரை நோக்கித் “தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு” என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்றார்.

சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, “கொங்கை திரங்கி” என்னும் மூத்த திருப்பதிகத்தையும், “எட்டியிலவமீகை” என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

அம்மையார் எழுதியுள்ள நூல்கள்:

காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும் இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே.

தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே பரமேஸ்வரன் “அம்மையே” என்று அழைத்ததை இணைந்து “காரைக்கால் அம்மையார்” என்று அறியப்படும் இவர் இயற்றிய பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

இறைவனின் பெயர்கள்:

தனது பாடல்களில் இறைவனுக்கு பல பெயரிட்டு வழங்குகிறார் காரைக்கால் அம்மையார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், என் நெஞ்சத்தான், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், பரமேஸ்வரன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன், ஏகாம்பரநாதர், சதாசிவம், அப்பா என்று பல. ஆனால் சைவ சமயம் என்ற சொல்லுக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லே அம்மையாரது பாடல்களில் காணப்படுகிறது.

மாங்கனித் திருவிழா:

மாங்கனித் திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்வை நினைவு கூறுமுகத்தான், காரைக்கால் கோயிலில் மாங்கனி திருவிழா இன்றளவும் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − three =

Most Popular