Monday, October 23, 2023
HomePurana Kathaigalகாதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - பட்டினத்தார்

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே – பட்டினத்தார்

கப்பல் கப்பலாய் திரவியம் கொண்டு வருவான் திரைகடல் ஓடிய மகன் மருதவாணன் என்று ரொம்பவும்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருவெண்காடர்.ஆனால், மருதவாணன் கப்பல் நிறைய எரு மூட்டைகளையும் தவிட்டு மூட்டைகளையுமாகக் கொண்டு வந்ததைப் பார்த்து துக்கித்துப் போனார்.

ஆத்திரத்துடன் மகனைப் பிடித்தார். ‘‘என்ன இது?’’ என்று கோபம் கொப்புளிக்கக் கேட்டார்.‘‘பிரித்துப் பாரும்’’ என்று அலட்சியமாகச் சொன்ன மகன் அங்கிருந்து புறப்பட்டான்.இத்தனைக்கும் மருதவாணன், திருவெண்காடரின் சொந்த மகனல்ல. வளர்ப்பு மகன்.

அவன்தான் இப்படிக் கப்பல் முழுக்க வரட்டியையும், தவிட்டு மூட்டைகளையும் கொண்டு வந்திருக்கிறான்!ஆத்திரமுற்ற திருவெண்காடர், ஒரு வரட்டியை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தார்.உள்ளிருந்து ரத்தினக் கற்கள் தெறித்து வந்து விழுந்தன. இப்படியே ஒவ்வொரு வரட்டியிலும்! தவிட்டு மூட்டை முழுவதிலும் பொன் துகள்கள்!

தம் வணிகப் பரம்பரையின் பெயர் விளங்க வந்த பிள்ளை என்ற உற்சாகத்தில் மகனைத் தேடிக் கொண்டு வீட்டிற்குப் போனார். அங்கே, மனைவி ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தாள். அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. அப்படி எழுதிக் கொடுத்துவிட்டு மருதவாணன் எங்கோ மாயமாய் மறைந்தவாணனாகி விட்டான்.

சுரீரென்றது திருவெண்காடருக்கு. உண்மைதானே! போகும்போது எதை எடுத்துச் செல்லப் போகிறோம்? உயிர் உடலை, நீங்கும் போது அதுவரை குடி
யிருந்த உடலையும் அப்படியே விட்டுவிட்டுத்தானே போகவேண்டும்? வேறு எதைத்தான் அது கொண்டு செல்ல முடியும்?மனசிலிருந்த ஆசாபாசங்கள் கழன்று ஓட, உடலிலிருந்து ஆடைகளும் கழன்று வீழ்ந்தன. நாகரிகம் கருதி கோவணம் மட்டுமே அணிந்த அவர், அன்றே மனைவி, உற்றார், உறவினர், சொத்து, திரவியம் அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

துறவியாய்ப் போனவன் மீண்டும் சொத்து நாடி வரலாமோ என்ற ஐயத்துடன் அவருடைய ஒரே தமக்கை அவருக்கு விஷம் பொதிந்த பணியாரம் ஒன்றைத் தந்து அனுப்பினாள். சூட்சுமம் புரிந்து கொண்ட, இப்போது பட்டினத்தாராகிவிட்ட திருவெண்காடர், அந்த பணியாரத்தை தமக்கையின் வீட்டு ஓலைக் கூரை மீது எறிய, கூரை ‘குப்’பென்று தீப்பற்றி எரிந்தது. அதோடு, தனக்கும் தன்னுடைய சொத்துகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டார்.

துறவிக்கு சொந்தமில்லை, பந்தமில்லை என்ற நியதியைத் தன் தாயைப் பொறுத்தவரை உடைத்தெறிந்தார் பட்டினத்தார். பந்தம் எல்லாவற்றையும் அறுத்தெறிந்தாலும் பூவுலக பந்தம் விட்டுச் செல்லும் தாய்க்கு மகன் இறுதிக்கடன் செய்ய வேண்டியது கடமை என்றுணர்ந்தார்.

அதனால்தான் யார் உதவியும் இல்லாமல் பச்சை வாழை மரங்களை எரிய வைத்து தாயின் சிதைக்கு தீ மூட்ட அவரால் முடிந்தது.பட்டினத்தார் சென்னை திருவொற்றியூரில் கடற்கரை மணலில் உயிரோடு புதைந்து அப்படியே சமாதியாகி விட்டதாகவும், பிறகு சுயம்பு லிங்கமாக அவர் வெளியே வந்ததாகவும் கூறுகிறார்கள். பட்டினத்தார் ஜோதிமயமாக இறைவனுடன் ஐக்கியமானார் என்றும் சொல்வார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =

Most Popular