காவிரிக்கும் லோபமுத்ராவிற்கும் சம்பந்தம் இருக்கிறது.

289

இந்தியாவில் பாயும் புனித நதிகளுள் காவிரியும் ஒன்று. தென் இந்தியர்களால் மிகவும் போற்றப்படும் நதி என்பதோடு மட்டுமல்லாமல் பெண் தெய்வமாகவே பார்க்கப்படுகிறாள் காவிரி. குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகி பின் அகண்டு விரிந்து, பெயருக்கு ஏற்றபடியே தான் பாயும் இடம் எங்கும் சோலைகளையும் காடுகளையும் செழித்து விரித்துச் செல்கிறாள் காவிரி.

இதென்ன லோபமுத்ராவைப் பற்றிக் கூறாமல் காவிரி ஆற்றைப் பற்றி கட்டுரை விரிகிறது? ஆம். காவிரிக்கும் லோபமுத்ராவிற்கும் சம்பந்தம் இருக்கிறது.

லோபமுத்திரை எனும் லோபமுத்ரா அகத்திய முனிவரின் பத்தினியும், ரிக்வேத கால பெண் முனிவரும் ஆவார்.

லோபாமுத்திரை என்பதற்கு, லோபத்தை அளிப்பவள், அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள் எனப் பொருளாகும். இவளே காவிரி நதியாக அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து பாய்கிறாள்.

வேதகால இலக்கியங்களின்படி, ரிக் வேத காலத்தில் (கிமு 2600–1950) வாழ்ந்தவள் லோபமுத்திரை. பெண் வேத மெய்யிலாளர்களுள் ஒருவர். ரிக் வேதத்தில் லோபமுத்திரையின் மந்திரங்கள் உள்ளது.

வேதகாலத்தில் விந்திய மலைக்கும் மகா மேருவுக்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டியில். மேருவை விட உயர்ந்து வளர ஆரம்பித்தது விந்திய மலை. சூரியனையே மறைக்கும் அளவுக்கு விந்திய மலை உயர்ந்துவிட்டது.

உலகம் முழுதும் விந்தியமலையின் நிழல்களால் சூழப்பட்டு, சூரிய ஒளி இல்லாமல் போய்விட்டது. சூரியன் செய்வதறியாது திகைத்தது. சூரியன் எவ்வளவு உயரமாகச் சென்றாலும், விந்தியமலை அதை விட உயர்ந்து, சூரிய ஒளியை மறைத்தது. மக்கள், மிருகங்கள் மற்றும் காடுகள் அனைத்தும் விந்தியமலையை உயரமாக வளர்வதை நிறுத்தும்படி வேண்டியும், விந்திய மலை காது கொடுத்துக் கேட்கவில்லை. கடவுளர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. செய்வதறியாது, மிகவும் சக்தி வாய்ந்த அகத்திய முனிவரிடம் சென்று, உதவ வேண்டினர்.

அகத்திய முனி விந்திய மலைக்குச் சென்று, தான் தெற்கு நோக்கிச் செல்ல இருப்பதால், விந்திய மலையைக் குனியும் படிக் கேட்டார். அகத்தியர் கடந்து சென்ற பிறகு, தான் மீண்டும் திரும்பி வரும் வரை இப்படியே குனிந்த நிலையில் விந்திய மலையை இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

விந்திய மலையும் அந்த உயரத்திலேயே அகத்திய முனி திரும்பி வரும் வரை இருப்பதாக உறுதிமொழி அளித்தது. தெற்கே வந்த அகத்திய முனி, தெற்கிலேயே தங்கி விட்டார். இதனால், விந்திய மலையைச் சுற்றி உள்ள மக்கள் அனைவரும் ஆனந்தமடைந்தார்கள்.

இது இப்படி இருக்க, தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த அகத்தியர் ஒரு கானகத்தைக் கடக்கும் வழியில் அங்கிருந்த மரத்தில் சிலர் தலைகீழாக வௌவால்களைப் போல் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

கும்பத்தின் அளவே இருந்தாலும் அகத்தியர் யோகத்திலும் தவத்திலும் சிறந்த மாமுனி அல்லவா. அவர்களைப் பார்த்தவுடன் அவருக்கு வணங்கத் தோன்றியது. அவர்களை வணங்கிய அகத்தியர் அவர்களிடம் ‘நீங்கள் யார், ஏன் இப்படி தலைகீழாக தொங்கி அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை என் தவ வலிமையால் நேராக்கி விடுவிக்கிறேன்’ என்றார்.

‘அகத்தியா உன்னால் உன் தவ வலிமையைக் கொண்டு எங்களை விடுவிக்க முடியாது’ என்றவுடன் அகத்தியர் திடுக்கிட்டார். தன்னை இத்தனை உரிமையுடன் பெயர் சொல்லி அழைக்கும் இவர்கள் யார், இவர்களை எனக்கு வணங்கத் தோன்றியதே என்று யோசித்து, தன் ஞானக் கண்ணால் அவர்கள் தன் மூதாதையர்கள் என்பதை உணர்ந்து கொண்டார். பின் அவர்களிடம் அவர்களை அந்நிலையிருந்து விடுவிக்கும் மார்க்கம் என்ன என்று கேட்டார்.

‘எங்களுக்கு பித்ரு காரியம் செய்து வைக்க உன் குலம் தழைக்க வாரிசு எதுவும் இல்லாததால் மோட்சம் கிடைக்காமல் இவ்வாறு தலைகீழாகத் தொங்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீ திருமணம் செய்து கொண்டு சத்புத்திரனை பெற்றுக் கொண்டால் மட்டுமே, அவன் மூலமாக பித்ரு காரியங்கள் நடைபெற்றால் மட்டுமே எங்கள் ஆத்மா சாந்தியடைந்து சொர்க்க லோகம் புக முடியும்’ என்று கூறிவிட்டனர்.

தான் திருமணம் செய்து கொண்டு சத்புத்திரனைப் பெற்று அவர்களுக்கு மோட்சம் கிடைக்க வழி செய்வதாக வாக்களித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் அகத்தியர். அகத்தியர் தயாரானால் போதுமா? அவருக்குப் பெண் கிடைக்க வேண்டாமா? அங்கே தான் சிக்கல் உருவானது. உலகமெங்கும் தேடியும் அகத்தியருக்குப் பொருத்தமான பெண் அமையவில்லை.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் விஷயம் என்பார்கள். இன்னாருக்கு இன்னார் என்பதும் இறை சித்தமே. தனக்கு ஏற்ற ஒரு பெண் கூட பூவுலகில் இல்லை என்பதை ஞான திருஷ்டியால் அகத்தியர் உணர்ந்து கொண்டார். அதனால் தன் தவ வலிமையைக் கொண்டு உலகில் உள்ள உயிரினங்களின் அழகான உடல் பாகங்களை தேர்வு செய்து, பார்த்துப் பார்த்து பிரத்தியேகமாக ஒரு பெண் குழந்தையை மானசீகமாக சிருஷ்டித்தார்.

அதே சமயம் விந்திய மலைப் பகுதியில் விதர்ப நாட்டு அரசன் காவேரா (விதர்ப ராஜன்) தனக்கு குழந்தை வரம் வேண்டி பிரம்மாவை பிரார்த்தித்தான். அதற்கு தகுந்தாற்போல், அகத்திய முனிவருக்குத் தான் உருவாக்கிய குழந்தையை கருவாய் சுமந்து பேணிக் காத்து வளர்த்து வர ஒருவர் தேவைப்பட்டது. இந்த சிக்கலைத் தீர்க்கவே, விஷ்ணுமாயா என்ற பெயருள்ள பிரம்ம தேவனின் மகள் பூமியில் பிறந்து மனித இனத்திற்குச் சேவை செய்ய விரும்பியதாக கருதப்பட்டது.

பிரம்மாவின் அருளால், விஷ்ணுமாயா என்ற அவரது மகளே காவேரா அரசருக்கு லோப முத்திரா என்ற மகளாகப் பிறந்தாள். அகஸ்திய முனிவர் உருவாக்கிய குழந்தையின் அம்சமாக அவள் பிறந்தாள். மனித குலத்திற்குச் சேவை செய்யும் விஷ்ணுமாயாவின் எண்ணம் அப்படியே மாறாமல் உள்ளத்திலே கொண்டுள்ள ஒரு அழகான பெண்ணாக லோபமுத்திரா வளர்ந்து வந்தாள்.

லோபமுத்ரா குழந்தைப் பருவத்திலேயே கடவுள் பக்தி நிறைந்தவளாகவும், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபாடு கொண்டவளாகவும், விரதங்களை மிகச் சரியாக கடைபிடிக்கும் திட சித்தம் உடையவளாகவும் இருந்தாள். ஆரம்பத்தில் விதர்ப மன்னனுக்கு தன் மகள் இவ்வாறு இருப்பதில் மிகுந்த ஆச்சரியம் இருந்தது. அவள் பிரம்ம புத்திரியின் அம்சமாக சிரேஷ்ட முனி அகத்தியரால் படைக்கப்பட்டவள் அல்லவா அதனால் அவள் சாதாரண இளவரசிகளில் இருந்து மாறுபட்டவளாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். லோக ஷேமத்திற்காக தன் மகள் படைக்கப் பட்டவள் என்பதே அவனுக்கு மிகுந்த பெருமையாக இருந்தது.

குழந்தை வளர்ந்து குமரியானாள். ‘லோப முத்ரா’என்றால் உலக அழகு அவ்வளவையும் தன் வசம் பெற்றிருப்பவள் என்றும் ‘அழகை கவர்பவள்’ என்றும் பொருள் உண்டு. பெயருக்கு ஏற்றபடியே அவள் அளப்பறிய அழகோடும் அற்புத குணத்தோடும் வளர்ந்திருந்தாள்.

லோபமுத்ரா பருவ வயதை அடைந்தது கண்டு அவளை மணம் செய்து கொள்ள அகத்தியர் விதர்ப மன்னனிடம் பெண் கேட்டு வந்தார். தன் மகள் பிறப்பின் காரணம் புரிந்தும் மன்னனுக்கு அழகும் அறிவும் ஒருங்கே பெற்ற தன் பெண்ணை, வயதில் மிக மூத்தவரும் உயரத்தில் மிக குறைந்தவருமான அகத்தியருக்கு மணம் செய்து வைக்க மனம் வராமல் யோசித்தான். ஆனால் லோபமுத்ரா சற்றும் யோசியாமல் அகத்தியரை முழுமனதுடன் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாள்.

அவள் அகத்தியரின் புற அழகைப் பார்க்கவில்லை. அவரின் தவ சக்தியும் அவர் பெற்றிருந்த பிரம்ம ஞானமுமே அவளுக்கு அழகை விட சிறந்த விஷயங்களாகப் பட்டன. பதின் வயதிலேயே இத்தனையும் யோசித்து வாழ்க்கைக்கு தேவையானது எது என்பதில் தெளிவாக இருந்தாள்.

இருவரும் திருமணம் முடிந்து அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அகத்தியருக்கு வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் சிரத்தையாகச் செய்தாள் லோபமுத்ரா. எதிலும் அவருக்கு குறை வைக்கவில்லை. ஒரு சமயம் பயணத்தின் போது அகத்தியர் நோய்வாய்ப்பட்டு, மயக்கமாகி விட்டார். உதவிக்கு ஒருவரும் இல்லாததால், ஆசிரமத்திற்கு அவரைத் தனியாகவே தூக்கிச் செல்ல வேண்டிய நிலைமை லோபமுத்ராவுக்கு நேர்ந்தது.

அகத்தியரின் கால் கீழே தொங்கிக் கொண்டிருக்க அவரை தூக்கிக் கொண்டு இருளில் தங்களது ஆசிரமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் லோபமுத்ரா. அச்சமயம் அகத்தியரின் ஆடிக் கொண்டிருந்த கால் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஞானியின் மேல் பட்டுவிட்டது. கடும் கோபத்தில், – ‘இன்றைய சூரிய உதயத்தின் போது, என் மேல் மோதிய காலின் சொந்தக்காரர் இறந்து போகக்கடவது’ என அந்த ஞானி சாபம் இட்டுவிட்டார்.

தெரியாமல் செய்த பிழை என்று எடுத்துக் கூறியும், வணங்கி மன்னிப்பு கேட்டும் அவசரத்திலும் ஆத்திரத்திலும் கடும் சாபமிட்ட ஞானியின் மேல் லோபமுத்ராவிற்கு கோபம் வந்துவிட்டது.

அவளுக்கு இது முற்றிலும் அநியாயமான சாபம் என்று தோன்றியது. உண்மையில் முனிவரைத் தூக்கிக் கொண்டு சென்றது லோபமுத்திரா. அத்துடன் ஞானியை வேண்டுமென்றே இழிவு படுத்தும் எண்ணத்துடன் இதைச் செய்ய வில்லை. ஆகையால், லோபமுத்திரா உரக்க சபதமாக முறையிட்டாள் – ‘கணவருக்குப் பணிவிடை செய்யும் உத்தம மனைவியாக நான் இருந்தால், சூரியன் உதயமாகக் கூடாது’.

சூரியனும் உதயமாகவில்லை. உலகம் இருளால் சூழ்ந்தது. தேவர்களும் கடவுளர்களும் லோபமுத்ராவின் சபதத்தை திரும்பப் பெற வேண்டினார்கள். என் கணவனின் உயிர் போக்கும் சாபத்தை திரும்பப் பெற்றால் தானும் தனது சபதத்தை திரும்பப் பெறுவதாகக் கூறினாள் லோபமுத்ரா. அதன்படியே நடக்க சூரியனும் உதித்தான் அகத்தியரும் சாபத்தில் இருந்து மீண்டார். அநியாயமான சாபத்தை ஏற்காமல் போராடி வெல்லும் சக்தியை அவள் பெற்றிருந்தாள்.

லோபமுத்ரா அகத்தியர் தம்பதிகளுக்கு ஆண் மகவு பிறந்தது. எல்லா பிள்ளைகளையும் போல, பத்து மாத கர்ப்பத்தில் பிறக்கும் சாமான்ய குழந்தையாக அது இல்லை. ஏழு பிறப்பு என்னும் பிறவிக் கணக்குக்கு ஏற்ப ஜனித்து முக்தி பெறாமல் தவிக்கும் அகத்தியரின் முன்னோர்கள் அனைவரும் நற்கதியடைவதற்காக, கருப்பையில் ஏழு வருடம் வளர்ந்தது. எவரிடமும் காணாத தேஜசுடன் ஜொலித்ததன் காரணமாக ‘த்ருடஸ்யு’ என்ற பெயரைச் சூட்டினார் அகத்தியர்.

வேதம் இதிகாச, புராணங்களில் மூன்று இடங்களில் லோபமுத்திரை பற்றிய செய்திகள் உள்ளது. ரிக் வேத மந்திரங்களிலும், மகாபாரத இதிகாசத்தில், வன பர்வத்தின் சில அத்தியாயங்களிலும் லோபமுத்ராவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

பரபிரம்மத்துடன் இணைந்த பராசக்தியை, ஸ்ரீ வித்யாவாகவும், அன்னையின் மந்திரத்தை ஸ்ரீ வித்யை எனவும், அன்னையின் சக்கர வடிவத்தை ஸ்ரீ சியாமளசக்கரம் எனவும், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம, ஸ்ரீலலிதா திரிசதி, ஸ்ரீ காயத்திரி, ஸ்ரீ பஞ்சதசாட்ஷரி ஆகிய மந்திர ரூபமாகவும், யோகசித்தாம்ச வடிவில் துவாதசாந்தப் பெருவழி ஜோதி வடிவாயும் இருப்பவளாகும்.

இதனைக் கண்டுணர்ந்து உலகிற்கு உணர்த்தியவர்கள் பன்னிருவர். அவர்களுள் வாக்தேவதைகளுள் ஒருத்தி தான் அகத்தியரின் பத்தினி லோபமுத்ரா.

வேதத்தில் லோபாமுத்திரை 179 மந்திரங்களைப் படைத்துள்ளாள். அகத்தியருடன் இணைந்து லோபாமுத்ரா லலிதா சகஸ்ரநாமத்தை பரத கண்டம் முமுவதும் பரப்பினாள்.

லோபமுத்ரா அன்பே உருவானவள். தன் குழந்தைக்கு தாயாகும் முன்பே இந்த ஜகத்துக்கே தாயன்பு செலுத்தியவள். அவளால் ஒருவரையும் வெறுக்க முடியாது. அழகில் சிறந்தவளாக இருந்த போதும், தன்னை விட மூத்தவரான, குள்ளத் தோற்றம் உடைய அகத்திய முனியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவள். அகத்தியரை புற அழகைக் கொண்டு காணாமல் அவரை ஞானத்தில் சிறந்தவராகவும், மெய்ப்பொருள் உணர்ந்தவராகவும், அறிவின் சிகரமாகவும் வேதங்களில் கரை கண்ட வித்தகராகவுமே உணர்ந்தவள்.

லலிதா சஹஸ்ர நாமத்தை அன்னை ஜகன் மாதாவிடமே கற்றுக் கொண்ட பெரும் பாக்கியம் பெற்றவள் லோபமுத்ரா.