Friday, October 27, 2023
HomePurana Kathaigalகுன்றக்குடி முருகன் கோவில் வரலாறு!

குன்றக்குடி முருகன் கோவில் வரலாறு!

மயில் உருவத்தில் உள்ள மலையில் அருள் பாலிக்கும் குன்றக்குடி முருகன் கோவில் வரலாறு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம். பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டியில் இருந்து 5 கிமீ தொலைவில் இருக்கின்றது குன்றக்குடி என்றும் சொல்லலாம் . குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப ஒரு சிறிய குன்றில் இங்கு முருகன் வீற்றிருக்கிறார்.

அண்ணன் பிள்ளையாரும் தம்பி முருகனும் அருகருகே வீற்றிருக்கும் புகழ்பெற்ற இரண்டு கோவில்கள் தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் இருக்கிறது. சரி இந்த கோவில் வரலாற்றை பற்றி பார்ப்போம்…

ஆலயத்தின் வரலாறு:

குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது குன்றக்குடி . இக்கோவிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே, மயில் உருவம் போன்று காட்சியளிப்பது தான். முருகப்பெருமானின் வாகனமான மயில், அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி.

ஒரு முறை அசுரர்கள், முருகப்பெருமானின் மயிலிடம், “நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள்,மேலும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன” என்று பொய் கூறினர். இதைக் கேட்டு உண்மை என்று நம்பிய மயிலும், கண் மூடித்தனமாக கோபம் கொண்டு பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.

பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் இது குறித்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார். தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாகிப்போனது. ஆறுமுகப் பெருமானைக் குறித்து மலையாக இருந்த படியே தவம் இருந்தது.மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு.

திருவிழாக்கள்:

இந்த ஆலயத்தில் விசேஷமாக காவடி வழிபாட்டை சொல்லலாம். இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். அருணகிரிநாதரின் பாடல் பெற்ற இந்த திருதலத்தில்,10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவும், 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் தைப்பூசத் திருநாளும் சிறப்பு வாய்ந்தது.

பலன்கள்:

வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. சிவகங்கை மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு ஒரு முறை முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை,குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியது என்கிற வரலாற்று செய்தி இந்த தலத்தில் உள்ள இறைவனின் பெருமையை நமக்கு பறைசாற்றும்.

மேலும், இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர்.மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =

Most Popular