மார்க்கண்டேய புராணம் – பகுதி 1

943

வபுஸ் எனும் அப்சரஸ்

முன்னொரு காலத்தில் தேவேந்திரன் அப்ஸரப் பெண்களுடன் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருக்க, அவ்விடம் நாரதர் வந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற தேவேந்திரன் அவர் அந்தப்பெண்களை நடனமாட அனுமதிப்பாரா என்று கேட்டார். அப்போது நாரதர் இப்பெண்களில் அழகிலும், ஆடல்களிலும் சிறந்தவள் யாரோ அவள் ஆடட்டும் என்றார். ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று கூறினர். அவர்களில் யார் சிறந்தவள் என்பதையும் நாரதரே கூறவேண்டும் என தேவேந்திரன் வேண்டினான். நாரதர் அதற்கான தேர்வு ஒன்றைக் கூறினார். வடக்கே இமயமலைச்சாரலில் தவம் செய்து கொண்டிருக்கும் துருவாச முனிவரை மயக்கி மோகவலையில் விழச் செய்பவளே சிறந்த அழகியாவாள் என்றார். துர்வாசர் பெயரைக் கேட்டவுடன் மற்றவர்கள் பின்வாங்க, வபுஸ் என்னும் அப்சரஸ் மட்டும் அதனை ஏற்றுச் சபதம் செய்து கிளம்பினாள். கிளம்பிய வபுஸ் துர்வாச முனிவரின் ஆசிரமத்திற்குச் சற்று தொலைவில் இறங்கி பரிமளத் திரவியங்களைப் பூசிக்கொண்டு, அழகிய ஆடை அணிகளுடன் ஆடிப் பாடலானாள். இதனால் தவம் கலைந்த துர்வாசர் கோபமுற்று அவளைப் பதினாறு ஆண்டுகள் பறவையாகப் பறந்து திரியுமாறு சாபமிட்டார். வபுஸ், முனிவர் திருவடிகளில் விழுந்து வணங்கி, தனக்குச் சாபவிமோசனம் அளிக்க வேண்டிட முனிவர் பாரதப்போரில் அர்ச்சுனன் பாணத்தால் அடிபட்டு பாபவிமோசனம் அடைவாய். என்றும், உனக்கு ஞானிகளான நான்கு புதல்வர்கள் பிறப்பார்கள் என்றும் கூறினார்.

தொடரும்…

ஓம் ம்ருத்யுன்ஜெய லிங்கமே போற்றி!