மதுரை மீனாட்சி அம்மன் கதை!
மதுரையை ஆண்டுவந்த மலையத்துவஜன் என்ற பாண்டிய மன்னனும், இவரது மனைவி காஞ்சனமாலையும் குழந்தை பாக்கியத்துக்காக பார்வதி, பரமசிவனை வேண்டி யாகம் நடத்துகின்றனர். மனமிரங்கிய பார்வதி தானே 3 வயதுப் பெண் குழந்தையாக நெருப்பில் இருந்து வந்து காஞ்சனமாலையின் மடியில் வந்து விழுகிறாள்.
குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து போன அரசனும், அரசியும் அந்தக் குழந்தை மூன்று ஸ்தனங்களுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது வானில் தோன்றிய அசரீரி இவளை ஒரு ஆண்பிள்ளை போல வளர்த்து பட்டத்து ராணியாக முடி சூட்டுங்கள். மணப் பருவம் வந்த உடன் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறது.
மீனாட்சி ஆணுக்கு நகரான அனைத்து வகைபோர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்நடக்கிறது. மூன்று தனங்களுடன் பிறந்த மீனாட்சி, எந்த மன்னனைப் பார்க்கும் போது ஒரு தனம் மறைகிறதோ, அவரையேதிருமணம் செய்து கொள்வார் என்று மலையத்துவஜ மன்னன் கூறுகிறான். பட்டாபிஷேகதிற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார் மீனாட்சி.
பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார். அவ்வாறு கிழக்கு திசையில் அவர் சென்றபோது, அமராவதி நாட்டின் மன்னனான இந்திரன் மீனாட்சியுடன் போர்செய்கிறான். ஆனால் மீனாட்சியின் வீர பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்காமல் பணிகிறான். இப்படி ஒவ்வொருதிசையிலும் போர் தொடுத்து அனைவரையும் தன் காலில் விழச் செய்கிறார் மீனாட்சி. இதேபோல, கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் மீனாட்சி.
அங்கு குடியிருக்கும் சிவபெருமான்மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால், உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார். படையுடன்வீரம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி. எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில்வெற்றி வேட்கை குறைந்து வெட்கம் முடி சூடுகிறது. சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் இருந்த வாளைகீழே போட்டு விட்டு தலை குனிகிறார்.
அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மனாளனைக் கண்ட பூரிப்பில் ஆழ்ந்து நிற்கிறார்அன்னை. அப்போது சிவபெருமான், “அங்கயற்கண்ணியே நீ என்று மதுரையம்பதியை விட்டு படையுடன் கிளம்பினாயோஅன்றே நானும் உன்னைப் பின்தொடர ஆரம்பத்து விட்டேன். இன்றுதான் உன்னை நேரில் காண்கிறேன். இனிமேல்நீயே என் துணைவி” என்று கூறவே அன்னையின் முகம் வெட்கத்தால் சூரியனைப் போல சிவந்தது. அன்றேஅன்னையின் கரம் பிடித்தார் எம்பெருமான்.
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக் கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.
1877-ல் நடந்த கும்பாபிஷேகம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1877-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதுகுறித்து டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் தனது நினைவுகளை எழுதியுள்ளார். அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்தார்கள். கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மதுரைக்கு அன்றைய தினம் வந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர், சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் ஆகியோர் வந்திருந்தனர்.
நகரத்தில் எள் போட்டால் விழ இடமின்றி ஜனங்கள் நிறைந்திருந்தனர்.
கும்பாபிஷேகம் நடக்கும்போது கோயிலுக்குள் சென்றவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே தக்கவர்களுக்கு மட்டும் சீட்டு அளித்து உள்ளே விட்டார்கள். அப்போது மதுரையில் கலெக்டராக க்ரோல் துரை என்பவர் இருந்தார். அந்த சமயத்தில் மதுரை திருக்கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக் கொண்டு கோயிலைச் சுற்றி அசுத்தப் படுத்தினர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் செய்வித்த வெங்கடாசலம் செட்டியார் என்பவர் அதுகண்டு மனம் வருந்தினார். நிவர்த்தி செய்ய முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. இதுகுறித்து மணி அய்யரிடம் தெரிவித்தார்.
அவர் மிக்க இரக்கமுடையவர். அவரிடம் செட்டியார், “”திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே. அதைச் சுற்றி ஜனங்கள் அசுத்தம் செய்கிறார்களே! இதைக்காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்,” என்று முறையிட்டு வந்தார். மணிஅய்யர் அவர் கூறுவதன் உண்மையையும், அவருடைய சிவபக்தியையும் உணர்ந்தார்.
உடனே க்ரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதில்புறத்தே இருந்தவர்களுக்கு வேறு இடங்கள் வாங்கித்தந்தும், வீடு கட்ட பணம் உதவியும், நிலத்திற்கு விலை தந்தும் அவர்களை திருப்தி செய்வித்தார். பின்னர் வசதியான இடங்களில் அவர்களை குடியேற்றி பாதுகாத்தார். பின்னர் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து இரும்பு வேலி போடச் செய்தார்..
கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி:
அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளை கண்களாலேயே பாதுகாப்பது போல காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை தெரியுமா!
மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். இவரது ஞானத்தை கண்ட திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மிக வாழ்க்கையை கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர்.
நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது.
திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார்.
ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் நடந்ததை தெரிவித்து கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, தீட்சிதர் உலகை ஈன்ற நாயகி மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார்.
மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.
ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம் ‘ என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.
எட்டுகாலம் எட்டு கோலம்: தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.
இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷாடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.
கிளி ஏந்திய காரணம்:
ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.
