கருநாகம் தீண்டி உயிர்விட வேண்டியவன் துளசி இலையால் உயிர் தப்பிய புராண கதையை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

348

சில சமயங்களில் நாம் செய்த புண்ணியங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு நல்லதை செய்துவிட்டு சென்று விடும். இறைவனுக்கு தேவை அவரிடம் ஆழ்ந்த பக்தி ஒன்று மட்டுமே அன்றி வேறு எதுவுமே இல்லை. இதை உணர்ந்தவர்கள் சிலர். உணராமல் தவிப்பவர்கள் பலர். துளசி இலையால் உயிர் வரம் பெற்ற ஏழை விவசாயி ஒருவரின் கதையை படித்தால் நீங்களே வியந்து போவீர்கள். இறைவன் மீது உங்களுக்கே அன்பு அதிகரித்துவிடும். வாருங்கள் கதைக்குள் போகலாம். ஒரு கிராமத்தில் தினமும் வயலுக்கு சென்று கீரைகளை கிள்ளிக்கொண்டு அதை சந்தையில் விற்று பிழைப்பு நடத்தும் ஏழைக் குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் அவன் தன் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். தன் வயலுக்கு கீரை பறிக்க போகும் பொழுது, அவ்வழியே முனிவர் ஒருவர் துளசி இலைகளால் மகா விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்து பூஜை செய்து கொண்டிருப்பார். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வது அவனுக்கு வழக்கமாக இருந்து வந்தது.

ஒரு முறை இதேபோல் அந்த முனிவர் மகாவிஷ்ணுவிற்கு பூஜை செய்வதை பார்த்துக் கொண்டே தன் வயலுக்குச் நடந்து சென்று கொண்டிருந்தான். வயலை அடைந்ததும், கீரை பறித்து கொண்டிருக்கும் போது இடையே துளசி இலைகளை கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவரின் நினைவு வரவே, அவன் எண்ணத்தில் இந்த யோசனை உதயமாகியது. நாமும் முனிவரை போல் மனித பிறப்பு தானே? ஆனால் இதுவரை கடவுளுக்கு நாம் எந்த பூஜையும் செய்தது இல்லையே என்று வருந்தினான். நம்மால் அந்த முனிவரை போல் விஷ்ணு விக்ரஹம் வைத்து வழிபட முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த துளசி இலைகளை பறித்து அந்த முனிவரின் பூஜைக்கு உதவி செய்வோமே!! என்று எண்ணினான். தன் வயலில் இருக்கும் துளசி செடியிலிருந்து துளசி இலைகளை பறித்து தான் பறித்த கீரை கட்டுகளுடன் சேர்த்து, கூடையை தலையில் சுமந்தவாறு நடக்க ஆரம்பித்தான். அவ்வழியே முனிவரின் குடிலை நோக்கி நடக்கலானான். தன் தலை மேல் இருக்கும் கீரை கூடையில் கருநாகம் ஒன்று இருப்பதை அவன் அப்போது அறியவில்லை. முனிவரின் குடிலை அடைந்ததும் அந்தக் கீரைகாரன் மகாமுனிவரை அணுகினான். முனிவர் இவனை கண்டவுடன் சற்று அதிர்ந்து போய் நின்றார். இந்த வியப்பிற்கு காரணம், கீரைக்காரனுக்கு பின்னால் நிழல் போன்று அருவமாக ஒரு உருவம் அவருக்கு தென்பட்டது தான். அதன்பின் அவருடைய ஞான திருஷ்டியில் அதைப்பற்றி அறிய நினைத்தார். அப்போது அவருக்குப் புலப்பட்டது, அவ்வுருவம் நிழல் உருவமான ராகுவின் உருவம் என்பது தெரியவந்தது. கீரை கூடையில் இருந்த கருநாகம் வேறு யாருமில்லை நிழல் கிரகமான நாகத்தின் அம்சமாக விளங்கும் ராகு பகவான் தான்.

உடனே அந்த மகாமுனி அந்தக் கீரைக்காரரிடம், ஐயா! உங்கள் தலை மேல் இருக்கும் கீரை கூடையை இறக்கி வைத்து விடாதீர்கள். இதோ 5 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று அவசரமாக தன் குடிலுக்குள் சென்றார். குடிலுக்குள் சென்ற முனிவர் சில மந்திர உச்சாடனம் செய்து அந்த ஏழை கீரைக்காரருக்கு பின்னால் இருக்கும் ராகுவை தன் சக்தியால் அழைத்தார். ராகு பகவானும் அம்முனிவரை நோக்கி அருள்புரிந்து என்னை அழைத்ததன் காரணம் என்னவோ? என்று வினவினார். அதற்கு முனிவர், ராகுபகவானே எதற்காக இந்த ஏழை விவசாயியை பின்தொடர்ந்து வருகிறீர்கள் என்று கேட்டார். ராகு பகவானும் அதற்கு விடை அளித்தார். முனிவரே!! விதிப்படி அந்த விவசாயியை நான் இன்று தீண்டி, அவன் ஆயுளை முடிக்க வேண்டும். ஆனால் எப்போதும் இல்லாமல் இன்று இந்த கீரைக்காரர் துளசி இலைகளுடன் பயணிக்கிறார். இதனால் என்னால் அவரை தீண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். மேலும், உங்களிடம் தன் தலையில் சுமந்து இருக்கும் துளசி இலைகளை கொடுத்த மறுகணமே அவனைத் தீண்டி உயிரை பறித்துவிட்டு பின்னர் நான் இங்கிருந்து சென்று விடுவேன் என்று கூறினார். முனிவருக்கு அந்த ஏழை விவசாயியின் மேல் கருணை ஏற்பட்டது. தான் செய்யும் பூஜைக்காக மிகுந்த ஆசை கொண்டு துளசி இலைகளை பறித்து வந்த அவனை எப்படியாவது காக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே ராகு பகவனிடன், ராகுவே இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார். ராகு பகவானும் முனிவரிடம், முனிவரே!! இத்தனை காலம் நீங்கள் செய்து வந்த பூஜையின் பலன்களை எல்லாம் அவனுக்கு கொடுத்துவிட்டால், அவனுக்கு இருக்கும் கால சர்ப்பதோஷம் விலகிவிடும். நானும் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் என்று கூறினார். என்னால் இந்த ஏழையின் உயிரை காப்பாற்ற முடியும் என்றால், நான் கட்டாயம் இதை செய்ய தயாராக இருக்கிறேன். என் பூஜை பலன்கள் முழுவதையும் அவனுக்கு தந்துவிடுகிறேன் என்றார். முனிவரின் பரந்த மனப்பான்மையை எண்ணி வியந்து ராகுபகவான் அங்கிருந்து மறைந்து சென்றார். கீரை கூடையில் இருந்த கருநாகமும் அக்கணம் காணாமல் போனது. நிகழ்ந்ததை ஏதுமறியாத அந்த ஏழை விவசாயி வெளியில் காத்துக் கொண்டிருந்தார். அவரை அணுகிய முனிவர், ஐயா! நீங்கள் இதுபோல் இனி தினமும் பூஜைக்காக துளசி இலைகளை பறித்துக் கொண்டுவந்து கொடுப்பீர்களா? என்று கேட்டார். அந்த ஏழை விவசாயி தன்னால் பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் அளித்த இந்த வரத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் அதை மகிழ்வுடன் ஏற்று, தன் இல்லம் நோக்கி நடந்து சென்றான். பார்த்தீர்களா? இறைவன் நம்மிடம் எதுவும் கேட்பதில்லை. நம்மால் முடிந்தவற்றை வைத்து முழு நம்பிக்கையுடன், பக்தியுடன் இறைவன் பால் அன்பு கொண்டு பூஜை செய்து வந்தாலே போதும். நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்பே இறைவன். அன்பே சிவம். அன்பே சகலமும் இதை உணர்ந்தவர்கள் எப்போதும் துன்பக்கடலில் மூழ்கி வருந்த தேவை இல்லை.