பூம்புகாரில் அருள்பாளிக்கும் பல்லவனேஸ்வரர் ஆலய புராணக் கதை!
நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் உள்ள காவேரிப்பூம்பட்டிணத்தில் அருள்பாளிக்கும் அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் புராணக் கதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்…
ஆலயத்தின் சிறப்பு:
இத்தலத்தில் அருள்புரியும் மூலவர் பல்லவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பிகை சௌந்தர்யநாயகி. இத்தலத்தின் தல விருட்சம் மல்லிகை, புன்னை மரமாகும்.
தீர்த்தம் ஜானவி, சங்கம தீர்த்தம், காவேரி.
இத்தலத்தின் புராணப் பெயர் பல்லவனேஸ்வரம் ஆகும். இது தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 10வது தலம்.
தல சிறப்பு:
இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பட்டினத்தார் அவதார தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 10 வது தேவாரத்தலம் ஆகும்.
இங்கு தலவிநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார். மூலஸ்தானத்தில் சிவன், பெரிய லிங்கமாக காட்சி தருகிறார். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. இதை “அடியார் உற்சவம்’ என்கிறார்கள். கொடிமரம் கிடையாது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது.
விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். மருதவாணராக பிறந்த சிவன், அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவ மூர்த்திகளாக இருக்கின்றனர்.
ஆலய அமைப்பு:
இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி, கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர்.
ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காவிரி, கடலுக்குள் புகும் இடம் என்பதால் “காவிரிபுகும்பட்டினம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது “பூம்புகார்’ என்றழைக்கப்படுகிறது.
புராணக் கதை:
முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.
இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.
ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில், “”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருந்தது.
அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. “”மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,” என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்’ என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.
பக்தர்களின் பிரார்த்தனை:
அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தாருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
