Saturday, October 14, 2023
HomePurana Kathaigalஅருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட பாம்பன் சுவாமிகள்!

அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட பாம்பன் சுவாமிகள்!

அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட பாம்பன் சுவாமிகள்

சங்கத் தமிழில் திருப்புகழை அருளிச் செய்த அருணகிரிநாதர் தனக்கு குருவாக முருகப்பெருமானே வரவேண்டும் என்று நினைத்தார். இதை அவர் கந்தர் அனுபூதியில், “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று பாடுகிறார்.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதியை ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்து, அருணகிரிநாதரைப் போலவே முருகனை எண்ணித் தமிழ்பாடும் ஆற்றலைத் தந்தருள வேண்டும் என்று முருகப் பெருமானிடம் மன்றாடி அந்த ஆற்றலைப் பெற்றார் ஒருவர். அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில், ‘உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.

இத்தனைப் பெருமைபெற்ற அவர் திருப்பெயர் குமரகுருபரதாசர். பாம்பன் சுவாமிகள் என்று பின்னாளில் பெரும் புகழ் பெற்றார்.

இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் தவ நிட்டையில் இறங்கி,35 நாட்கள் அருந்தவம் புரிந்த இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதால் தன்னுடைய பெயரை குமரகுருபரர் என்றே வைத்துக் கொண்டார்.“குமரகுரு தானே கொடுக்கும் நலம்” என்று முருகப் பெருமான் தனக்கு உபதேசம் செய்த நிகழ்வை ஸ்வாமிகள் கொண்டாடுகிறார்.

குமரகுருதாச சுவாமிகள், தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பாம்பன் என்ற பகுதியில் பிறந்தார். தந்தையின் பெயர் சாத்தப்பப் பிள்ளை. தாயின் பெயர் செங்கமலம். இவரது இயற்பெயர் அப்பாவு. துவக்கத்தில் உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றவர், முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். பாம்பன் சேதுமாதவ ஐயர் இவரின் முருக பக்தியை அறிந்தார். ஓர் விசயதசமி இளங்காலைப் பொழுதில் அக்னி தீர்த்தத்தில் மும்முறை மூழ்கி எழச் செய்து திருவாறெழுத்து மந்திரத்தை உபதேசித்து அருளினார். “வடமொழி கற்பாயாக” என உத்தரவும் இட்டார். அதனால் வடமொழியும் கற்றுத் தேறினார்.

அருணகிரிநாதரின் பாடல்களைச் சதா பாடுவார்.முருகப் பெருமானிடம் எல்லையற்ற பக்தி கொண்ட இவரை மிகவும் கவர்ந்த நூல் கந்தர் சஷ்டிக் கவசம். கந்தர் சஷ்டிக் கவசம் நூல் அமைப்பிலும் சந்தத்திலும் கொண்ட ஈடுபாட்டினால் பின்னாளில் சண்முக கவசம் என்னும் பாராயண நூலை முருக பக்தர்களுக்காக இயற்றித் தந்தார்.தமது 12, 13 வயதிலேயே மிகச் சிறப்பான முறையில் கவிபாடும் திறமையைப் பெற்றிருந்தார். நினைத்தவுடன் பாடலை இயற்றும் ஆசுகவியாகப் பிறந்த இவர் இயற்றிய மொத்த பாடல்களின் எண்ணிக்கை 6666.

“தமிழ் மொழியில் மட்டும் அல்லாது வடமொழியிலும் அபாரமான ஆற்றலைப் பெற்றிருந்தார். உபநிடதக் கருத்துக்களையும், சைவ சமய தத்துவங்களையும் இவர் சொல்லிக் கொண்டே வந்ததை நான் கேட்டிருக்கிறேன்” என்று திரு.வி.க. தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதை தம்முடைய முதல் பாடலில் பாம்பன் சுவாமிகள் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“வாழ்வுக்கும் வாழ்வாய வாழ்வினை

அளிக்கும்உன் மலரடி தியானிக்கவும்

அங்கையினி ல்நெல்லியங் கனிஎனத்

திருவருளை அடையவும் கருணை நல்காய்

அருமறை புகழ்ந்த திரு முருகசிவ

சரவணத்து ஆதியே அமரர் கோவே. ”

வேதங்கள் புகழ்கின்ற தேவர்களுக்கெல்லாம் தலைவனான என்னுடைய தேவனே! வாழ்வுக்கும் வாழ்வான வாழ்வினை நீ அளித்திருக்கிறாய். அந்த வாழ்வின் குறிக்கோளாக உன்னுடைய பதமலரை நான் தியானித்துக் கொண்டிருக்க வேண்டும். உன்னுடைய திருவருள்  உள்ளங்கையில் வைத்த நெல்லிக்கனி போல எனக்கு கிடைக்க வேண்டும்படி நீ அருள வேண்டும். பாம்பன் சுவாமிகளின் பாடலில், சைவ சமய தத்துவக் கருத்துக்கள் நிறைந்திருக்கும்.

ஸ்வாமிகள் வாழ்வில் நடந்த ஒரு அற்புத நிகழ்வு.சென்னை மருத்துவமனையில் “மன்ரோ வார்டில்” பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் குறித்த அருமையான தகவல் இது. 1923ஆம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி. சென்னை தம்பு செட்டி வீதியில் நடந்த சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் ஏறியது. கால் எலும்பு முறிந்தது. சுவாமிகள் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்தபோது பாம்பன் சுவாமிகளின் வயது 73. ஆங்கிலேய மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு, குணமடைவது கடினம் என்று கூறிவிட்டனர். ஆனால், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தை அன்பர்கள் பாடி வந்தனர்.

முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்தது. அந்நாள் மயூர வாகன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்வு நடந்து மூன்றாண்டுகள் கழித்து, 1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 மகா தேஜோ மண்டலசபை ஏற்படுத்தினார், ஸ்வாமிகள்.சண்முக கவசம், பஞ்சாமிருத வண்ணம், குமரகுருதாச சுவாமிகள் பாடல், ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்), திருவலங்கற்றிரட்டு (பல சந்தப் பரிமளம்), என பல நூல்கள் இயற்றினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

Most Popular