அருள்மிகு பாரியூர் கொண்டத்து மாரியம்மன் கோவில் வரலாறு!

99
அருள்மிகு பாரியூர் கொண்டத்து மாரியம்மன் கோவில் வரலாறு!

அருள்மிகு பாரியூர் கொண்டத்து மாரியம்மன் கோவில் வரலாறு!

ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது, கொண்டத்து மாரியம்மன் கோவில்.

ஆலய வரலாறு:

இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி, பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, “பாரியூர்” என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.

கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து அதன் உள்ளே குதித்தார். அந்த நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொண்டுத்தார் என்று வரலாறு.

பாரியூர் கொண்டத்து மாரியம்மன்:

கொங்குநாட்டில் பூ மிதித்தல் எனும் குண்டம் இறங்கும் விழா அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும். பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், கணக்கம்பாளையம் பகவதியம்மன், பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆகிய அம்மன்கள் புகழ்பெற்றவர்கள்.

பாரியூர் ஆலயத்தின் சிறப்பு:

அவர்களில் பாரியூர் கொண்டத்துக் காளியம்மனும் ஒருவர். பாரியூர் ஆலயத்தில் அமைந்துள்ள 45 அடி நீளம் ஐந்தடி அகலம் கொண்ட குண்டம் பிரசித்தி பெற்றதாகும். கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது, காஞ்சிக் கூவல் நாடு. இதில் அடங்கிய பழைமையான ஊர் பாரியூர் ஆகும். மூலவர், சில வடிவங்களின் அமைப்புகள் பலநூறு ஆண்டுகள் பழைமையானவை என்பதை உணர்த்துகின்றது.

ஆலயத்தின் வடிவமைப்பு:

இதனைக் கற்கோயிலாக 1942-ல், கோபி புதுப்பாளையம் முத்து வேலப்பர் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார். இதேபோல, 1990-ல் இக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கோபி-புதுப்பாளையத்தைச் சார்ந்த அடியார் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார். 72 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, ஆலயமே கம்பீரமாகக் காட்சி தருகிறது. ஆலயம் 240 அடி நீளம், 150 அடி அகலம் கொண்டு, விசாலமாக தெற்கு முகமாக அமைந்துள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது. வடக்கு வாயில், தடப்பள்ளி வாய்க்கால் அமைந்துள்ளது. அருகே கல்யாண விநாயகர் அமைந்துள்ளார். ஆலய வளாகத்தில், வன்னி விநாயகர், வரசித்தி விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளன. சப்தகன்னியர், பொன் காளியம்மன், விநாயகர், குதிரைவாகனம், அதையொட்டி முனியப்ப சுவாமி, பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். இவரை தீய சக்திகள் அழிக்கும் கடவுளாக வணங்குகின்றனர்.

காளியம்மனின் அழகு:

ஆலயத்தில் நடுநாயகமாக, கொண்டத்துக் காளி சன்னிதி அமைந்துள்ளது. சிங்க வாகனத்தில் அம்மன் அமைந்த நிலையில் உள்ளார். அதைச் சுற்றி கலைநயம் மிக்க 28 தூண்களுடன் கூடிய சுற்று மண்டபம் அமைந்துள்ளது. உள்ளே மகாலட்சுமி, சரசுவதி, ராஜ ராஜேஸ்வரி, பத்திரக்காளி சிலா வடிவங்களும் அமைந்துள்ளன. கருவறை முன்புறம் பிரம்மகி, சாமுண்டி வடக்கிலும், மகேசுவரி, கௌமாரி கிழக்கிலும், வராகி தெற்கிலும், வைஷ்ணவி, மகேந்திரி மேற்கிலும், கஜலஷ்மி அதனருகே கொண்டத்துக் காளி சிலையும் அமைந்துள்ளன.

கருவறைக்குள் கொண்டத்துக் காளியம்மன் அமர்ந்த கோலத்தில் வலது காலை குத்திட்டு, இடது காலை அசுரனை அழுத்தியபடி, வலது கரங்களில், சூலம், உடுக்கை, வாள், கிளி தாங்கி, இடது கரங்களில், தீச்சட்டி, கேடயம், மணி, கிண்ணம் ஆகியவற்றைத் தாங்கியும் வடக்கு முகமாகக் காட்சியளிக்கிறாள். காளியாக இருந்தாலும், அன்னை யின் வடிவம் சாந்தரூபியாகக் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவளே சேரன் படைத்தளபதிக்கு வீரவாள் வழங்கி வரம் தந்தவள்.

அருள்மிகு சின்னம்மன்:

கருவறை அருகே, அருள்மிகு சின்னம்மன் காட்சி தருகின்றாள். காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடை பெரும். 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்:

திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் இந்த திருகோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெரும். பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்த பூ மிதிப்பர். குண்டத்திற்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அன்னை ராஜராஜேஸ்வரியாக புஷ்பத்தேரில் எழுந்தருள்வாள். திருவிழாவில் சிறப்பம்சம் இதுவே. மேலும் நவராத்திரி திருவிழாவின் போது ஒன்பது நாட்களும் அம்பாள் வெவ்வேறு உருவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

சித்திரை திருவிழா மற்றும் பொங்கல் விமர்சிகையாக கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் ஆகும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள் அம்மனிடம் “வாக்கு கேட்டல்” முறையைக் கடைபிடிக்கின்றனர். அம்மன் சிலையின் இரு பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்திலிருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் அம்மனைச் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரிக்கின்றனர். திருவிழாவில் குண்டம் இறங்குதல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.