பரோபகாரார்த்தம் இதம் சரீரம்

447

மகாபாரத காலத்தில் மஜரத்வஜன் என்ற மன்னன் ரத்தினபுரி என்ற பகுதியை ஆண்டு வந்தான். அவன் பரம வைஷ்ணவன். தர்மத்தை தொடர்ந்து செய்வதற்கே புத்தரன் தேவை என்பதை உணர்த்தும் முகமாக இவனது மகன் தாம்ரத்வஜனும் தந்தையைப் போலவே வீரமும் பக்தியும் கொண்டவன்.

அந்த சமயத்தில் யுதிஷ்டிரர், அஸ்வமேத யாகம் செய்தார். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் தன் வசம் கொண்டு வருவதே இந்த யாகத்தின் நோக்கம்.
இதற்காக ஒரு குதிரையை நாடுதோறும் அனுப்புவர். அந்த நாட்டு மன்னன், இவர்களின் தலைமையை ஏற்க விரும்பாவிட்டடால் யார் குதிரைக்கு பாதுகாவலாக செல்கிறாரோ அவரை எதிர்த்து போரிட்டு குதிரையை கைப்பற்ற வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட தர்மனின் குதிரையை தாம்ரத்வஜன்.
குதிரைக்கு பாதுகாவலாக வந்த அர்ஜுனன் மஜரத்வஜனை எதிர்த்து போரிடப் போவதாக புறப்பட்டான். அப்போது அவனை தடுத்து நிறுத்திய பகவான் கிருஷ்ணர், மஜரத்வஜனது பெருமையும், அவனது பக்தியின் ஏற்றத்தையும்,
அவனது தர்ம செயல்களையும் போற்றிப் புகழ்ந்தார். அப்பேர்ப்பட்ட பரம பக்தனான, பரம தர்மவானான மன்னனை எதிர்த்து போரிட்டால், அந்த பக்தியும் தர்மமும் அவனைக் காக்கும். ஒரு சமயம் உனக்கு தோல்வி கூட நேரலாம் என்று எச்சரிக்கை செய்தார்.

கிருஷ்ணன் அப்படி அந்த மன்னனை தொடர்ந்து புகழ்வது அர்ஜுனனுக்கு பொறாமையையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது
என் அண்ணனை விட ஒரு சிறந்த தர்மவான் உண்டா?
என்னை விட ஒரு சிறந்த வீரன் உண்டா அப்படியானால் அதை நான் பார்த்து விட வேண்டுமே என்று கிருஷ்ணனிடம் கிண்டலாகக் கூறினான்.

அர்ஜுனனின் ஆணவத்தை போக்க வேண்டும் என்று தீர்மானித்த பகவான் க்ருஷ்ணர்,
தான் ஒரு பிராமணன் போலவும், அர்ஜுனன் தன் சிஷ்யன் போலவும் மாறுவேடம் பூண்டு
மஜரத்வஜன் அரண்மனையை அடைந்தார்கள்.

அரண்மனைக்கு வந்த அதிதிகளை க்ருஷ்ண பக்தர்கள் என்றுணர்ந்து ஆனந்தமாக வரவேற்று, அவர்களை அவர்கள் காலில் விழுந்து வணங்கி
உபசரித்தான் மஜரத்வஜன்.

பின்னர் அவர்களை உணவு உண்ண வேண்டி நின்றான்.

கிருஷ்ணனோ உணவு உண்ண மறுத்தார். ஏன் என்று மன்னன் காரணம் கேட்டபோது, அந்தண வேடத்திலிருந்த கிருஷ்ணர் அவனிடம் “மன்னா! நான் இந்த சீடனுடனும் என் மகனுடனும் காட்டு வழியே வரும்போது என் மகன் ஒரு சிங்கத்திடம் அகப்பட்டு விட்டான். அதனிடம் ”என்னை எடுத்துக்கொள். என் மகனை விட்டுவிடு” என்று வேண்டியும் மறுத்துவிட்டது.

”என்ன செய்தால் என் மகனை விடுவாய்?” என்று கேட்டதற்கு ‘எந்த மனிதனாவது, தன் முழு சம்மதத்துடன் தன் மனைவி ஒருபுறமும் மகன் ஒருபுறமும் நிற்க, தன்னை இரண்டாக அறுத்து அதில் வலப்பாகத்தை எனக்கு கொடுத்தால் உன் மகனை விட்டு விடுகிறேன் என்றது” என்றார்.

இப்படி ஒரு விபரீதமான
விஷயத்துக்கு யார் சம்மதிப்பார்கள்? அதிலும் அவர்கள் சம்மதித்தாலும் அவர்கள் மனைவியும் மகனும் எப்படி சம்மதிப்பார்கள்? எங்கள் பிள்ளையை நாங்கள் இறக்க வேண்டியதுதான்” என்று க்ருஷ்ணர் கூறினார்.

இதைக் கேட்ட மன்னனும் “அந்தணரே! வருத்தப்பட வேண்டாம்.
உங்கள் மனக்குறை நீங்கும்படி நானே என் உடலை தருகிறேன்.
பரோபகாரார்த்தம் இதம் சரீரம் என்று கூறுவார்கள். என்னுடைய உடலால் கிருஷ்ண பக்தரான உங்களுக்கு நன்மை ஏற்படுமானால் அதைவிட எனக்கு ஆனந்தம் வேறு எதுவும் இல்லை. இதுவே நான் பகவானுக்கு செய்யும் கைங்கர்யமாக எண்ணுகிறேன்.
என் மனைவியும் மகனும் இதற்கு சம்மதிப்பார்கள்” என்று அவர்கள் முன்னிலையிலேயே கூறினார்.

மஜரத்வஜன் உடலைத் தர சம்மதித்ததைக் கண்ட அவன் மனைவி, “அந்தணரே! மனைவி கணவனின் அர்த்தாங்கினி- அவன் உடலில் பாதி எனவே எனது உடலை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

கிருஷ்ண அந்தணரோ “மனைவி கணவனின் இடப்பாகத்திற்கு உரியவள். சிங்கம் கேட்பது மன்னனின் வலது பாகத்தை! எனவே இது முடியாது” என்றார்.

அப்போது தாம்ரத்வஜன் “ஆத்மாவை புத்ர நாமாஸி என்று வேதம் சொல்கிறது. மகன் தந்தைக்கு சமமானவன். என் உடலை எடுத்துக் கொள்ளுங்கள்” என வேண்டினான்.

அந்தண க்ருஷ்ணனோ முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அதற்கும் மறுத்து விட்டார்.
அர்ஜுனன் நடப்பதையெல்லாம் கடும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

இறுதியாக, தன் மனைவியையிம் மகனையும் சமாதானப்படுத்திய மஜரத்வஜன், பகவான் க்ருஷ்ணரின் திருநாமத்தை சொல்லியபடி கைகூப்பி த்யானித்து அமர்ந்தான். மன்னனின் உடலை அவன் மனைவியும் மகனுமே மேலிருந்து கீழாக அறுத்தனர். தலை பாதி அறுபட்டதும் மன்னனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.

கண்ணனின் மனது கல் மனது என்று எல்லோரும் சொல்வது தெரிந்தது தானே? பக்தர்களை கடைசி நிமிடம் வரை சோதித்துப் பார்ப்பது அவன் வழக்கம்.

எனவே மன்னனின் இடது கண்ணில் வரும் கண்ணீரை சுட்டிக் காட்டி,
“உனக்கு முழுமையாக இஷ்டம் இல்லை போலிருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டு இப்போது வருந்துகிறச்ய்.அப்படி இஷ்டமில்லாமல் வருத்தத்துடன் தரும் பொருள் வேண்டாம். நாங்கள் கிளம்புகிறோம்” என்றார்.

அப்போது மன்னன்,
“ஸ்வாமி! இஷ்டமில்லாததால் கண்ணில் கண்ணீர் வரவில்லை. வலியும் காரணமில்லை. எனது வலது புறம் உங்களுக்கு பயன் படுகிறது ஆனால் இடதுபுறத்தால் உங்களுக்கு பயன் இல்லாமல் போய்விட்டதே! உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று இந்த உடலின் இடப்பாகம் மட்டுமே வருந்துகிறது. அது வெறும் நெருப்புக்குத்தான் போகும். வலதுபுறம் செய்த புண்ணியத்தை இடதுபுறம் செய்யவில்லை. ” என்றான்.

இதைக் கேட்ட பின்பு அர்ஜுனனின் உள்ளம் உருகிவிட்டது. இப்பேர்பட்ட மன்னனை நாம் எதிரியாக நினைத்தோமே என்று எண்ணி பதறினான் அர்ஜுனன்.

” போதும் கிருஷ்ணா இந்த விளையாட்டு. இனிமேலும் இந்த உத்தம பக்தனையும் அவன் குடும்பத்தையும் சோதிக்காதே” என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்

அவன் கூறியதைக் கேட்ட பகவான் மகிழ்ந்தார். தர்ம ரூபமான மஜரத்வஜன் முன்னே, சங்கு சக்கரம் தாங்கி தன் ஸ்வயம்ப்ரகாச ரூபத்தில் காட்சி தந்தார். அவனது உடலைத் தொட்டார். அறுபட்ட உடல் சேர்ந்தது.

மன்னனும் அவன் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க கிருஷ்ணனை வணங்கி நின்றார்கள். பகவானும்,

“மஜரத்வஜா!
உன் பக்தியின் சிறப்பையும், உன் குடும்பத்தின் தர்மத்தையும் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டத்தான் இவ்வளவு கடினமான ஒரு நாடகத்தை நான் நடத்தினேன். பார்ப்பவர்கள் என்னை கடின மனது உடையவன் என்று கருதினாலும், என்னை தூஷித்தாலும் பரவாயில்லை. முடிவில் உன் தர்மத்தின் சிறப்பை உலகத்திற்கு எடுத்துக் காட்டி உன்னை வைரமாக ஜ்வலிக்க செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். என்றென்றும் உங்கள் அனைவர் மனதிலும் என் உருவம் நிலைத்திருக்கும்.
என்மேல் பக்தி பூண்டு வாழ்வாங்கு வாழ்ந்து முடிவில் நீங்கள் மூவரும் மோட்சத்தை அடைவீர்கள்”
என்று அருளினார்.

பக்திக்கு பகவானும் வசப்பட்டவன் அல்லவா?

இதுபோன்ற தர்ம சிந்தனையும் பக்தியும் நமக்கும் வர இறைவனை பிராத்திப்போம்…

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !