நவக்கிரகங்களின் வரலாறு

1253

ராகு , கேது உருவான கதை*
*திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்த பொருட்கள்!!*
அப்போது மலையை கடைவதால் ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட அது விஷமாக மாறி கடலில் கலந்து கடையப்பட்டதால் உருண்டு திரண்டு ஆலகால விஷமாக வெளிப்பட்டது. அனைத்து பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிப்பது எவ்வண்ணம் என தெரியாமல் அனைவரும் அஞ்சி ஓடினர்.
உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரையே அழிக்கும் சக்தியைக் கொண்ட ஆலகால விஷத்தை அவரது தொண்டை பகுதியிலே உமையவளான பரமேஸ்வரி தடுத்து நிறுத்தினார்.
(விஷ தாக்குதலின் விளைவாக சிவபெருமான் மயங்கி சாய்ந்தார். பார்வதிதேவி அவரை தன் மடியில் வைத்து படுக்க வைத்ததால் சிவபெருமான் சரியாகிவிட்டார்) விஷமானது கண்டப் பகுதியிலே நின்றதால் கண்டப்பகுதி நீல நிறமாக மாறியது. அது முதல் பரமேஸ்வரன் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார்.
முதலாவதாக வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் எடுத்து அருந்திய பின் பயம் தெளிந்த தேவர்களும், அசுரர்களும் மீண்டும் மலையை கடைய முற்பட்டனர். மலையை கடைய கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன. அவைகளை தேவர்களும், அசுரர்களும் ஆளுக்கு ஒன்றாக பகிர்ந்து கொண்டனர்.
*திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைகள்
1. ஆலகால விஷம்
2. காமதேனு
3. உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை
4. ஐராவதம் என்னும் வெள்ளை யானை
5. கற்பக விருட்சம்
6. அப்சரஸ்திரிகள்
7. அகலிகை என்ற அழகான பதுமை
8. திருமகள் என்னும் லட்சுமி
9. அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி
*ராகு, கேது உருவானக் கதை
காமதேனு, உச்சை சிரவஸ், ஐராவதம் மற்றும் கற்பக விருட்சத்தை தேவேந்திரன் எடுத்துக்கொண்டார். அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார்.
திருமகள் என்னும் லட்சுமியை மகாவிஷ்ணு தனது தேவியாக ஏற்றுக்கொண்டார். அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரியிடமிருந்து அசுரர்கள் திட்டமிட்டப்படி அமுத கலசத்தை அபகரித்து சென்றனர்.
அமுதத்தை யார் அடைவது என்ற சண்டையில் அமுதம் வீணாகிவிடும் என்ற நிலைக்கே சென்றது. இதைக் கண்ட தேவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் மகாவிஷ்ணுவை வேண்டினார்கள்.
மகாவிஷ்ணுவும் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை காணச் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி அசுரர்களும் அமுத கலசத்தை மோகினியிடம் ஒப்படைத்தனர்.
மோகினி அமுதத்தை இருவருக்கும் சரிபாதியாக பகிர்ந்தளிப்பதாக கூறினாள். பின் அசுரர்களையும், தேவர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னார். முதலில் எந்த வரிசைக்கு கொடுக்கட்டும் அல்லது ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா என கேட்டார்.
மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமுத கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமுதத்தை தங்களுக்கும் தெளிந்த மேல் பகுதியை தேவர்களுக்கும் அளிக்கலாம் எனக் கூறினார்கள்.
தேவர்களுக்கு அமுதம் அதிகமாகவே மோகினியால் விநியோகம் செய்யப்பட்டது. இதை அறியாத அசுரர்கள் நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு தேவரை போல் உருவம் மாற்றிக் கொண்டு தேவர்கள் நின்ற வரிசையில் நின்றார். மோகினி ஆளைப் பாராமல் அமுதத்தை சுவர்பானுவிடம் கொடுத்து விட்டார்.
அமுதம் கிடைத்தவுடன் அதை சட்டென்று சுவர்பானு பருகிவிட்டான். ஆனால், எவரும் அறியவில்லை என்று கருதிய சுவர்பானுவின் செயலை கவனித்த சூரியன் மற்றும் சந்திரன் சுவர்பானுவை அசுரன் என்று காட்டிக் கொடுத்து விட்டார்கள்.
இதையறிந்த மோகினி சுவர்பானுவின் தலையை துண்டித்து விட சுவர்பானு தலை வேறு, உடல்வேறாகிவிட்டான். இருப்பினும் அமுதம் உண்ட காரணத்தால் மரணம் ஏற்படாமல் தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்து உயிரை காத்தன.
இத்தகைய மாறுபட்ட உருவ அமைப்பை கொண்ட சுவர்பானுவை தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுவர்பானுவின் செயலால் அசுரர்களுக்கு கிடைக்க வேண்டிய அமுதம் கிடைக்காமல் போனது என்று அவரை வெறுத்தனர் அசுரர்கள். அதனால் சுவர்பானுவை அசுரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை
மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்த சுவர்பானு பிரம்மதேவரை தஞ்சமடைந்தார். பிரம்மதேவரும் மனமிறங்கி வரத்தை கேள் என்று கூறினார். சுவர்பானு தனது பழைய நிலையை அடைய அருள் பாவிக்குமாறு கூறினார்.
பிரம்மதேவரோ ஸ்ரீமந் நாராயணன் தண்டிக்கப்பட்ட உனக்கு அம்மாதிரியாக வரம் அளிக்க இயலாது. நீ இன்று போல் என்றும் இரு வேறு உடல் பிரிவுகளை கொண்டவராக இருப்பாய் என அருளினார்.
மேலும், மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு ‘ராகு” என்றும், மனித உடலும் பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு ‘கேது” என்ற பெயரும் நிலைக்கும் என்றார் பிரம்மதேவர்.
*பிரம்மதேவர் சுவர்பானுவிற்கு
அளித்த வரம்
சூரியன் மற்றும் சந்திரனால் காட்டி கொடுக்கப்பட்டு இந்த நிலை அடைந்ததால் அவர்களை பழி வாங்குவதற்கு அருள் பாவிக்க வேண்டும் என்று வேண்டினார் சுவர்பானு. பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் சமாதானம் அடையாத சுவர்பானுவை கண்ட பிரம்மதேவர் நவகிரக பரிபாலனத்தில் இணையும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்களாக என அருள் புரிந்தார்.
இதுவே அவர்களின் செயலுக்கான தண்டனை. இத்துடன் திருப்திக்கொள் என்றார் பிரம்மதேவர். மேலும், நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களை போல் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி எதிர் எதிராக சஞ்சாரம் செய்வீராக என அருள் பாவித்தார்.
அப்போது மகாவிஷ்ணு ராகு, கேதுவின் முன் தோன்றினார். நவகிரக பரிபாலனத்தில் இடமளித்தும் ஒளியை அளிக்கும் சூரியன் மற்றும் சந்திரனுக்கு கிரகணமாக பிடிக்கும் வரத்தினை அளித்து விட்டீர்களா? என பிரம்மதேவரிடம் கேட்டார். மேலும், அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் ஒரு அசுரனை எவ்வாறு நவகிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்த முடியும்.
இது அசுரர்களின் பலத்தை மேலும் அதிகரிக்கும். எனவே கடைசி அசுரன் இராவணன் அழியும் வரை இவர்கள் இருவரில் கேதுவானவன் கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகுவானவன் மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலம் கற்றுணர்ந்து வேத ஞானம் பெற்ற ராகு ஞானகாரனாகவும், கேது மோட்சகாரனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சம் பெற அனுகிரகம் செய்யட்டும் என்றார். அதன்படியே, இறுதியில் அசுரன் இராவணன் மாண்ட பிறகு நவகிரகங்களில் இருவரும் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.
*ராகுவால் ஏற்படும் தோஷங்கள்
🌟 ராகு 2ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது.
🌟 ராகு 4ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும்.
🌟 ராகு 7ல் இருந்தால் திருமண தோஷம் உண்டாகும்.
*கேதுவால் ஏற்படும் தோஷங்கள்
🌟 திருமணத் தடையை ஏற்படுத்துவார்.
🌟 குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார்.
🌟 அவச்சொற்களுக்கு ஆளாக்குவார்.
🌟 கேது 12ல் இருந்தால் மோட்சம் தருவார்.
*ராகுவிற்கான பரிகாரங்கள்
🌟 கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகுபகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.
🌟 அரசமரமும், வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்ப கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.
🌟 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு.
*கேதுவிற்கான பரிகாரங்கள்
🌟 விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.
🌟 காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்