Monday, October 23, 2023
HomePurana Kathaigalகருட புராணம் - பகுதி 1 சிருஷ்டி மற்றும் உத்தம மார்க்கம்

கருட புராணம் – பகுதி 1 சிருஷ்டி மற்றும் உத்தம மார்க்கம்

எங்கும் பிரம்மம் இருந்தது. எங்கும் நீர் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பொன் முட்டை (அண்டம்) தோன்றியது. அதனுள்ளிருந்து விஷ்ணு வெளியே வந்து நான்முகனைத் தோற்றுவிக்க, பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கினார். படைக்க பிரமன், காக்க விஷ்ணு, அழிக்க சிவன் என்று ஆயிற்று. இந்த மூன்று வடிவமும் பிரம்மமே ஆகும். பிரம்மா முதலில் தேவர், அசுரர், மித்ருக்கள், மானவர்களைத் தோற்றுவித்தார். மற்றும் ராக்ஷசர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும் சிருஷ்டிக்கப்பட்டனர். பிரம்மன் முடியிலிருந்து பாம்புகள், மார்பிலிருந்து செம்மறி ஆடுகள், வாயிலிருந்து வெள்ளாடுகள், வயிற்றிலிருந்து பசுக்கள், பாதங்களிலிருந்து குதிரைகள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் தோன்றின. உடலில் உள்ள உரோமங்களிலிருந்து மூலிகைகள் உண்டாயின.

விஷ்ணு கருடனுக்குக் கூறிய செய்திகள்: உலகில் உள்ள எண்பத்து நான்கு லக்ஷ யோனி பேதங்களில் இருபத்தோரு லட்சம் முட்டையிலிருந்து தோன்றும் அண்ட சங்கள், செடி, கொடி போன்ற இருபத்தோரு லட்சம் உற்பிச வகையைச் சார்ந்தவை. அடுத்து இருபத்தோரு லட்சம் சராயுச வகையைச் சார்ந்தவை. அதாவது கருப்பையிலிருந்து வெளி வருபவை. கொசு போன்ற வியர்வையிலிருந்து தோன்றுபவை இருபத்தோரு லட்சங்கள் சுவேதசம் எனப்படும்.

அனைத்திலும் மானிடப் பிறவியே சிறந்தது. எல்லா உயிர்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி ஆகியன உரியவை. ஞானம் மனிதனுக்கு மட்டும் உரித்தானது. கிருஷ்ணசாரம் என்ற கருப்பு நிற மானிகள் வசிக்கும் இடம் புண்ணிய பூமி. அதில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பர். அந்தப் பூமியும் தேவர்களையும், முனிவர்களையும், பிதுர்க்களையும் பூசிப்பவர்களுக்கு மிக்க நன்மை உண்டாகும். பூதம், பிரேதம், பைசாசங்களுக்கு ஆவியுருவம் மட்டுமுண்டு. தேகம் பெற்ற ஜீவர்கள் சிறப்புடையவர்கள். மானிடர்களில் பிராமணர்கள் சிறப்புடையவர். அவர்களில் பிரம்ம ஞானம் உடையவர்கள் அதிகச் சிறப்புடையவர்கள் ஆவர். சுவர்க்க மோட்சம் அடைய மானிடப் பிறவியே காரணமாகிறது. மண், பெண், பொன் ஆசை கொண்டவன், அதர்மம் புரிபவன், சுயநலக்காரனாகி தீவினைகளைச் செய்பவன் ஆகியோர் நரகத்தை அடைகின்றனர். எனவே கல்வியும், வித்தையும் கற்றவனும் ஞானத்தைப் பெற வேண்டும். ஞானேந்திரியங்கள் நாசமடைய உதவுகின்றன.

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களே ஒருவனுடன் மரணத்துக்குப் பின்னும் செல்லும். எனவே, தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். ஆகையால், உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தானதர்மங்கள் செய்வதும், முக்திக்குச் சாதனமான பரம பக்தி பிரபத்தி மார்க்கம் எனப்படும். அதுவே உத்தமமானதென்று பகவான் கருடனுக்குக் கூறுகிறார்.

மனித வாழ்வில் பிரார்த்தனை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. கருட புராணம் சூரியன், லக்ஷ்மி, விஷ்ணு பிரார்த்தனை களுக்கான நல்வழியைக் காட்டுகிறது. ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி உன்னைப் பிரார்த்திக்கிறேன். எனது கிழக்குப் பகுதியை உனது சுதரிசனச் சக்கரத்தாலும், தெற்கை கௌமுத்தி கதையாலும், மேற்கை சௌனந்தஹலா என்னும் கலப்பையாலும் காத்திடு. ஹேகமலக்கண்ணா, உன்னையே நான் சரணடைந்தேன். வடக்குப் பகுதியை உனது சதான முசலத்தால் காத்திரு. ஹே விஷ்ணு! உன்னைத் துதி செய்கிறேன். உனது கத்தியையும் கேடயத்தையும் கொண்டு ஈசானப் பகுதியை (வடகிழக்கு) காத்திடு. அசுரர்களின் பகைவனே! எனது கோரிக்கையை நிறைவேற்று. எனக்கு வாயவ்ய (வடமேற்குப்) பகுதியை உனது பாஞ்சசன்னயம் என்னும் சங்காலும், அனுத்வேத என்ற தாமரை மலராலும் காக்க. சந்திரஹாச வாளால் தென்கிழக்கைக் காத்திரு. நான் உன்னை வணங்குகிறேன்.
உனது ஸ்ரீவத்சம் என்னும் கழுத்தணி கொண்டு தென்மேற்குப் பகுதியைக் காத்திடுவாயாக. நீ மறைந்துள்ளாய். கருடவாகனனுடன் எழுந்தருளி அடியேனைக் காத்திடுக. நான் உன்னையே சரணடைந்தேன். சிறந்த பிரார்த்தனை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகும். இந்தப் பாராயணம் செய்பவர்கள் எம்பெருமான் சன்னிதியில் வாழ்வர்; க்ஷத்திரியர்கள் போரில் வெற்றி அடைவர். வைசியர்கள் செல்வம் பெறுவர்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!

கருடன் காயத்திரி மந்திரம்:
‘ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத்’
பொருள்:– பரம புருஷனை அறிவோமாக. சுவர்ணத்தைப் போல் ஓளி வீசும், அவன் மீது தியானம் செய்கிறோம். கருட பகவானான அவன் நம்மை காத்து அருள் செய்வானாக.
ஸ்ரீ வைநதேயன் திருவடிகளே ஸரணம்

ஒருவரைப் பழிப்பதுபோல் புகழ்வதும்; புகழ்வதுபோல் பழிப்பதும் வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது தமிழ் வழக்கில் மரபு. நேரடியாக இறைவனைப் போற்றும் பாடல்களுக்கு இணையாக, தமிழ் வழக்கில் ‘தூற்றுமறைத் துதி’ என்றும் பொதுவழக்கில் ‘நிந்தா ஸ்துதி’ என்றும் அழைக்கப்படும் இந்த மரபை அடியொற்றி அருளாளர்களால் எழுதப்பட்ட சில பாடல்களைப் பார்ப்போம்.

‘ஒன்றும் அறியா மூடர்காள் – திருவரங்கர்
திருத்தேர் பவனி வருகின்றார் இன்று
நின்று வடம் பிடிக்க வாருங்கள்
வைகுந்தத்தில் இடம் பிடிக்க வேண்டுமெனில்’

– இறைவனுக்கு செய்யும் தொண்டே மோட்சத்துக்கான வழியாகச் சொல்கிறது இந்தப் பாடல்.

பெருமாளைத் தூக்கிப் போகும் பருந்து!

காளமேகப் புலவர் நிந்தா ஸ்துதிப் பாடல்களைப் பாடுவதில் வல்லவராக இருந்தார். ஒருமுறை அவர் தில்லை கூத்தரசர் திருவீதி உலாவைப் பார்த்துக்கொண்டிருந்தார். கருட வாகனத்தில் வீற்றிருந்த பெருமாளைப் பார்த்து அவர் பாடியதைக் கேட்டால் முதலில் சிரிப்பு வரும். பிறகு பெருமாளின் பெருமை புரியவரும்.
‘பெருமாளும் நல்ல பெருமாள் – அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால் ஐயோ
பருந்துஎடுத்துப் போகிறதே பார்…’

– இதுதான் அந்தப் பாடல். இயல்பாகக் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளை, தன்னுடைய பாட்டில் இருக்கும் இடத்தைவிட்டு வந்ததால், பெருமாளைப் பருந்து எடுத்துக்கொண்டு பறப்பதாகத் தன்னுடைய பாட்டில் கவி காளமேகம் காட்சிப்படுத்தியதில் நையாண்டியும் இருக்கும் திரு உலாவை விவரிக்கும் நயமும் வெளிப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

Most Popular