Saturday, October 28, 2023
HomePurana Kathaigalராகு கேது ஸ்தலமான கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் புராணக் கதை!

ராகு கேது ஸ்தலமான கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் புராணக் கதை!

ராகு கேது ஸ்தலமான கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் புராணக் கதை!

தஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் எனும் ஊரிலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் சுமார் 2.கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது கத்திரிநத்தம் ஊர் . இவ்வூரில் திகழும் சிவாலயம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்பெறுகின்றது.

புராணக் கதை:

அவ்வாலயம் சோழப் பெருமன்னன் இராஜராஜன் காலத்தில் எடுக்கப்பெற்று அச்சக்கரவர்த்தியால் வழிபட்ட சிறப்புடைய கோயிலுமாகும். மாமன்னன் இராஜராஜசோழன் (கி.பி.985-1014) தன்னுடைய சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரித்து அவ்வளநாடுகளுக்குத் தன் பட்டப் பெயர்களைச் சூட்டினான். கேரளாந்தகவளநாடு, இராஜராஜவளநாடு, நித்தவிநோதவளநாடு, அருமொழிதேவ வளநாடு, சத்திரிய சிகாமணி வளநாடு, உய்யகொண்டார் வளநாடு போன்ற பெயர்களில் அவன் வகுத்த வளநாடுகள் அமைந்திருந்தன.

ஓவ்வொரு வளநாடும் பலநாடுகளாகவும் அல்லது கூற்றங்களாகவும் பகுக்கப்பெற்று அவற்றுள் பல ஊர்களும், பிடாகைகளும் (சிற்றூர்களும்) அடங்கியிருந்தன. அப்பேரரசன் வகுத்த இராஜராஜ வளநாட்டில் காந்தாரநாடு, தென்கவீரநாடு, கீழ்வேங்கைநாடு, குன்றில் கூற்றம், பழையூர் நாடு, பன்றியூர் நாடு, பறண்டையூர் நாடு, பரவை நாடு, பொய்யில் கூற்றம், புலிவல கூற்றம், புன்றில் கூற்றம், வல்லநாடு, வரகூர் நாடு ஆகியவை அடங்கி யிருந்தன.

காந்தார நாட்டு ஊர்கள் பலவற்றுள் கோனூர், இராஜமகேந்திர சதுர்வேதி மங் கலம், ரவிகுலமாணிக்க நல்லூர்,விஜயாலய சதுர் வேதிமங்கலம் போன்ற ஊர்கள் குறிப்பிடத்தக்கவையாகும். விஜயாலய சதுர்வேதிமங்கலம் என்பது தற்போதைய சாலியமங்கலத்தையும், இராஜமகேந்திர சதுர்வேதிமங்கலம் என்பது கம்பர்நத்தத்தையும், ரவிகுலமாணிக்க நல்லூர் என்பது கத்திரிநத்தத்தையும் குறிப்பிடும் பழம் பெயர்கள் என்பதைக் கல்வெட்டுச் சாசனங்கள் வழி அறியமுடிகிறது. ரவிகுலமாணிக்கம் என்பது சூரியகுலத்தில் தோன்றிய மாணிக்கக் கல் போன்றவன் இராஜராஜன் என்பதைக் குறிப்பிடும் சொல்லாகும்.

காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்:

ரவிகுலமாணிக்கநல்லூரில் முதலாம் இராஜராஜ சோழன் எடுத்தகற்கோயில் தற்போதைய கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலாகும். சோழப் பேரரசர்கள் தாங்கள் எடுத்த பல திருக்கோயில்களுக்கு கயிலாய மலையைக் சுட்டும் வகையில் ஸ்ரீகயிலாசம் என்றும் திருக்காளத்தி மலை மேல் திகழும் சிவாலயத்தை நினைவுகொள்ளும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரம் என்றும் பெயர் சூட்டினர். அம்மரபில் எடுக்கப் பெற்றதே ரவிகுலமாணிக்கத்து (கத்திரிநத்தத்து)சிவாலயமாகும்.

ஆலயத்தின் தனிச்சிறப்பு:

காளத்திநாதர் கோயிலுக்குரிய தனிச்சிறப்பு கண்ணப்பநாயனாருக்கு ஈசன் அருள்பாலித்ததாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் வழிபடப்பெற்று தேவாரப் பாடல்கள் பாடிய தலம் இதுவாகும். சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை காளத்தீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்ற சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. காளத்திநாதனை தன் தலைநகரமாகிய தஞ்சாவூருக்கு அருகிலேயே தாபித்து திருக்காளத்தியாகவே வழிபட விரும்பியதால்தான் இராஜராஜன் இக்கோயிலை எடுப்பித்துள்ளான்.

மாமன்னன் எடுத்த இவ்வாலயத்தில் மூலவராக லிங்க வடிவில் காளத்தீஸ்வரரை பிரதிட்டை செய்துள்ளான். இச்சிவலிங்கம் தஞ்சாவூர் பெரிய கோயிலின் மூலவரான இராஜராஜேச்சரமுடைய பரமசாமி என அழைக்கப்பெறும் பிரகதீஸ்வர பெருமானாரின் திருவடிவத்தினை நூற்றுக்கு நூறு ஒத்து திகழ்கின்றது.

தஞ்சை பிரகதீஸ்வரர் தோற்றம் கொண்ட காளஹஸ்தீஸ்வரர்:

தஞ்சை பெரிய கோயிலுக்குரிய ஆகம சிற்ப சாஸ்த்திர அளவீட்டுக்குரிய வகையில் அமைக்கப் பெற்றுள்ளதால்தான் பிரகதீஸ்வரரின் தோற்றத்திலேயே இந்தலிங்கம் அமைந்துள்ளது. வட்ட பீடம், அகண்ட பாணம், அரைவட்ட வடிவில் பாணசிகரம் ஆகியவை அமைந்துள்ளன.இராஜராஜன் காலத்தில் திருக்காமகோட்டம் எனப்பெறும் தனித்த அம்மன் கோயில் அமைப்பது இல்லை.

ஞானாம்பிகை அம்பாள்:

பின் வந்த சோழ அரசர்கள் காலத்தில்தான் தனித்த அம்மன் வடிவங்களை இடம் பெறச்செய்தனர். அவ்வாறு இத்திருக்கோயிலிலும் பிற் காலச் சோழ மன்னர்கள் காலத்தில் அமைக்கப் பெற்ற தனித்த அம்மன் திருமேனி இடம் பெற்றுள்ளது. அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை என்பதாகும். எவ்வாறு திருக்காளத்தியில் அம்பிகையின் பெயர் ஞானாம்பிகை என்று வழங்கப் பெறுகின்றதோ அதே வகையில் இங்கும் அத்திருநாமமே உள்ளது. நின்ற கோலத்தில் அக்கமணிமாலையும் தாமரை மலரும் பின்னிரு கரங்களில் ஏந்திய நிலையில் அபயவரத கரங்களோடு தேவி காட்சி நல்குகின்றாள்.

இத்திருக்கோயிலில் பண்டு சோழர்கள் காலத்தில் அஷ்ட பரிவாரங்கள் எனப்பெறும், சூரியன், சந்திரன், சப்தமாதர், கணபதி, முருகன், ஜேஷ்டா தேவி, சண்டீசர், பைரவர் ஆகிய திருமேனிகள் இடம் பெற்றிருந்தன. பின்னாளில் இவ்வாலயம் சிதைவுற்ற பின்பு மீண்டும் பின்வந்தோர் திருப்பணிகள் செய்தபோது சண்டீசர், பைரவர், கணபதி, முருகன் போன்ற பழைய திருமேனிகளே எஞ்சியிருந்ததால் புதிதாக ஜேஷ்டா தேவிக்குப் பதில் கஜலட்சுமியை மட்டும் பிரதிட்டை செய்துள்ளனர்.

அதுபோன்றே கோஷ்ட தெய்வங்களாக ஆலமர் செல்வராகிய தட்சிணாமூர்த்தி, காளையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் ரிஷபதேவர் (காளை) ஆகிய திருமேனிகள் மட்டுமே சோழர் காலத் திருமேனிகளாகவுள்ளன. பிற்காலத் திருப்பணிகளின்போது புதிய திருமேனிகளாக பிரமன், துர்க்கை ஆகிய திருவடிவங்களை இடம் பெறச் செய்துள்ளனர், தனித்த சிவலிங்க பாணம் ஒன்று பிரகாரத்தில் காட்சி நல்குகின்றது. சிறிய வடிவில் திகழும் முருகப் பெருமான் சிற்பமும், கணபதியார் வடிவமும் சோழர் கலையின் சிறப்புக்குரிய படைப்புக்களாகும். சண்டீசர் அமர்ந்த கோலத்தில் கையில் மழுவினை ஏந்தியவாறு காணப்பெறுகின்றார். ரிஷபம் (நந்தி) சோழர் கலையின் சிறப்புக்குரிய வடிவமாகும்.

சப்தரிஷி வழிபட்ட ஸ்தலம்:

சப்தரிஷி என்பது இங்கு சத்தரிஷி என மருவி காணப்பெறுகின்றது. இவ்வாலய புராணப்படி சப்தரிஷிகளான 1. அத்ரி, 2. வசிட்டர், 3. காச்யபர், 4. கௌதமர், 5. பரத்வாசர், 6. விச்வாமித்ரர், 7. ஜமதக்னி எனும் இவர்கள் இவ்வூரில் தங்கி இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர் என்பதால் இவ்வூருக்கு சப்தரிஷி நத்தம் எனப் பெயர் ஏற்பட்டதாக குறிக்கப் பெற்றுள்ளது. இந்த ஏழு ரிஷிகளும் குபேரனுக்கு ஆசிரியர்களாக விளங்கியவர்கள் ஆவர்.

ராகு கேது ஸ்தலம்:

தொண்டை மண்டலத்து திருக்காளத்தி எனும் தலத்தினை ராகு கேது சேஷத்ரம் எனக் குறிப்பிடுவர். ராகு – கேது எனும் கோள்களின் சாரத்தால் ஏற்படும் தீவினைகள் அனைத்தும் அங்கு நீங்கும் என்பது வழிபாட்டு மரபாகும். அதே பலனைகத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலிலும் மக்கள் பெற்று நலம் பெறுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 4 =

Most Popular