Sunday, October 15, 2023
HomePurana Kathaigalஸ்ரீபாகவத புராணம் – பகுதி 13

ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 13

கர்த்தமர், ஸ்வாயம்பு மனு

ஸ்வாயம்பு மனுவுக்கு சதரூபை என்பவளிடம் பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு புதல்வர்களும், ஆஹுதி, தேவஹுதி, பிரசூதி என்ற மூன்று பெண்களும் தோன்றினர். ஆஹுதி ருசியையும், தேவஹுதி கர்த்தம பிரஜாபதியையும், பிரசூதியை தக்ஷரும் மணந்தனர். பிரம்ம தேவன் கர்த்தமரைப் பார்த்து, பிரஜைகளைச் சிருஷ்டி செய் என்று ஆணையிட்டார். கர்த்தமர் சரசுவதி நதிக்கரையில் ஸ்ரீமந் நாராயணரைக் குறித்து நெடுங்காலம் தவம் செய்ய, ஸ்ரீஹரி காட்சி அளிக்க, கர்த்தமர் அவரைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அப்போது பகவான் கர்த்தமரை அனுக்கிரகித்துக் கூறினார். ஸ்வாயம்பு மனு, மனைவியுடன் இங்கு வருவார். அவர் மகள் தேஹுதியை மணந்து தரும பத்தினியான அவளுடன் இல்லற தர்மத்தை நடத்தி தூய உள்ளத்துடன் எல்லாவற்றையும் எனக்கே சமர்ப்பணம் செய்து முடிவில் என்னை வந்து அடைவாய் என்றார்.

மேலும் தேவஹுதியிடம், நானே அம்சாவதாரமான கபிலராக அவதரித்து தத்துவ ஸாங்கியத்தை உபதேசிக்கப் போகிறேன் என்று கூறி பகவான் மறைந்து விட்டார். அவ்வாறே மனுவும், சதரூபையும் தேவஹுதியுடன் வந்து மகரிஷியிடம் செய்தி கூற, முனிவர் இவளுக்குச் சந்தானம் ஏற்படும் வரையில் இல்லறத்தில் இருப்பதாகவும், பின்னர் பரமஹம்ச சந்நியாச தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புவதாகவும் கூறினார். மனு தனது நகரத்துக்குச் சென்று தருமநெறியில் சுகங்கள் அனுபவித்து ஆட்சி செய்து வந்தார்.

ஸ்ரீவாசுதேவருடைய நினைவிலேயே வாழ்நாட்களை ஆனந்தமாகவும், சாரமுள்ளதாகவும் கழித்து வந்தார். பகவான் நினைவிலேயே ஒன்றிக் கிடந்த அவருக்கு, மூவகையான தாபங்களும் நீங்கி விட்டன. இதுவே அரச சிரேஷ்டராகிய ஸ்வாயம்பு மனுவின் வரலாறு.

அடுத்து தேவஹுதியின் குணநலங்கள், வரலாறு ஆகியவற்றை மைத்ரேயர் கூறலானார்:

தேவஹுதி தன் கொழுநனான கர்த்தமரின் மனமறிந்து மகரிஷி சிரத்தையுடன் பணிவிடை செய்து வந்தாள். ஒருநாள் கர்த்தமர் மனைவியிடம் அவளது பக்தியையும் தொண்டையும் கண்டு மனமகிழ்ச்சி அடைந்ததாகவும், அவள் மீது அவர் தயை கொண்டதாகவும் உரைத்தார். அவர் தான் அடைந்த பகவத் பிரசாதத்தை அவளும் பெற்றிருப்பதாகவும், அந்த திவ்ய சக்திகளைக் கண்டு மகிழ ஞானக்கண் தருவதாகவும் கூறி, அவள் விரும்பினால் திவ்ய போகங்களை அனுபவிக்கலாம் என்றார்.

பிறகு, யோக சித்தராகிய கர்த்த மகரிஷி ஒரு விசித்திர விமானத்தைச் சிருஷ்டி செய்தார். மனைவியை அருகிலுள்ள நதியில் நீராடி வருமாறு கூறினார். நதியில் மூழ்கிய தேவஹுதி ஆங்கோர் அழகிய அரண்மனையைக் கண்டாள். பணிப்பெண்கள் அவளுக்கு சேவை செய்து அவர் சிரமத்தைப் போக்கினர். கர்த்தமர் மனைவியுடன் விமானத்தில் ஏறிட இருவரும் உல்லாசமாகச் சஞ்சரித்தனர். இந்தத் தம்பதிகளுக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒன்பது பெண்கள் பிறந்தனர்.
கர்த்தமர் தன் பிரதிக்ஞைப்படி வீட்டை விட்டுப் புறப்பட்டார். அப்போது அவர் மனைவி, அவர் வனம் சென்ற பிறகு தனக்கு ஆறுதல் அளிக்க யாருளர் என்றும், தமது பெண்களுக்குத் தகுந்த கணவனைத் தேடி யார் விவாகம் செய்து வைப்பர் என்றும் வருத்தத்துடன் கேட்டாள்.

அப்போது பகவான் கூறின மொழிகள் கர்த்தமருக்கு நினைவுக்கு வர, அவர் மனைவியிடம் கவலைப்பட வேண்டாம். உன் ஸ்ரீஹரி அருளால் அவளுக்கு சர்வ மங்களங்கள் உண்டாகும் என்று கூறினார். பிறகு தேவஹுதி மனஅமைதியுடன் பகவானை பஜனை செய்து கொண்டிருந்தாள். பல நாட்களுக்குப் பிறகு அத்தம்பதிகளுக்கு பகவான் மதுசூதனர் புத்திரனாகத் தோன்றினார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

பகவானுடைய அவதாரத்தைக் காண பிரம்மதேவரும், மரீசி முதலான ரிஷிகளும் கர்த்தமர் ஆசிரமம் வந்தனர். கர்த்தமரைப் புகழ்ந்தனர். தேவ ஹுதியிடம், அவள் பாக்கியசாலி என்றும், பகவான் கபிலர் என்ற பெயருடன் கீர்த்தியைப் பரவச் செய்வார் என்றும் கூறிச் சென்றனர். கர்த்தமர் பிரம்மாவின் ஆணைப்படி தனது ஒன்பது புத்திரிகளையும் மரீசி, அத்திரி, ஆங்கீரசர், புலத்தியர், புலகர், கிரது, பிருகு, வசிஷ்டர், அதர்வா என்ற ஒன்பது மகரிஷிகளுக்கு விவாகம் செய்து கொடுத்தார்.

தொடரும்…

ஓம் க்ரிஷ்ணாய நமஹ!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

Most Popular