Friday, October 27, 2023
HomePurana Kathaigalஸ்ரீபாகவத புராணம் – பகுதி 14

ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 14

கபிலர்

சிலகாலம் சென்றபின் கர்த்தமர் தனது புத்திரனாகிய கபிலரை இரகசியமாகச் சந்தித்து வணங்கிக் கூறலானார், இந்த எளியவன் கிரகத்தில் எங்கள் பாக்கியவசத்தால் அவதரித்தீர். தத்துவ சொரூபியும், காலச் சொரூபியுமாகிய தங்களை வணங்குகிறேன். ஒரு வேண்டுகோள். எனக்கு எல்லா ஆசைகளும் பூர்த்தியாகி விட்டன. இனிமேல் நான் சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டு, இதயத்தில் தங்களையே தியானித்துக் கொண்டு சோகமின்றி சஞ்சரிக்க வேண்டுகிறேன். அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது கபிலர் கர்த்தமரிடம், ஆத்மஞான மார்க்கத்தின் உண்மை தத்துவத்தை உலகில் பரப்பவே தான் அவதரித்திருப்பதாகவும், கர்த்தமருக்க அனுமதி தருவதாகவும் கூறினார். மேலும் எல்லாச் செயல்களையும் அவருக்கே அர்ப்பணம் செய்து, சம்சார தாபங்களை வென்று மோட்சம் அடைய அவரையே உபாசித்துப் பஜனம் செய்யுமாறும் அறிவுரை கூறினார்.

பின்பும் சகல கர்மபந்தங்களையும் நிவர்த்தி செய்யும் அத்யாத்ம வித்தையை தாயாருக்கு உபதேசம் செய்யப்போவதாகவும், அதனால் அவள் சம்சார தாபங்களிலிருந்து விடுபட்டு அபயத்தை அடைவாள் என்றும் கூறினார். கர்த்தம ரிஷி ஸ்ரீஹரியிடமே மனத்தைச் செலுத்தி சாந்தமாக இருந்தார். அவர் எல்லா ஜீவராசிகளிடமும் பகவானையே கண்டார். விருப்பு, வெறுப்பு நீக்கி சமச்சித்தராகி பகவத் பக்தியினால் ஸ்ரீஹரியினுடைய பரமபதத்தை அடைந்தார்.

தாய்க்குக் கபிலர் தத்துவோபதேசம்

கபிலதேவர், தாயாரைத் திருப்தி செய்வதற்காக பிந்து ஸரஸ்ஸிலேயே தங்கி இருந்தார். ஒருநாள் தாயான தேவஹுதி, குமாரனை நோக்கி, அஞ்ஞான இருளில் சிக்கி அல்லல்படும் எனக்கு ஞானமார்க்கத்தைக் காட்டியருள வேண்டும். பிரகிருதி, புருஷ விவேகத்தை உபதேசித்து மோட்சத்தை அருளுக. உம்மையே சரணடைந்தேன் என்றாள். கபிலர் மகிழ்ச்சி கொண்டு கூறலானார்:

அன்னையே, சுகதுக்கங்களிலிருந்து விடுபட அத்யாத்ம மார்க்கமே சிறந்தது. மனித சமூகத்துக்கு அதுவே சாந்தியும், க்ஷேமமும் உண்டாக்கும். மனமே ஆசை கொண்டு பந்தத்தில் சிக்க வைக்கிறது. எனவே, ஆசையை அகற்றி பகவானை அணுகி வாழும் மனதில் மோக்ஷ விருப்பம் உண்டாகிறது. ஆத்ம விடுதலை கிடைக்கின்றது.

நான், எனது என்பது நீங்கிட சித்த சுத்தி ஏற்படுகின்றது. சுக துக்கங்களைச் சமமாக எண்ணும் சமநிலை ஏற்பட பக்தி யோகமே சிறந்த உபாயமாகும். சாது சங்கமே மோக்ஷசாதனம். பிராணிகளிடம் அன்பும், கருணை உள்ளமும் கொண்டு என் மீது நிலையான பக்தி கொண்டு, எனது சரிதத்தைக் கேட்டு, படித்து, சொல்லுவதில் சாதுக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, சாது சங்கத்தில் இருங்கள். அதனால் பக்தி சிரத்தையும், மோக்ஷ விருப்பமும் உண்டாகும். சாதுக்கள் மக்கள் உள்ளங்களில், விடுதலையில் விருப்பத்தையும், பகவானிடம் பிரேம பக்தியையும் ஏற்படச் செய்கின்றனர். சாதுக்கள் புலன்களை அடக்கி, பிரகிருதியிலிருந்து விடுபட்டவராய், ஆசை நீக்கி வைராக்கியத்தால் வளர்ந்த ஞானத்தாலும், யோகமுயற்சியாலும், பக்தியாலும், முதல் கர்த்தாவாகிய என்னை இச்சரீரத்திலேயே அடைந்து விடுகின்றர் என்றார்.

அப்போது தேவஹுதி, அவளைப் போன்ற பெண்டிர் செய்யக்கூடிய மார்க்கம் எத்தன்மையது? என்று கேட்டாள். அதற்கு கபிலர் ஆத்ம சொரூப தத்துவங்களாகிய ஞான யோகம், பக்தி யோகம் பற்றிக் கூறலானார். தூய உள்ளம் பெற்றவரின் கர்மேந்திரிய, ஞானேந்திரியங்கள் ஸ்ரீ ஹரியிடமே ஒன்றிக்கிடத்தலே சிறந்த பக்தி யோகம்.

கோரிக்கையற்ற பக்தி முக்தியை விட சிறந்தது. இடைவிடாமல் எனது பாத சேவையில் ஈடுபட்டு, என்னைப் பற்றியே பேசிக் கொண்டு மகிழ்ச்சி கொள்வோர் அந்தப் பிரேமையினால் மோக்ஷத்தைக் கூட விரும்புவதில்லை. அப்படி அவர்கள் மோக்ஷத்தை விரும்பாவிட்டாலும் கூட அவர்களுடைய பக்தி அவர்களைப் பரமபதத்திற்கு அழைத்துச் செல்கிறது. எல்லாமாய் என்னை எண்ணி வழிபடும் பக்தர்கள் கெடுவதில்லை. காலக்கிரமத்தாலும் துன்பப்படுவதில்லை. பற்றற்று என்னைப் பூஜிக்கின்றவன் சம்சார தாபத்திலிருந்து காப்பாற்றப்படுகிறான். திடமான பக்தி யோகத்தினாலேயே மக்கள் க்ஷேமம் அடைகின்றனர் என்று தத்துவோபதேசம் செய்தார் கபிலர்.

கபிலர் தாயார்க்கு மேலும் ஆத்மத் தத்துவங்களின் லக்ஷணங்களைத் தனித்தனியே பிரித்துக் கூறலானார். ஆத்ம ஸ்வரூப தரிசன ஞானமே ஜீவனுக்கு மோக்ஷ பிரதான காரணமாகும்.
எங்கும் நிறைந்து, நிர்க்குண, நிராதரமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டு, உயிர்களனைத்திலும் அந்தராத்மாவாக ஒளிர்பவராய் தானே ஜோதி ஸ்வரூபனாய், ஆதி அந்தமற்ற ஆத்மாவே புருஷன். புருஷன் பிரகிருதியின் சுக துக்கங்களில் சம்பந்தப்படுவதில்லை. எனவே, மனதை தீவிரபக்தி, வைராக்கியம் யம நியமாதி யோக மார்க்கங்களால் ஒருமுகப்படுத்தி சிரத்தையாக என்னையே நினைத்து சத்திய நெறியில் சம பாவத்துடன் ஜீவராசிகள் இருக்க வேண்டும். நான், என்னுடையது என்பதை மறந்து, கிடைத்ததைத் திருப்தியுடன் புசித்து, அனைவரிடமும் நட்பு, தயவு கொண்டு பிரகிருதி புருஷ விவேகத்தை அடைய வேண்டும். இப்படி நிர்மல மனதுடன், பயனேதும் எதிர்பாராமல் ஞான வைராக்கியத்துடன்
தபோமயமான வாழ்வை நடத்தும் புருஷனது அஞ்ஞானம் தானாகவே நசிந்து மறைந்து விடும். திட மனதுடன் பூசிக்கும் பக்தர்கள், எனது அருள் சக்தியினால் தத்துவ ஞானம் பெறுவர். அவர்களின் சந்தேகங்கள் விலகி முடிவில் எனது திவ்ய பதத்தை அடைந்து இணையற்ற ஆனந்தத்தைப் பெறுகிறார்கள். அஷ்டமா சித்திகளில் பற்றற்றவன் எனது பதத்தை அடைவான்.

அடுத்து கபில மகரிஷி யோக லக்ஷணங்களை எடுத்துக் கூறலானார். யோக விதிகளை அனுஷ்டிப்பதால் மனம் தெளிந்து சன்மார்க்கத்தில் சென்றும், சுய தர்மத்தை அனுஷ்டித்து, உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியுற்று, ஆத்மஞானிகளின் சரணங்களைப் பூஜித்து அஹிம்சையைப் பின்பற்றித் தனியாக வசித்து வரவேண்டும். இந்திரியங்களை வென்று, மவுன விரதத்துடன் பகவானை ஆராதித்து வரவேண்டும். ஆதார ஸ்தானங்களில் ஓரிடத்தில் மனதையும், பிராணனையும் நிலைக்கச் செய்து பகவானுடைய லீலைகளைத் தியானிக்க வேண்டும். பிராணாயாமத்தினால் வாத, பித்தங்களையும், தாரணையினால் பாபங்களையும், பிரத்தியாகாரத்தினால் உலக சம்பந்தங்களையும், தியானத்தினால் தீயகுணங்களையும் விலக்கி, தூய நிலைபெற்ற மனதுடன் பகவானுடைய திவ்ய சவுந்தர்ய வடிவத்தைத் தியானம் செய்ய வேண்டும்.

பகவான் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீவத்ச மார்பில் கவுஸ்துப மணி ஒளி, கிரீடம், கங்கணம், நூபுரம், தோள் வளைகள் ஆகியவற்றுடன் மனோகரமான அழகுடன், காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சாந்தம், இளமை உடைய கண்ணனை அன்புடன் தியானிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றுபடும் வரை நன்றாகத் தியானிக்க வேண்டும். எல்லா அங்கங்களிலும் மனம் ஒன்றிவிட்ட பிறகு அவற்றைத் தனித்தனியாகத் தியானித்துப் பழக வேண்டும். பகவானுடைய கருணாகடாக்ஷம் மூவகை தாபங்களையும் போக்கி விடும். பகவானின் புன்சிரிப்பு மகரிஷிகளையும் மோகிக்கச் செய்வதால் அதுவே தியானத்திற்கு உகந்ததாகும். தியான யோக அப்யாசத்தினால் மனம் கனிந்த சாதகன் பக்திப் பெருக்கினால் உள்ளம் உருகி மகிழ்ச்சியினால் மெய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ணீரில் மூழ்கி, இரண்டற்ற நிலையைப் பெருகிறான். அண்ணலின் அருட்சக்தியினாலே மாயையை வென்று, உண்மை சொரூபத்தில் ஒன்றி பிரம்ம சாக்ஷõதிகாரத்தைப் பெற்று ஆனந்தமடைகிறான் என்றார்.

பின்னர் தேவஹுதி பக்திமார்க்கம் பற்றிக் கூறிட வேண்டினாள். அதற்கு கபிலர் கூறியதாவது:

பக்தி மார்க்கம் பலவகைப்படும்.

1. முன்கோபம், பொறாமை, ஆடம்பரம், பேத புத்தி, இம்சை உடையவன் என்னை வழிபட்டால் அவன் தாமச பக்தன் ஆவான்.

2. உலக சுகங்கள் கோரி ஆராதிப்பவன் ராஜச பக்தன் ஆவான்.

3. பகவானை ஆராதிப்பதே கடமை என்று கருதி எல்லாம் அர்ப்பணம் செய்து பூஜிப்பவன் சாத்வீக பக்தனாவான்.

4. எனது குண வைபவங்களைக் கேட்டு, என் மீது பயன் கருதாமல் கொள்ளும் பிரேமை, எல்லாவற்றிலும் வசிக்கும் என்னிடம் மனதைச் செலுத்துவது நிர்க்குண பக்தி ஆகும். இதுவே சிறந்த பக்தி யோகம். இதைச் செய்பவன் முக்குணங்களையும் கடந்து எனது பதம் அடைகின்றான்.

பக்தன் வைராக்கிய சீலனாக வாழ வேண்டும். பக்தியில் ஆடம்பரம் கூடாது. பிறரை வெறுப்பவன் என்னையும் வெறுப்பவன் ஆவான். அவன் பலவித திரவியங்களாலும் என்னைப் பூஜித்தாலும் நான் திருப்தி அடையேன். உயிர் கூட்டங்களில் உள்ள என்னை மானசீகமாக வணங்கி வரவேண்டும். இவ்வாறு கர்மபலன்களைச் சமர்ப்பித்து தூயமனதுடன், சமதிருஷ்டியுடன் என்னை உபாசிப்பவன் சிறந்தவன்.

இவையே ஞானயோக, பக்தியோக லக்ஷணங்கள். இவற்றில் ஒன்றை அனுஷ்டித்தாலும் பரம புருஷனை அடையலாம் என்று கூறினார். ஞான சொரூபியாகிய கபிலருடைய இந்த சிறப்பான உபதேசங்களைக் கேட்ட தேவஹுதி ஞான ஒளியைப் பெற்று கபிலரைப் பக்தியுடன் வணங்கிப் பலவாறு துதி செய்தாள். கபிலர் தாயாரிடம் விடைபெற்று வடகிழக்கில் சென்றார். அப்போது சித்த, சாரண, கந்தர்வர்கள் எல்லாரும் அவரை வணங்கித் துதித்தனர். புத்திரனின் பிரிவாற்றாமையால் மனம் கலங்கிய தேவஹுதி யோக மார்க்கத்தை மிக்க கவனத்துடன் அனுஷ்டித்துக் கடுமையான தவத்தில் ஈடுபட்டாள்.

திட வைராக்கியம், தக்க கர்மானுஷ்டானங்கள், தீவிர பக்தி யோகத்தினால் மனத்தூய்மை பெற்ற அவள் பிரம்ம சாக்ஷõத்தார ஞானத்தை அடைந்து, ஆத்ம சொரூபத்திலே நிலைத்த மனத்தை உடையவளாகப் பரமானந்த சுகத்தில் ஆழந்திருந்த அவளுடைய சரீரத்தை ஆசிரமவாசிகளே போஷித்து வந்தனர். கபிலரால் உபதேசிக்கப்பட்ட யோக மார்க்கத்தை அனுஷ்டித்து வெகு சீக்கிரத்திலேயே பகவானுடைய திவ்ய பதத்தை அடைந்தாள். அவள் சித்தி பெற்ற இடம் சித்தி பதம் என்று போற்றப்படுகிறது.

(மூன்றாவது ஸ்கந்தம் நிறைவடைகிறது)

தொடரும்…

ஓம் க்ரிஷ்ணாய நமஹ!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + ten =

Most Popular