புரஞ்ஜனன் சரிதம்
ஒருநாள் ஆத்ம தத்துவத்தை அறிந்த நாரத முனிவர் கர்ம மார்க்கத்திலே ஈடுபட்டிருந்த ப்ராசீன பர்ஹிஷதரைப் பார்க்க வந்தார். அவர் அரசனிடம் அழியாத இன்பத்தைப் பெற மோக்ஷ மார்க்கமே சிறந்தது என்றும் கர்மாக்களால் மோக்ஷ சுகம் கிடைப்பது இல்லை என்றும் கூறினார். அதற்கு மன்னன் நாரத முனிவரிடம் தனக்கு மோக்ஷ மார்க்கத்தை உபதேசிக்குமாறு கேட்டுக் கொண்டான். அப்போது மன்னன் புரஞ்ஜனன் கதையைக் கூறினார்:
முன்பு புரஞ்ஜனன் என்றொரு மன்னன் இருந்தான். அவன் பெயர் அவிஞ்ஞாதன். ஒருநாள் புரஞ்ஜனன் இமயமலைச் சாரலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, தெற்குத் தாழ்வரையில் ஒன்பது கோட்டை வாசல்களுடன் கூடிய நகரத்தைக் கண்டான். அதிலே உலாவிக் கொண்டிருக்கும் போது ஓர் அழகிய பெண்மணியைக் கண்டான். அவளுடன் பலப் பெண்மணிகளும், பத்து வேலைக்காரர்களும் இருந்தனர். ஐந்து தலை நாக சர்ப்பம் ஒன்றும் அவளுடன் இருந்து அந்த நகரத்தைக் காத்து வந்தது.
அவளைக் கண்டு மயங்கிய மன்னன், அவளுடைய விவரங்களைக் கேட்டான். ஆனால் அவள் அவளைப் படைத்தவரையோ, அந்நகரை அமைத்தவரைப் பற்றியோ அறியாமல் அங்கு வாழ்ந்து வந்தாள். மேலும், அவள் மன்னனிடம் அவன் விரும்பினால் அவளை மணம் புரியலாம் என்றும் கூறினாள். அழகில் மயங்கியவன், அவளை மணந்து அவள் மோகத்தில் தன் வயது இழந்து, அறிவை இழந்து, அவளுடன் வாழ்ந்து பல மக்களைப் பெற்று, அவர்களுக்கு மணம் செய்வித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். ஆண்டுகள் செல்லச் செல்ல மெல்ல இளமை மறைந்து முதுமையும் வந்தது.
அச்சமயத்தில் கால கன்னிகை, ப்ரஜ்வாரன் ஆகிய மிருத்யுவின் சேனா வீரர்கள் அந்நகரை முற்றுகையிட்டுத் தாக்கினர். அதனால் சுகபோகம், செல்வம் அனைத்தையும் இழந்தான் அவன். அப்போது ப்ரஜ்வாரன் என்ற விரோதி அந்நகரத்தை எரிக்க, அதைக் காத்து வந்த சர்ப்பம் ஓடிவிட்டது. நகரமும் அழிந்தது. மரண சமயத்தில் புரஞ்ஜனன் தன் மனைவியின் நினைவிலேயே இருந்ததால் மறுபிறவியில் விதர்ப்ப நாட்டரசனின் மகளாகப் பிறந்தான். அவளை மலயத்வஜ பாண்டியன் வீர கப்பமாகப் பெற்று மணம் செய்து கொள்ள அத்தம்பதியருக்கு ஒரு பெண்ணும், ஏழு புத்திரர்களும் பிறந்தனர். அவர்களே திராவிட நாட்டு மன்னர்களாக இருந்தனர். அந்தப் பெண்ணை அகஸ்தியர் மணந்தார்.
பிறகு மலயத்வஜன் அரசை குமாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு குலாசலம் என்ற மலைச்சாரலில் சென்று ஸ்ரீ வாசுதேவரை ஆராதித்து வந்தார். அவள் மனைவியும் அவனைப் பின் தொடர்ந்தாள். ஒருநாள் தியானத்தில் மூழ்கியிருந்த மன்னனின் மனைவி அவன் பாதங்களைப் பூசிக்க ஆரம்பித்தாள். மன்னன் மகா சமாதியில் ஆழ்ந்து விட்டான். பாதங்கள் சில்லிட்டன. கணவனுடன் சகமனத்துக்கு முற்பட்டு தீயை வலம் வருகையில் அங்கொரு அந்தண சிரேஷ்டர் தோன்றினார். அவர் முற்பிறவியில் புரஞ்ஜனனின் நண்பனாக இருந்த அவிஞ்ஞாதன். அவன், தாமிருவரும் இணைபிரியாத நண்பர்களாய் அன்னப் பறவைகளாக மானசரோவரத்தில் வசித்ததை நினைவூட்டினான். மேலும் அவர்கள் இருவருமே சுத்த சொரூபிகள் என்றும் அவன் வைதர்ப்பி என்பதும் மாயையே ஆகும் என்றும் கூறினான்.
இவ்வாறு சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டுப் பெண்ணாகிய முற்பிறவி புரஞ்ஜனன் முன் நினைவு பெற்று தன் உண்மை சொரூப ஞானத்திலே நிலைத்தவனாக ஆனந்தத்தை அடைந்தான்.
இந்தக் கதையைத் தொடர்ந்து நாரதர், பர்ஹிஷித்ரிடம், ஆத்ம நலனில் ஆசையுள்ள புருஷன் பகவான் வாசுதேவரையே பூசிக்க வேண்டும். அவரது சரித்திரத்தைக் கேட்க வேண்டும். திவ்ய நாமங்களை உச்சரிக்க வேண்டும். அதனால் பக்தி யோகம் நிலைபெற்று ஞானமும், வைராக்கியமும் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் அனுக்கிரகம் செய்கிறான். ஸ்ரீஹரி சரணங்களையே சரண் அடைந்தவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்றார். பிறகு நாரதர் ஜீவாத்மா, பரமாத்மா சொரூபத்தைத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டு அவனிடம் விடைபெற்று சித்தலோகம் சென்றார்.
தொடரும்…
ஓம் க்ரிஷ்ணாய நமஹ!
