Saturday, November 4, 2023
HomePurana Kathaigalஸ்ரீபாகவத புராணம் – பகுதி 7

ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 7

பரீக்ஷித்தின் கதை

உத்தரையின் பிரார்த்தனையை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவள் கருவை அழிக்க அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தின் உக்கிரத்தை, அங்குஷ்ட பிரமாணமுடன் – சிசுவின் அருகிலே நெருங்கவிடாமல் இருந்து ரட்சித்து வந்தார். பிறகு ஒரு சுபலக்கினத்தில் ஓர் ஆண் குழந்தை உத்தரைக்குப் பிறந்தது. அதுவே பரீக்ஷித்து ஆகும். மகாவிஷ்ணுவால் ரட்சிக்கப்பட்டு பிறந்த அந்தக் குழந்தைக்கு விஷ்ணுராதன் என்று பெயர் வைத்தனர். அக்குழந்தை தாயின் கருவில் கண்ட திவ்ய சொரூபி யார் என்று பரீட்சை செய்துகொண்டு இடைவிடாமல் அப்பகவானையே சிந்தித்ததாலும் விஷ்ணுராதனுக்கு பரீக்ஷித் என்று பெயர் ஏற்பட்டது. பரீக்ஷித், உத்தரன் பெண்ணாகிய இராவதியை மணந்து, தர்மநீதி தவறாமல் ஆண்டு வந்தான். அவனுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு குமாரர்கள் பிறந்தனர்.

ஒரு சமயம் பரீக்ஷித் திக்விஜயம் செய்து வருகையில் பாண்டவர்களின், ஸ்ரீ கிருஷ்ணனின் கீர்த்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் சிலாகித்துப் பேசுவதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றான். இதனால், பரீக்ஷித்தின் உள்ளத்தின் கிருஷ்ணபக்தி பெருக்கெடுத்தது. பக்திப் பரவசமடைந்த அவன் மனம் ஸ்ரீகிருஷ்ணரின் சரணார விந்தங்களையே தியானிக்கத் தொடங்கியது. தேச சஞ்சாரம் செய்து வந்தபோது பரீக்ஷித்து ஒரு பசுவும், ரிஷபமும் மிக்க தீனமாக நிற்பதையும், ஒரு முரட்டு மனிதன் அவற்றை அடித்து இம்சிப்பதையும் கண்டான்.

அதைக் கண்ட பரீக்ஷித் கோபம் மிக்கவனாக அதட்டி கேட்கலனான். “துஷ்டனே நீ யார்? என் ஆட்சியில் இந்தக் கொடுமையான செயலைப் புரிந்த உன்னைத் தண்டிக்கப் போகிறேன். துஷ்டர்களைச் சிக்ஷித்து, சாதுக்களை ரக்ஷிப்பதும் அரசனது கடமையே. பிறகு ரிஷபத்தை நோக்கி, ஒற்றைக் காலில் நிற்கும் நீர் தேவதைகளில் யார்? மற்றப்பாதங்களை வெட்டியது யார்?” என்று கேட்க, அது கூறியது: “துன்பங்களுக்குக் காரணம் பல வகையாகச் சொல்லப்படுவதால் அறிவில் சிறந்த தாங்களே அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றது.

அரசன் சிந்தித்து ரிஷபத்தை நோக்கி, “நீர் தருமதேவதை. நீர் சத்தியம், தயை, தவம், ஆச்சாரம் என்னும் நான்கு பாதங்களுடன் கிருதயுகத்தில் சஞ்சரித்து வந்தீர் அல்லவா. கர்வம், மதம், பேராசை ஆகிய அம்சங்களினால் மூன்று கால்களை இழந்துவிட்டீர். சத்தியம் என்னும் ஒரே காலில் இப்போது நிற்கிறீர் அதையும் அசத்தியமே உருவான கலிபுருஷன் வெட்டப்பார்க்கிறான் என்றார். பொறுமையே உருவான பூதேவியே பசுவாக வந்திருக்கிறாள். பகவானுடைய சரண ஸ்பரீசத்தால் மகிழ்ச்சி அடைந்திருந்த அவள் இப்போது கண்ணீர் மல்கி நிற்கின்றாள்” என்று கூறி அருகிலுள்ள வேடதாரியைக் கொல்ல உடைவாளைக் கையில் எடுத்தான் பரீக்ஷித்து.

அதுகண்ட முரட்டு கலி மனிதன் பரீக்ஷித்தின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது பரீக்ஷித்து அருச்சுனன் புகழைப் பாதுகாத்து வரும் நான் சரணமடைந்த வரைக் கொல்வதில்லை.
நீ கலகம், பொய், திருட்டு, கபடம் ஆகிய தீயகுணங்கள் நிறைந்தவன். எனவே சத்தியம், தர்மம் நிறைந்த இந்த பிரம்மாவர்த்தத்தில் வசிக்கக்கூடாது என்று ஆணையிட அவன் தான் நிலையாக இருப்பதற்கான இடம் ஒன்று குறிப்பிட வேண்டினான். அதற்கு பரீக்ஷித்து சூதாட்டம், மதுபானம், விபச்சாரம், கொலை முதலிய அதர்மங்கள் நடக்கும் இடத்திற்குச் சென்று வசிக்குமாறு கூறினார். மேலும் சில இடங்களைக் கலி வேண்டிட பரீக்ஷித்து பொய், காமம், மதம், விரோதம், கோபம் ஆகிய ஐந்து இடங்களையும் குறிப்பிட்டார்.

இவ்வாறு கலியை விரட்டிய பிறகு அரசன் தயை, தவம், ஆச்சாரம் ஆகியவற்றை வளர்த்து தர்ம தேவதையாகிய ரிஷபத்தின் மூன்று கால்களையும் வளரச் செய்தார். பூதேவியாகிய பசுவைச் சமாதானம் செய்து புஷ்டியுடன் விளங்கச் செய்தார். இவ்வாறு அபிமன்யுவின் புத்திரரான பரீக்ஷித்து தர்மத்தையும் பூமியையும் நன்றாகப் பாதுகாத்துப் புகழுடன் அஸ்தினாபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.

பாவங்களைச் செய்த பிறகே அதன் பலனை அனுபவிக்க நேரிடுகின்றது. நற்செயல்களையே நினைத்து பாவங்களிலிருந்து விலகி வாழ்வதே நல்லது என்று அறிதல் கலியிலுள்ள சிறந்த அனுகூலம் ஆகும். அவன் தைரியமுள்ளவர்களிடம் நெருங்கமாட்டான்.

தொடரும்…

ஓம் க்ரிஷ்ணாய நமஹ!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

Most Popular