Monday, October 23, 2023
HomePurana Kathaigalஸ்ரீபாகவத புராணம் – பகுதி 5

ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 5

விதுரன் திருதராஷ்டிரன் முடிவுசூத முனிவர் சவுனகாதி முனிவர்களுக்கு மேலும் கூறலானார். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த விதுரர் அஸ்தினாபுரம் வரும் வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்ம தத்துவத்தைக் கேட்டு அறிந்து சிறந்த ஞானத்தைப் பெற்று ஸ்ரீகிருஷ்ணன் மீது நிர்மலமான பக்தியும், அமைதியும்பெற்றார். நீண்ட நாட்களாய் பிரிந்திருந்த சிறிய தகப்பனார் விதுரரைக் கண்ட யுதிஷ்டிரர் அன்புக் கண்ணீர் பெருக்கினார். பிறகு விதுரருக்குப் போஜனம் செய்வித்து யோக÷க்ஷமங்களை விசாரித்தார். அப்போது விதுரர் தருமனுக்கு எல்லாவற்றையும் கூறினார். ஆனால், யதுகுலத்துக்கு நேர்ந்த கஷ்டத்தை மட்டும் கூறவில்லை. பிறகு தனது தமையனாருக்கு ஞானமார்க்கம் பற்றி எடுத்துக் கூறியவராக காலம் கடத்தி வருகையில் மரணகாலம் நெருங்குவதை அறிந்து தமையனிடம் பின்வருமாறு கூறினார். காலதேவனின் சக்தியை வெல்ல முடியாதல்லவா. விரைவிலேயே வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும். அதற்காக இந்த வயதில் பிறரை அண்டி வாழ வேண்டும். எவர்களுக்காகப் பல கொடிய செயல்களைச் செய்தீரோ அவர்கள் வீட்டிலேயே வாழலாமா? வீட்டைக் காக்கும் நாய்க்கு சோறிடுவதைப் போல பீமன் உமக்கு அன்னம் இடுகிறான்.எவ்வளவுதான் உயிர்மீது ஆசை வைத்தாலும் சரீரம் காலக்கிரமத்தில் அழியும். எவன் ஆசைகளை விட்டுப் பற்றின்றி வைராக்கிய மனதுடன், வீட்டை விட்டு வெளியேறி யாரும் அறியாமல் சரீரத்தை விடுகிறானோ அவனே தீரபுருஷன். எவன் ஸ்ரீஹரியின் சரணங்களையே தியானித்து வீட்டை விட்டுத் துறவியாக புறப்பட்டுச் செல்கிறானோ அவனே உத்தமன். எனவே உடனே யாருக்கும் தெரிவிக்காமல் வடக்கு திக்கில் செல்லுங்கள் என்றார். உடனே திருதராஷ்டிரன், காந்தாரி பின் தொடர விதுரர் வழிகாட்ட வீட்டைத் துறந்து, இமயமலைக்குச் சென்று விட்டார். தருமர் வழக்கப்படி பெற்றோர்களை வணங்க வந்தவர், மாளிகையில் யாரும் இல்லாதது பற்றி சஞ்ஜயரைக் கேட்க, அவரும் தன்னை ஏமாற்றிவிட்டு அவர்கள் எங்கு சென்றார்களோ தெரியவில்லை என்றார். அப்போது அங்கே வந்த நாரத முனிவர் வீணாக வருந்த வேண்டாம்; எல்லாம் பகவான் கட்டளைப்படியே நடக்கும். பஞ்சபூத சரீரத்தினால் ஆன எவரையும் காப்பாற்ற முடியாது என்று கூறி திருதராஷ்டிரர் குடும்பத்துடன் இமயமலை சென்றதைக் கூறினார். தருமன் மனம் தெளிந்து சோகத்தை விட்டார்.

தருமர் முதலானோர் வீடு பேறுசில நாட்கள் கழிந்த பின் தருமர்,உற்றார் உறவினர் ÷க்ஷம லாபங்களைஅறிந்து வர அருச்சுனனைத் துவாரகைக்கு அனுப்பினார். அஸ்தினாபுரத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. பல மாதங்களிலும் அருச்சுனன் திரும்பி வராததால் பீமசேனனைத் துவாரகைக்குச் சென்று வருமாறு கூறினார். மேலும் நாரதர் கூறியபடி பகவான் தனது லீலாவதாரமான சரீரத்தை விட்டு விடும் காலம் வந்து விட்டதோ என்று கவலையுற்றான். அவ்வமயம் துவாரகையிலிருந்து திரும்பி வந்த அருச்சுனன் யுதிஷ்டிரரை வணங்கிக் கண்ணீர் மல்க நிற்பது கண்டுபயந்தார். எல்லோரும் நலந்தானே என்று விசாரித்தார். அப்போது அருச்சுனன் நா தழுதழுக்க, ஸ்ரீஹரி உற்ற பந்துவாக இருந்தும் என்னை வஞ்சித்து விட்டார். என்னுடைய தேஜஸ் வீர்யம் எல்லாம் அபகரிக்கப் பட்டு விட்டது. நான் சக்தி அற்றவன் ஆகிவிட்டேன். அவருடன் வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது. துவாரகா நகரமே சூன்யமாகி விட்டது. நமக்குக் கோவிந்தனுடைய நாமஸ்மரணமே தான் துணை. அதுவே நமது துன்பங்களை நீக்கக் கூடியது என்று ஆற்றாமையுடன் கூறினான். பின்னர்கீதோபதேசங்களை நினைவு கூர்ந்து ஞானம் பெற்றான். குணாதீத நிலையைப் பெற்ற அவன் ஜீவன் முக்தனானான். குந்தியும் அவன் சொற்களைக் கேட்டு சம்சார சூழலிலிருந்து விடுபட்டாள்.சக்கரவர்த்தியாகிய தருமபுத்திரன், குணசாலியும் வணக்கமுடையவனுமாகிய பேரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து மதுரா நகரில் சூரசேனநாட்டிற்கு வஜ்ரனை அரசனாக்கினார். பின்னர் அகங்கார, மமகாரங்களை விட்டு மோகமின்றி எல்லாப் பந்தங்களையும் துறந்து வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அரண்மனையை விட்டு வெளியேறினார். சகோதரர்களும் மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். திரவுபதியும் வாசுதேவனையே சரணாக அடைந்து, ஏகாந்தபக்தியில் ஈடுபட்டு அவரையே அடைந்தார். இவ்வாறு பகவானுடைய பிரியமான பக்தர்களான பாண்டவர்களுடைய மகா பிரயாணத்தைப் பற்றி பாகவதம் கூறுகிறது.

பரீக்ஷித்தின் கதைஉத்தரையின் பிரார்த்தனையை ஏற்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவள் கருவை அழிக்க அசுவத்தாமனால் ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தின் உக்கிரத்தை, அங்குஷ்ட பிரமாணமுடன்-சிசுவின் அருகிலே நெருங்கவிடாமல் இருந்து ரட்சித்து வந்தார். பிறகு ஒரு சுபலக்கினத்தில் ஓர் ஆண் குழந்தை உத்தரைக்குப் பிறந்தது.அதுவே பரீக்ஷித்து ஆகும். மகாவிஷ்ணுவால் ரட்சிக்கப்பட்டுபிறந்த அந்தக் குழந்தைக்கு விஷ்ணுராதன் என்று பெயர் வைத்தனர். அக்குழந்தை தாயின் கருவில் கண்ட திவ்ய சொரூபி யார் என்று பரீட்சை செய்துகொண்டு இடைவிடாமல் அப்பகவானையே சிந்தித்ததாலும் விஷ்ணுராதனுக்கு பரீக்ஷித் என்று பெயர் ஏற்பட்டது. பரீக்ஷித், உத்தரன் பெண்ணாகிய இராவதியை மணந்து, தர்மநீதி தவறாமல் ஆண்டு வந்தான். அவனுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு குமாரர்கள் பிறந்தனர்.ஒரு சமயம் பரீக்ஷித் திக்விஜயம்செய்து வருகையில் பாண்டவர்களின், ஸ்ரீகிருஷ்ணனின் கீர்த்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் சிலாகித்துப் பேசுவதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றான். இதனால், பரீக்ஷித்தின் உள்ளத்தின் கிருஷ்ணபக்தி பெருக்கெடுத்தது. பக்திப் பரவசமடைந்த அவன் மனம் ஸ்ரீகிருஷ்ணரின் சரணார விந்தங்களையே தியானிக்கத் தொடங்கியது. தேச சஞ்சாரம் செய்து வந்தபோது பரீக்ஷித்து ஒரு பசுவும், ரிஷபமும் மிக்க தீனமாக நிற்பதையும், ஒரு முரட்டு மனிதன் அவற்றை அடித்து இம்சிப்பதையும் கண்டான். அதைக் கண்ட பரீக்ஷித் கோபம் மிக்கவனாகஅதட்டி கேட்கலனான். துஷ்டனே நீ யார்? என் ஆட்சியில் இந்தக் கொடுமையான செயலைப் புரிந்த உன்னைத் தண்டிக்கப் போகிறேன். துஷ்டர்களைச் சிக்ஷித்து, சாதுக்களை ரக்ஷிப்பதும் அரசனது கடமையே. பிறகு ரிஷபத்தை நோக்கி, ஒற்றைக் காலில் நிற்கும் நீர் தேவதைகளில் யார்? மற்றப்பாதங்களை வெட்டியது யார்? என்று கேட்க, அது கூறியது: துன்பங்களுக்குக் காரணம் பல வகையாகச் சொல்லப்படுவதால் அறிவில் சிறந்த தாங்களே அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்றது.அரசன் சிந்தித்து ரிஷபத்தை நோக்கி, நீர் தருமதேவதை. நீர் சத்தியம், தயை, தவம், ஆச்சாரம் என்னும் நான்கு பாதங்களுடன் கிருதயுகத்தில் சஞ்சரித்து வந்தீர் அல்லவா. கர்வம், மதம், பேராசை ஆகிய அம்சங்களினால் மூன்று கால்களை இழந்துவிட்டீர்.சத்தியம் என்னும் ஒரே காலில் இப்போது நிற்கிறீர் அதையும் அசத்தியமே உருவான கலிபுருஷன் வெட்டப்பார்க்கிறான் என்றார். பொறுமையே உருவான பூதேவியே பசுவாக வந்திருக்கிறாள். பகவானுடைய சரண ஸ்பரீசத்தால் மகிழ்ச்சி அடைந்திருந்த அவள் இப்போது கண்ணீர் மல்கி நிற்கின்றாள் என்று கூறி அருகிலுள்ள வேடதாரியைக் கொல்ல உடைவாளைக் கையில் எடுத்தான் பரீக்ஷித்து. அதுகண்ட முரட்டு கலி மனிதன் பரீக்ஷித்தின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது பரீக்ஷித்து அருச்சுனன் புகழைப் பாதுகாத்து வரும் நான் சரணமடைந்த வரைக் கொல்வதில்லை.

நீ கலகம், பொய், திருட்டு, கபடம் ஆகிய தீயகுணங்கள் நிறைந்தவன். எனவே சத்தியம், தர்மம் நிறைந்த இந்த பிரம்மாவர்த்தத்தில் வசிக்கக்கூடாது என்று ஆணையிட அவன் தான் நிலையாக இருப்பதற்கானஇடம் ஒன்று குறிப்பிட வேண்டினான். அதற்கு பரீக்ஷித்துசூதாட்டம், மதுபானம், விபச்சாரம், கொலை முதலிய அதர்மங்கள் நடக்கும் இடத்திற்குச் சென்று வசிக்குமாறு கூறினார். மேலும் சில இடங்களைக் கலி வேண்டிட பரீக்ஷித்து பொய், காமம், மதம், விரோதம், கோபம் ஆகிய ஐந்து இடங்களையும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =

Most Popular