Saturday, October 14, 2023
HomePurana Kathaigalஸ்ரீபாகவத புராணம் – பகுதி 2

ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 2

பகவானின் அவதார மகிமைகள்

சூதமா முனிவர் பகவானின் அவதார மகிமைகளை முனிவர்களுக்குக் கூறலானார். ஆதியில் பகவான் உலகைச் சிருஷ்டி செய்ய எண்ணி உடனே பதினாறு கலைகள் கொண்ட புருஷ ரூபத்தைக் கொண்டார். அந்த விராட் புருஷனின் உடலிலிருந்தே தேவர்கள், மனிதர்கள் தோன்றினர். உலகம் விரிவடைந்தது. அவர் சொரூபம் அழிவற்றது. ஸத்வ குணம் நிறைந்தது. மகிமை பொருந்தியது. அவருடைய அமிசத்தினாலேயே தேவதைகள், பசு, பக்ஷிகள், பிராணி வர்க்கங்கள் தோன்றின. அந்த ஆதிநாராயண சொரூபமே சகல அவதாரங்களுக்கும் மூல காரணமாயிற்று. ஸ்ரீஹரி எடுத்த அவதாரங்கள் எண்ணில் அடங்கா. ஆனால் அவற்றுள் இருபத்து நான்கு மிக்க மகிமை பெற்றவை. அசுரர்களால் உலகத்திற்குத் துன்பம் உண்டாகும் போது அவர்களை அடக்கி நன்மக்களைக் காப்பதற்காகவே பகவான் பலவித உருவங்களில் தோன்றுகிறார். தர்மம், ஞானம் ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணன் தனது திவ்யலோகத்துக்குச் சென்ற பிறகு உலகினர் அஞ்ஞானத்தில் சிக்கி ஞான சூனியர்களாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பாகவத புராணம் உதயமாகி ஒளிவீசத் தொடங்கியது. துவாபர யுக முடிவில் வியாசர் பராசர முனிவரின் மகனாக அவதரித்தார்.

மகாவிஷ்ணுவின் கலாவதாரமாகத் திகழ்ந்த அவர் வேதங்களை வகுத்தார். இதிகாச புராணங்களை இயற்றினார். எனினும், அவருக்கு திருப்தியும், மனஅமைதியும் ஏற்படவில்லை. இத்தகைய சிந்தையுடன் சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து வருந்திக் கொண்டிருக்கும்போது நாரத முனிவர் வந்தார். அவரிடம் வியாசர் தன் மனக்குறையைக் கூறி அதனை நிவர்த்திக்க வேண்டினார்.

அப்போது நாரதர், உலகத்திற்கு க்ஷேமம் தரும் பகவானுடைய புனிதமான குண வைபவங்களை நீர் பாடவில்லை. ஸ்ரீஹரியின் குணங்களை வர்ணிக்கும் நூல்களையே சாதுக்கள் விரும்புவர். அனந்தனின் திவ்ய நாமங்களின் மகிமையைக் கூறும் நூலே மக்கள் பாபங்களைப் போக்கக் கூடியது. ஹரியின் குணங்களைப் பாடி, கேட்பதிலேயே சாதுக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுங்கள்; பக்தியின் பெருமையைக் கூறுங்கள். சமாதியில் அமர்ந்து பகவானுடைய லீலைகளைத் தியானித்து எழுதுங்கள்; பரமானந்தம் பெறுவீர். உலக நன்மை ஏற்படும்; பந்தங்களிலிருந்து விடுபட்டு அமைதியைப் பெறுவீர் என்றார் நாரதர். மேலும் எவன் ஒருவன் தனது ஸ்வதர்மத்தையும் விட்டு பகவானுடைய சரணகமலங்களில் பக்தியுடன் சேவித்து வருகிறானோ அவன் அதன் பயனை அடைவதற்கு முன்பே மரணமடைந்தாலும் அவனுக்கு நற்பேறே கிட்டும் என்றார்.

எடுத்துக்காட்டாக, தனது பூர்வ ஜன்ம வரலாற்றைக் கூறினார். அவர் முற்பிறவியில் வேதவித்துக்களிடம் வேலைக்காரியின் மகனாகத் தோன்றினதாகவும், அவர்களுக்குப் பக்தி சிரத்தையுடன் அவர் பணிவிடை செய்து வந்ததாகவும், அதனால் அவர்களிடம் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்றதாகவும், தான் எதையும் பகவதார்ப்பணமாகவே செய்து வந்ததாகவும் அதனால் பக்தி, ஞானம் வளர்ந்ததாகவும் கூறினார்.
தாயார் இறந்தபோது அவ்விடம் விட்டு வடக்கே புறப்பட்டுச் செல்ல பசி தாகத்தினால் சோர்வு ஏற்பட்டது. ஆங்குள்ள நதியில் நீராடி நீரருந்தி அரச மரத்தனடியில் அமர்ந்து உபதேச மந்திரத்தை ஜபித்து இதயத்திலே பரமாத்மாவைத் தியானித்து வந்ததாகவும் முனிவர் கூறினார். அப்போது அவர் உள்ளக் கோயிலில் பகவான் ஆவிர்பவித்து, மறைந்துவிட தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அப்போது அசரீரி வாக்கு இப்பிறவியில் தன்னைக் காண தகுதி ஏற்படவில்லை என்றார். ஸ்ரீ கிருஷ்ணனிடமே உள்ளத்தை இருத்தி, பற்றின்றி இருந்ததால் சித்த சுத்தி ஏற்பட்டது. பஞ்சபூத சரீரம் விழுந்துவிட புண்ணிய பார்ஷத சரீரம் கிடைத்தது என்றார். பல யுகங்கள் கழிந்த பிறகு உலக சிருஷ்டி ஏற்பட அப்போது பிரம்ம புத்திரனாகப் பிறந்ததாகக் கூறினார். பிறகு நாரதர் சென்று விட்டார். பின்னர் வியாசர் தியானத்தில் ஆழ்ந்து பரமபுருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணனிடம் இணையற்ற பக்தியைத் தரக்கூடிய பாகவத கிரந்தத்தை இயற்றினார்.

அநீதியின் உருவமாகிய கவுரவர்களும், நீதிக்கு இருப்பிடமாகிய பாண்டவர்களும் வாழ்ந்த கால வரலாறே மகாபாரதம். இதை எழுதியவரும் வியாசரே. பாரதப் போரில் இரு தரப்பினிலும் பலர் போர்க்களத்தில் அடிபட்டு வீர சுவர்க்கம் அடைந்தனர். அப்போது துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் திரவுபதியின் புத்திரர்களை, தூங்கிக் கொண்டிருக்கும் போது குரூரமாகக் கொன்றுவிட்டான். இதைக் கண்டு தாயான திரவுபதி கதறி அழுது பரிதவித்துப் போனாள். அருச்சுனன் கோபம் கொண்டு அசுவத்தாமன் தலையைக் கொண்டு வருவதாகக் கூறி அசுவத்தாமனைப் பின் தொடர்ந்தான். பயந்து ஓடிக்கொண்டிருந்த அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான்.

அருச்சுனனும் அதையே பிரயோகிக்க இரண்டும் பயங்கரமாக மோதிக் கொண்டன. பிறகு கிருஷ்ணனின் ஆணைப்படி அருச்சுனன் பிரம்ம அஸ்திரத்தை தன்னிடமே இழுத்துக் கொண்டான். பிறகு அசுவத்தாமாவைப் பிடித்துக் கட்டி, யாக பசுவைப் போல் இழுத்து வந்தான். அப்போது கிருஷ்ணன் அருச்சுனனிடம் அவனுக்குத் தயவு காட்டாதே என்றார்.

பிறகு அருச்சுனனும், கிருஷ்ணனும் திரவுபதியிடம் சென்று அசுவத்தாமாவை தண்டிக்கப் போவதாகக் கூற, திரவுபதி மனமிரங்கி குரு புத்திரனான அசுவத்தாமாவை வணங்கி, அருச்சுனனிடம் அவனை விட்டு விடுமாறு வேண்டினாள். அப்போது அருச்சுனன் அசுவத்தாமனுடைய சிகையை அறுத்து, தலையிலுள்ள சிரோரத்தினத்தையும் அபகரித்தான். பின்னர், அவனை கட்டவிழ்த்து விட்டு கூடாரத்திலிருந்து விரட்டி விட்டான். போரில் உற்றார், உறவினர்களை இழந்து வருந்தும் திருதராஷ்டிரன், காந்தாரி, தர்மபுத்திரர் அவரது சகோதரர்களையும் , குந்தி தேவியையும் ஆறுதல் மொழிகளைக் கூறிச் சமாதானம் செய்தார் கிருஷ்ணன். அப்போது கிருஷ்ணா, காப்பாற்று என்று கூவிக் கொண்டே அபிமன்யுவின் மனைவி உத்திரை கிருஷ்ணனிடம் ஓடிவர கிருஷ்ணன் நடந்தது அறிந்து அசுவத்தாமன் ஏவிய அஸ்திரத்திலிருந்து உத்தரையின் சிசுவைக் காப்பாற்றினார்.

தொடரும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =

Most Popular