கடவுள் நம்பிக்கை பற்றி ஒரு கதை!
ஒரு முதலாளியிடத்தில் இரண்டு நண்பர்கள் வேலை பார்த்து வந்தார்கள். ஒருவன் கடவுள் நம்பிக்கையே இல்லாதவன். மற்றொருவனோ தீவிரமான பக்தன். அடிக்கடி இவர்களுக்குள் கடவுள் பற்றிய சர்ச்சையும், வாதமும் நடந்து கொண்டேயிருக்கும். ஒரு நாள் முதலாளி இல்லாத நேரத்தில் இருவருக்குள்ளும் கடவுள் பற்றிய வாக்கு வாதம் எழுந்து விட்டது. கடவுளும் இல்லை, ஒரு மண்ணுமில்லை.
ஏன்டா இப்படி பட்டையும் கொட்டையும் போட்டுகிட்டு, நீங்கள் ஏமாந்து போறதுமில்லாம, மத்தவங்களையும் ஏமாத்துறீங்க என்றான் கடவுள் மறுப்பாளன். பக்தனுக்கு வந்ததே கோபம. அவன் உடனே எழுந்து கத்தினான். அடப் பாவி ஏன்டா இப்படி காலங் காத்தால அபச குணமாப் பேசுற, உன்னைல்லாம் அந்தக் கடவுள்தான் காப்பாத்தனும் என்று தலையில் அடித்துக் கொண்டான்.
அவன் விடுவதாக இல்லை. நான்தான் கடவுளே இல்லேங்கிறேன், பிறகு என்னடா என்னைய வந்து உங்க கடவுள் மன்னிக்கிறது ? போடாங்க முட்டாப் பயலுகளா என்றான் அவன். உடனே பக்தன் போடா நீதான்டா முட்டாள். கடவுள் நிச்சயமா இருக்கார்டா. நீ பேசுறதுக்கெல்லாம் வட்டியும், முதலுமா அனுபவிப்படா என்று சாபம் விட்டான். ஏய் கடவுள் இருத்தார்னா காட்டுறா பாப்போம் உங்கடவுளை.
நான் என்னடா காட்டுறது ? நீ முதல்ல இல்லைன்னு நிருபிடா பாக்கலாம்…
நீதான்டா கடவுள் இருக்கர்னு சொல்ற, நீதான்டா முதல்ல நிரூபிக்கனும்….
இப்படியாக சண்டையும், சப்தமும் அதிகரித்துக் கொண்டே போனது. அப்பொழுது அங்கு வந்த கணக்குப் பிள்ளை ”டேய் பசங்களா.. முதலாளி வர்றார்டா… பேசாம வேலையப் பாருங்கள. இல்லைன்னு சீட்டக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாரு, பாத்துக்கோங்க” என்று எச்சரிக்கவும் இரண்டு பேரும் கப்சிப் என்று வாயைப் பொத்திக் கொண்டு அவரவர் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர்.
மதியமாகியும் முதலாளி கடைக்கு வரவேயில்லை. சாப்பிடும் பொழுது இருவரும் கணக்குப் பிள்ளையிடம், முதலாளி வந்துகிட்டு இருக்கார்னு சொன்னீங்க. இன்னும் வரலியே ? என்று கேட்டனர். அப்பொழுது அந்த கணக்குப் பிள்ளையான முதியவர் சொன்னார், தம்பிகளா … முதலாளி ஊர்லயே இல்லை. அவர் வர இன்னும் ரெண்டு மூணு நாளு ஆகும். அது எனக்கு முதல்லையே தெரியும். ஆனா, நான் முதலாளி வர்றார்னு சொன்னதும் நீங்க ரெண்டு பேரும் அடங்கி, ஒடுங்கி, அவங்க அவங்க வேலைகளைப் பாத்தீங்களா இல்லையா ? அவர் வருவாரா ? அவர் ஊர்ல இருக்காரா, இல்லையா ? எதுவுமே உங்களுக்குத் தெரியாது.
அது மாதிரிதான் கடவுள் இருக்காரா, இல்லையாங்குறதும். கடவுள் இருக்கிறார்ங்கிற நம்பிக்கைல மனுசன் ஒழுங்கா நடப்பாங்கிறதுதான் விஷயம். நடக்கலைன்னா அவன் பலன் அவனுக்கு. உண்மையான நம்பிக்கை இருக்கிறவன் ஒழுக்கமா வாழ்வான். அதனால நான் என்ன சொலறேன்னா ? கடவுள் இருக்கிறதனால நமக்கு ஒண்ணும் கொறஞ்சிடப் போறதில்லை. மனுசன் மனுசனா வாழனும் அவ்வளவுதான். நம்பிக்கை இருக்கிறவன் கிட்ட ஒரு எச்சரிக்கை இருக்கும். நம்மை ஒருவர் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார் என்கிற பயம் இருக்கும்.
