விநாயகர் உருவான கதை!

29

விநாயகர் உருவான கதை!

ஒரு நாள் பார்வதி தேதி நீராட குளக்கரைக்குச் சென்றார். அப்போது காவலுக்கு யாரும் இல்லையே, தனக்கென ஒரு காவலன் இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் தானே உருவாக்கினால் எப்படி இருக்கும் என நினைத்து, தான் கொண்டு சென்ற மஞ்சளால் ஒரு ஆண் குழந்தை உருவத்தைப் பிடித்தார். அதற்கு உயிர் கொடுத்தார்.
அந்த குழந்தையிடம் நான் நீராடச் செல்கிறேன். எனக்கு காவலாக இரு. உள்ளே யாரையும் அனுமதிக்காதே என கூறிவிட்டுச் சென்றார்.

மிகவும் பொறுப்புடன் காவல் காத்துக் கொண்டிருந்தார் கணேசன். அப்போது அங்கு வந்த சிவபெருமான், உள்ளே நுழைய முயன்றார். ஆனால் பாலகனோ, பார்வதி தேவியின் மணாளன் என தெரியாமல் தடுத்தார். அவர் எடுத்துக் கூறியும், தன் தாய் உத்தரவை யாரும் மீற முடியாது என கூறி சிவனை தடுத்தார்.

இதனால் கோபமடைந்து தன் பரசுவால் சிறுவனின் தலையை வெட்டினார். பின்னர் உள்ளே சென்ற ஈசனைப் பார்த்து எப்படி உள்ளே வந்தீர்கள். எனக்கு காவலாக நின்ற குழந்தை தடுக்கவில்லையா என்றார். அதற்கு சிவபெருமான் சிறுவன் தடுத்து என்னிடம் சண்டையிட்டான் அதனால் அவனின் தலையைத் துண்டித்துவிட்டு உள்ளே வந்ததாக கூறினார்.

பிள்ளையார் பெயர் காரணம்

இதனால் மனமுடைந்த பார்வதி தேவி, தான் உருவாக்கிய குழந்தையை நினைத்து அழுது புலம்பினார். மீண்டும் உயிர் தரும்படி கேட்டுக் கொண்டார். அதனால் பூத கணங்களை அனுப்பி எந்த ஒரு குழந்தை தாய் வேறு திசை நோக்கியும், பிள்ளை வடக்கில் தலை வைத்து படித்திருக்கிறதோ அதன் தலையை வெட்டி எடுத்து வாருங்கள் என உத்தரவிட்டார். ஈசனின் சொல்படி கணங்கள் முதலில் பார்த்தது யானைக் குட்டி. அதனால் அதன் தலையை வேடி எடுத்து வந்து, அந்த ஆண் குழந்தையின் உடம்பில் ஒட்ட வைத்து உயிரி கொடுத்தார் சிவபெருமான்.

இதோ உன் பிள்ளை உயிர் பெற்றது என கூறினார். ஆனால் தான் உருவாக்கிய பிள்ளை இதுவல்லவே, இந்த “பிள்ளை யார்?” என கேட்ட காரணத்தால் விநாயகருக்கும் இன்றும் பிள்ளையார் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விரதம்:

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் தினத்திற்கு முன் தினம் வீட்டை சுத்தம் செய்து வைத்துவிடுங்கள். விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையில் நீராடி, பூஜைக்கு தயாராக வேண்டும்.

பூஜையறை முன் கோலமிட்டு, தலைவாழை இலை போடுங்கள். அதன் நுனி வடக்கு பார்த்து இருக்கட்டும். அதன் மீது பச்சரிசி பரப்பி, அதன் மீது நீங்கள் வாங்கி வந்துள்ள புதிய களிமண் சிலையை வத்து, சந்தனம், குங்கும திலகம் வைக்கவும். அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ மாலை போன்றவற்றைச் சாற்றுங்கள்.

மற்றொரு இலையை விநாயகருக்கு முன் வைத்து அதில் நீங்கள் விநாயகருக்காகச் செய்து வைத்துள்ள நைவேத்தியங்கள். அதாவது கொழுக்கட்டை, லட்டு இனிப்பு வகைகள், பழங்கள், தேங்காய் போன்றவற்றை வைத்து படைக்கவும்.
அவல், பொரி, பொரிகடலை வைக்கவும். பின்னர் விளக்கேற்றி, தீப, தூபங்களைக் கமழச் செய்யுங்கள்.

விநாயகர் சதுர்த்தி விரதம் மந்திரங்கள், உங்களுக்கு தெரிந்த விநாயகர் மந்திரத்தை உச்சரிக்கவும். 108 கணபதி போற்றி, விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை உச்சரிக்கவும்.

சந்திர தரிசனம்:

பொதுவாக எந்த ஒரு சதுர்த்தி தினத்தின் போது சந்திர தரிசனம் செய்வது நல்லதல்ல என்பார்கள். ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று நிலவைப் பார்க்க வேண்டும், தரிசிக்கலாம் என்ற விதிவிலக்கு உண்டு. அன்றைய தினம் சந்திரனைப் பார்த்தால் சந்திரனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்ற புராண கதையும் உண்டும்.
விநாயகர் சதுர்த்தி என்ற அற்புத நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையுடன் வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.