அயோத்தியாவை ஆண்டு வந்த திரிசங்கு என்ற அரசனுக்கு, பூவுலகில் இருக்கும் ஸ்தூல சரீரத்துடன் இந்திரலோகம் செல்ல ஆசை. விச்வாமித்திரருக்கு முன்பு ஒரு முறை உதவியுள்ளதால் அவரை அணுகினான். அவரும் அவனுக்கு உதவ யாகம் ஒன்றைத் தொடங்கினார். யாகத்தின் முடிவில் , திரிசங்கு பூதவுடலோடு மேலே எழும்ப ஆரம்பித்தார். இந்திரலோகத்தின் வாயிலை அடைந்து நிற்க, பூத உடலோடு அங்கு நுழையக் கூடாது என்று இந்திரன் அவரைக் கீழே தள்ளினான்.
திரிசங்கு கீழே விழுவது கண்டு, விசுவாமித்திரர், தனது வலிமையால் அவரை மேலே தள்ளினார். இங்கும் அங்குமாய்த் தள்ளாடிய திரிசங்கு, அந்தரத்தில் தொங்கினார். எவ்வளவு நேரம் தான் இவ்வாறு தொங்குவது? அவருக்கு மூட்டு கொடுக்க விசுவாமித்திரர் ஒரு கழி ஒன்றை வைத்தார். அந்தக் கழியே தென்னை மரமாக உருமாறியதாம். திரிசங்குவின் தலை, தேங்காய் ஆனது. அந்தரங்கத்தில் தொங்கிய போதும், ஆண்டவன் சிந்தனையுடன் திரிசங்கு இருந்ததால், பூஜைகளுக்கேற்ற காய் ஆக தேங்காய் இருக்க, அந்த பரம்பொருள் வரம் கொடுத்தார்.
ஆதியில் தென்னையும் தேங்காயும் தேவலோகத்தில் மட்டுமே இருந்ததாகவும், பரசுராமர் அதை பூமிக்கு கொணர்ந்து வளர்த்த இடமே பின்னர் கேரளம் ஆயிற்று என்பர். நாளி கேரம் என்றால் தேங்காய் என்ற பொருள் உண்டு. இதுவும் தென்னை பற்றிய கதையே, தென்னை அதிகம் இருக்கும் இடம் கேரளம் என்று ஆயிற்று.