திருமலைத் திருப்பதியின் கடவுளான ஏழுமலையானின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கும் வரலாறு உண்டு!
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கடவுள் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டு தான். திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றாலே, ஏழுமலையான் தரிசனம் பிறகு நம் நினைவுக்கு வருவது அங்கு பிரசாதமாக கொடுக்கப்படும் ‘லட்டு’ தான்.
லட்டு என்பது சமஸ்கிருத வார்த்தையான ‘லட்டுகா’ என்பதன் சுருக்கம் ஆகும். அதற்கு ‘சின்ன பந்து’ என்று பொருள். திருப்பதி லட்டும் பந்து வடிவில் இருப்பதால், அதற்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் அது ‘லட்டு’ என்றே சொல்லப்படுகிறது.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப் படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி வேங்கடவனின் பரிபூரண பிரசாதமாகப் பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாகக் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இந்த ‘லட்டு’ உருவான வரலாற்றை இங்கு தெரிந்துகொள்வோமா…
முன்னூறு வருடங்களாக வழங்கப்படும் லட்டு:
கி.பி.830ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர்கள் ஆட்சி காலத்தில், ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல வேண்டுமென்றால் பல நாட்கள் ஆகும். தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது வழக்கம்.
அவர்கள் திரும்பி வீடுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருப்பதி லட்டு பிரசாதம் என்பது ஆரம்பத்திலிருந்தே தரப்படுவதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் லட்டு என்கிற இனிப்பு பிரசாதம் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட 300 வருடங்கள்தான் ஆகிறது.
அதாவது, கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள்.
1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.
அதாவது, லட்டு எப்போது முதல் வழங்கப் பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமாகத் தகவல்கள் அல்லது கல்வெட்டுகள் ஆகியவை இல்லை. கி.பி 17-ம் நூற்றாண்டில் இருந்து லட்டு பிரசாதம் நடைமுறையில் இருந்து வருவதாகத் தகவல்கள் உள்ளன.
ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லட்டு விலை ரூ.25 ஆக உள்ளது. இதன் பெயர் ‘ப்ரோக்தம் லட்டு’. இது தவிர, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் “கல்யாண உற்சவ லட்டு” வழங்கப்படுகிறது, ஒரு லட்டு ரூ.100க்கு விற்கப்படுகிறது.
திருமலை வேங்கடவனின் சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், டோலோத்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை போன்ற பல்வேறு சேவைகளில், கட்டணம் செலுத்திக் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு சிறு லட்டுகள் பிரசாதமாகத் தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன.
பெருமாள் சேவைக்குக் கட்டணம் செலுத்துபவர்களுக்கும், பக்தர்களுக்கு இலவசமாக அளிப்பதற்கும், ஒருவருக்கு இவ்வளவு லட்டு என்று விலைக்குத் தருவதற்கும் திருமலையில் தினமும் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. திருப்பதியில் 17-ம் நூற்றாண்டில் லட்டு அறிமுகமாகிவிட்டாலும், 20-ம் நூற்றாண்டில்தான் பூரண பிரசாதமாக மாறியது என்பதைப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.