திருவாரூர் தேரின் புராணக் கதை!
திருப்பதி கோவில் தங்கத்தால் செய்யப்பட்ட கோபுரத்திற்கு பெயர் போனது. திருப்பதியை போன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை கோபுரமும் தங்கத்தால் செய்யப்பட்டது. இந்த திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தேரின் புராணக் கதை பற்றி பார்ப்போம்…
தங்கத்தேர்:
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவாரூரில் பிறந்த பரவை என்ற நாட்டிய பெண்ணின் மேல் காதல் கொண்டார். அவளுக்கு திருவாரூர் கோவில் என்றால் அத்தனை பிரியம். அவள் வேண்டுகோளுக்காக ராஜேந்திரன் திருவாரூர் கோவில் விமானம் மற்றும் கருவறை சுவர்களை தங்கத்தால் செய்தார்.
தங்கம் காலபோக்கில் பலரால் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மிஞ்சம் இருப்பது கற்கோவில் மட்டுமே. இந்தியாவில் இருந்து அயல் நாட்டுக்கு படையெடுத்து சென்ற ஒரே அரசன் என்ற பெருமை உடையவனும் தற்போதைய சுமத்ரா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளையும் வெற்றி பெற்ற கங்கை கொண்ட சோழன் என்றால் அது ராஜேந்திர சோழன் ஆவார்.
திருவாரூர் தேரின் புராணக் கதை:
தேர் என்றாலே திருவாரூர் என்று சொல்லும் அளவுக்கு திருவாரூர் தேர் உலக பிரசித்தம். ஆனால் தற்போது இருப்பதை விட பெரிய தேர் திருவாரூர் கோவிலில் இருந்ததும் அது தீயில் எறிந்த கதையும் உங்களுக்கு தெரியுமா ?
1926 ஆம் ஆண்டு , கீழவீதியில் இருந்து வழக்கமான உற்சாகத்துடன் திருவாரூர் தேர் புறப்பட்டது. அந்த தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன. (தற்பொழுது உள்ள தேருக்கு 4 சக்கரங்கள் மட்டுமே உள்ளது).
தேர் கமலாலயம் கரையில் மாற்றுரைத்த விநாயகர் கோவில் கடந்து சென்ற பொழுது தீ பற்றி எரிய துடங்கியது. ஆசியாவின் மிக பெரிய தேர் அக்னி தேவனுக்கு இரையானது. தேர் தொடர்ந்து இரண்டு நாட்கள் எரிந்ததாம். அன்றைக்கு பெரிய கட்டிடங்கள் இல்லாத காரணத்தால் பக்கத்து கிராமத்திலும் தேர் எறிவதை பார்க்கமுடிந்ததாம்.
எறிந்த தேருக்கு பதிலாக புதிய தேர் 1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1930 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதுவும் 10 சக்கரங்கள் உடைய தேரே ஆகும். 1930 முதல் 1948 ஆண்டு வரை ஓடிய தேர் பின்னர் நின்றுபோனது. பின்னர் 1970 ஆம் ஆண்டு பழுதுபார்த்து பின்னர் ஓட துடங்கியது. அதுவே தற்போதைய தேராகும்.
ராஜேந்திர சோழன் குறிப்பிட்டுள்ளது என்ன?
ராஜராஜன் சதய நட்சத்திரத்தில் தான் பிறந்தான் என்பதற்கு சான்று திருவாரூரில் மட்டும் தான் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறையின் மேற்குபுறச சுவரில் உள்ள கல்வெட்டுகளில் ராஜேந்திர சோழன் தனது பிறந்த நாள் மற்றும் தனது தந்தையின் பிறந்தநாள் அன்று கோவிலில் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னர் ராஜராஜன் ஐப்பசி மாதத்து சதய நாளிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஆடி மாதத்துத் திருவாதிரையிலும் பிறந்தவர் என்ற குறிப்பு அந்த மன்னராலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராஜராஜனின் பிறந்த வருடம் சொல்லும் கல்வெட்டு இருக்கும் இடம் திருவாரூர் என்பது பெருமையான செய்தியாகும்.
