வன துர்கா தேவி கோயில் வரலாறு!
கதிரமங்கலம் வன துர்கை ஆலயம். இது கும்பகோணத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், மாயவரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கதிராமங்கலம் வன துர்கை ஆலயம் நவ துர்கா ஆலயங்களில் ஒன்று. இந்த ஆலயத்தில் ராகு தோஷம் விலக ராகு காலத்தில் விசேஷ பூஜைகள் செய்கின்றார்கள். மற்ற நாட்களில் மற்ற ஆலயங்களை போலவே இங்கும் தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன. அதனால்தான் இந்த தேவியை ராகு கால தேவி என்றும் அழைக்கின்றார்கள்.
வன துர்கா தேவி யார்? அவள் அங்கு எப்படி அவதரித்தாள்?
வேத காலத்தில் மகிஷாசுரன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பகவான் பிரம்மாவிடம் இருந்து பெற்றிருந்த அரிய வரத்தினால் பூமியில் பிறந்த எவரும் அவனைக் கொல்ல முடியாது என்ற நிலை இருந்தது. அவனோ பூலோகத்திலும் தேவலோகத்தில் இருந்த அனைவரையும் துன்புறுத்தினான். அவனுக்கு துணையாக ஸும்பா மற்றும் நிஸும்பா எனும் இரு அசுரர்களும் துணை நின்றார்கள். அவனுடைய தொல்லைகளைத் தாங்க முடியாமல் போன அனைவரும் பகவான் பிரம்மாவிடம் சென்று அடைக்கலம் ஆனார்கள்.
ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதினால் அவர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணு பகவானிடம் சென்றார்கள். அப்போது விஷ்ணு பகவானும் சிவபெருமானும் பேசிக் கொண்டு இருந்தார்கள். தேவர்களுடைய முறையீட்டைக் கேட்ட இருவரும் கோபம் கொண்டார்கள். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட கோபத்தினால் பெரிய ஒளி மேல் எழும்பியது.
அடுத்த வினாடி அந்த ஒளியில் இருந்து ஒரு பெண் தெய்வம் வெளி வந்தது.
ஒளியில் இருந்து வெளிவந்தவள் தன்னை துர்கை தேவி என்று அறிமுகம் செய்து கொண்ட பின்னர், தான் பார்வதி தேவியின் சக்தியில் இருந்து வெளியானவள் என்றும் பூமியில் பிறந்தவர்களினால் தன்னை அழிக்க முடியாது என பிரும்மதேவரிடம் இருந்து பெற்று இருந்த என்ற வரத்தினால் அழிக்க முடியாமல் இருந்த மகிஷாசுரனை அழிக்கவே ஒளி வெள்ளத்தில் இருந்து பார்வதி தேவி தன்னைப் படைத்து அனுப்பி உள்ளதாகவும் கூறினாள். மேலும் அவள் தான் மகிஷாசுரனை அழித்து அனைவரையும் காப்பேன் என்று சூளுரைக்க மனம் அமைதி மகிழ்ந்து போன தேவர்கள் மகிழ்ச்சியினால் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
பெண் படை தெய்வங்களுடன் மகிஷாசுரமர்த்தினி
அனைத்துக் கடவுட்களிடம் இருந்தும் அரிய சக்திகளை பெற்றுக் கொண்டு அவற்றை தன்னுள் அடக்கிக் கொண்ட தேவியானவள் வேண்டும் என்றே அழகான பெண் உரு எடுத்து அங்குள்ள நந்தவனத்தில் சுற்றித் திரியத் துவங்கினாள். அவளைத் தேடி அசுரர்கள் வருவார்கள் என்பது அவளுக்கு தெரியும்.
பேரானந்தம் தரும் அழகிய பெண்ணைக் கண்ட அசுரர்களுக்கு தலைகால் புரியவில்லை. அவளை அடைய வேண்டும் என நினைத்து மகிஷாசுரனை அழைக்க அவனும் அங்கு வந்து அவள் கைகளை பிடித்து இழுத்துச் செல்ல முயன்றான். கோபமுற்ற அந்தப் பெண் உருவில் இருந்த துர்கா தேவியானவள் தன் படையை அழைத்து, மகிஷாசுரனுடன் போர் தொடுத்தாள்.
சிங்கத்தின் மீது ஏறி அமர்ந்து தனது பல்வேறு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தி போர் புரிய, ஒன்பது நாட்கள் நடந்த போரில் ஒன்பதாம் நாளன்று மஹிஷாசுரனையும் அவனது படையினரையும் ஒட்டு மொத்தமாக அழித்து உலகைக் காத்தாள். மஹிஷாசுரனை அழித்ததினால் அவளை மஹிஷாசூரன் + மர்த்தினி (அழித்தவள்) என்ற இரு வார்த்தைகளும் சேர்ந்த பெயரான மஹிஷாசுரமர்த்தினி என அழைத்தார்கள்.
வன துர்கை தேவியின் மகிமையை எடுத்துக் காட்டும் இன்னொரு கதை தமிழ்ப் புலவரான கம்பருடனானது. கம்பன் அந்த காட்டின் அருகில் இருந்த கிராமத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் ஏழை என்பதினால் சிறிய குடுசையில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் கடும் மழையும் சூறாவளியும் வீசாத துவங்க மேற்கூறை பிய்த்துக் கொண்டு செல்லத் துவங்கியது. வேறு வழி கிடைக்காத கம்பர் தன் குடுசையை காப்பாற்றுமாறு இந்த வன தேவியை மனதார வேண்டிக் கொண்டு மனது துயரத்தினால் அப்படியே படுத்து உறங்கி விட்டார்.
மறுநாள் என்ன ஆச்சர்யம், அவர் குடுசையின் மேற்கூறை நெல் பயிரினால் வேயப்பட்ட கூறையினால் போடப்பட்டு இருந்தது. அது அந்த தேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து கொண்டவர் அந்த தேவியை தினமும் வழிபடலானார். அவளை கதிரால் வேயப்பட்ட கூரையை அமைத்து தன்னைக் காத்தவள் என்பதை குறிக்கும் வகையில் கதிராமங்கல தேவி என அழைக்கத் துவங்க அந்த இடத்தின் பெயர் கதிராமங்கலம் என ஆயிற்று.
இன்னொரு கதை அகஸ்திய முனிவருடன் சம்மந்தப்பட்டது. துர்க்கையாக அவதரித்து மகிஷாசுரனை வதம் செய்த பின் கதிராமங்கலத்தில் தவம் இருந்து தனது பழைய உருவை அடைந்த பார்வதி தேவியை சிவபெருமான் மீண்டும் மணந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமண வைபவத்தை நேரில் காண அகஸ்திய முனிவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது கதிராமங்கல வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து மேலே செல்ல விடாமல் பெரிய அசுரன் ஒருவன் அவரை தடுத்து நிறுத்தினான்.
மாபெரும் உருவம் கொண்டிருந்தவனை அவரால் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே செல்ல முடியவில்லை என்பதின் காரணம் அவன் பல அரிய வரங்கள் பலவற்றையும் பெற்று அசுர பலம் கொண்டிருந்தான். அவனை அழிக்க வேண்டும் எனில் அவனைப் போலவே அதே சக்தியைப் பெற்று இருக்க வேண்டும் என்பது விதி. ஆகவே அவனை எதிர்க்கும் சக்தி இல்லாத அகஸ்திய முனிவர் அந்த காட்டில் இருந்த பெயர் தெரியாத தேவியின் சிலையை துர்கை தேவியாக கருதி தனக்கு அந்த அசுரனை வெல்லும் சக்தியைக் கொடுக்குமாறு வணங்கித் துதித்தார்.
என்ன அதிசயம் அடுத்த நொடியில் அவருக்கு அசுர பலம் வந்தது. தன்னை வழிமறித்து தடுத்த அந்த அசுரனை நொடிப் பொழுதில் அடித்து விரட்டிவிட்டு தனக்கு இத்தகைய பலம் எங்கிருந்து வந்தது என பிரமித்து நின்றார். அப்போது துர்கை தேவி அவர் முன் காட்சி அளித்து தானே அவருக்கு அத்தகைய சக்தியைக் கொடுத்ததாகவும், தன்னுடைய திருமணத்தைக் காண வந்து சேருமாறும் கூறிவிட்டு மறைந்து விட்டாள்.
அதற்குப் பிறகுதான் கதிராமங்கல வனத்தில் இருந்த சிலை துர்கையின் சிலை என்பதும், அவள் பார்வதி தேவியின் அவதாரம் என்பதும் அகத்திய முனிவருக்குப் புரிந்தது. அடுத்து அவர் அந்த சிலையை முறையாக அங்கு பிரதிஷ்டை செய்து வழிபாட்டுத் தலம் அமைத்தப் பின்னர் அவளே வன துர்கா தேவி என அவளுக்கு பெயர் சூட்டிவிட்டு சென்றாராம். அதனால்தான் அவளுக்கு வன துர்கா தேவி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இன்றும் ஆலயத்தின் மேற்கூறையில் ஒரு இடைவெளி விடப்பட்டு அதை நெல் கதிரால் மூடி வைத்து உள்ளார்களாம். அதன் காரணம் தினமும் அந்த தேவி காசிக்கு சென்று கங்கையில் குளித்து விட்டு திரும்ப வருவதாக உள்ள ஐதீகமே ஆகும். இந்த ஆலயத்தில் மற்ற ஆலயங்களை போல வினாயகப் பெருமானுக்கு தனி சன்னதி கிடையாது.
அதன் காரணம் பார்வதியின் மகனான அவர் தனது தாயார் பார்வதி தேவியானவள், துர்க்கையாக அவதரித்து அங்கு தவம் இருந்து அந்த பூமியை புனிதப் பூமியாக்கி உள்ளதால், அவளுக்கே முதல் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காக அவளுடன் ஐக்கியமாகி அங்கு உள்ளாராம். வன துர்கை தேவிக்கு செய்யப்படும் பூஜையை தானும் அவளுக்குள் இருந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறாராம்.
