வராஹ புராணம் – பகுதி 23 – விஷ்ணுவின் ஈடு இணையற்ற தன்மை

419

அயன், அரனைக் காட்டிலும் அரியே மேலானவர். அவரிடம் சத்வகுணம் மட்டுமே உள்ளது. பிரம்மாவிடம் சத்வ குணம், ராஜச குணம் நிறைந்துள்ளது. சிவனிடம் ஸத்துவ, ராஜஸ, தாமச குணங்கள் மூன்றும் காணப்படும். சிவபெருமானே விஷ்ணுவின் ஈடற்ற தன்மையை ஏற்றுக் கொண்டார். பிரம்மா சிவபெருமானைச் சிருஷ்டி செய்யுமாறு கூறினார். அப்போது அவர் அதற்காகச் சிவன் நீருக்குள் இருந்து தவம் செய்தார். அவர் முன் கட்டை விரல் அளவில் நாராயணன் தோன்றினார். அதனைச் சிவன் நிராகரித்தார். அவர் தவம் தொடர்ந்தது. அடுத்து பதினொன்று பயங்கர உருவங்கள் தோன்றின. அவர்களை யாரென்று பரமன் கேட்க அவை பதிலேதும் கூறாமல் மறைந்துவிட்டன. அடுத்து ஜொலிக்கும், பிரகாசம் மிக்க உருவம் ஒன்று தோன்றியது.

சிவனார் அவரை யார் என்று கேட்க நான் நாராயணன். என் இருப்பிடம் நீர். இதற்கு முன் தோன்றிய பதினொன்று உருவங்கள் ஆதித்தியர்கள். நான் உனக்கு இப்போது தெய்வீகப் பார்வை அளித்ததால் உன்னால் இப்போது என்னைக் காண முடிகிறது. நீ சக்தி வாய்ந்தவன். சர்வஜ்ஞன். மற்ற கடவுளர்களால் பூசிக்கத்தக்கவன். என்னருளின்றி நீ என்னைக் காணமுடியாது என்றார். முதலில் அற்ப உருவில் காட்சி அளித்த விஷ்ணு பின்னர் விச்வரூபம் எடுத்துக் காட்டினார். அவர் தலை இருக்குமிடமே காணமுடியாத அளவுக்கு அவரது பேருரு இருந்தது. இவ்வாறு தன் சக்தியைச் சிவனாருக்குக் காட்டி நாராயணன் திடீரென்று மறைந்து விட்டார். இதன் பயனாகச் சிவபெருமான் நாராயணனே முழுமுதற் கடவுள் எனக் கூறினார்.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!