சத்ய யுகத்தில் மன்னன் சுப்ரதிகனுக்கும், அவன் மனைவி வித்யுத் பிரமாவுக்கும் துர்ஜயன் என்றொரு மகன் பிறந்தான். துர்வாச முனிவர் துர்ஜயனுக்கு ஒரு வரமும், ஒரு சாபமும் தந்தார். அவன் யாருடைய கண்களில் புலப்படாமல் இருக்குமாறு வரமும், கடின இதயம் கொண்டவனாக இருக்க வேண்டுமென்கிற சாபமும் துர்வாச முனிவரால் ஏற்பட்டன. துர்ஜயன் மந்தர மலைக்குச் சென்ற போது அங்கு இரண்டு அழகிய பெண்களைக் கண்டான். ஹெட்ரியின் மகள் சுகேஷி, சுஹேத்ரியின் மகள் மிச்ரகேசி. அந்த அழகிகள் மீது காதல் கொண்டு அவர்களை மணந்து இரண்டு புத்திரர்களைப் பெற்றான். துர்வாசரிடம் மறைந்து இருக்கும் வரம் பெற்ற துர்ஜயன் மூன்று உலகங்களையும் வென்று, இந்திரனையும் சொர்க்கத்திலிருந்து விரட்டி அடித்தான்.
ஒரு சமயம் துர்ஜயன் வேட்டையாடச் சென்றவன் கவுரமுகர் என்ற முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அவனுடன் ஏராளமான படைவீரர்களும் இருந்தனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தல் எளிதான காரியமல்ல. எனினும் முனிவர், தான் நாராயணனிடமிருந்து பெற்ற அதிசய சிந்தாமணி என்னும் ரத்தினத்தின் உதவியால் துர்ஜயனுக்கும், அவனது படைவீரர்களுக்கும் உண்ண உணவும், இருக்க இடமும் ஏற்பாடு செய்தார் கவுரமுக முனிவர். (சிந்தாமணி, கல்பதரு போல் கேட்டதைக் கொடுக்கவல்ல ரத்தினம் ஆகும்.) பேராசை கொண்ட துர்ஜயன் அந்த அதிசய சக்திவாய்ந்த மணியைப் பெற ஆசை கொண்டான். அதற்காகத் தனது அமைச்சர் விரோசனனை முனிவரிடம் அனுப்பினான். ஆனால், கவுரமுக முனிவர் அதைத் தர முடியாதென்று கூறி மறுத்துவிட்டார். துர்ஜயன் அதற்காக ஒரு படையை ஏவினான். ஆனால், முனிவரிடமிருந்து அந்த சிந்தாமணியை முனிவர் வேண்ட அதிலிருந்து வீரர்கள் தோன்றி மந்திரி விரோசனனைக் கொன்றனர்.
ஹெட்ரி, சுஹேத்ரி இருவரும் துர்ஜயனுக்கு உதவியாக அவரவர் படையை அனுப்பினர். கவுரமுக முனிவர் விஷ்ணுவை வேண்ட விஷ்ணு தனது சக்கராயுதத்தால் அனைவரையும் கொன்றார். காலத்தில் நிமேஷம் (அ) நிமிஷம் என்பது சிறு அளவு போரில் இத்தகைய பெரிய படையை விஷ்ணு நிமிஷ மாத்திரத்தில் அழித்ததால் அந்த இடம் நைமிசாரணியம் என்ற பெயர் பெற்றது. துர்ஜயனின் மரணம் அவனது தந்தை சுப்ரதீகனுக்குப் பெரும் துயரம் விளைவித்தது. எனினும் அவன் விஷ்ணு பக்தியிலிருந்து சிறிதும் மாறவில்லை. இதனால் மகிழ்ச்சியுற்ற பகவான் விஷ்ணு திருப்தியுற்றவராய் அவருடைய நிஜ உருவைச் சுப்ரதீபனுக்குக் காட்டி முக்தி அளித்தார். கவுரமுக முனிவர் நைமிசாரணியத்தில் பிரபாசம் என்ற இடத்தில் தவம் செய்யலானார். அங்குத்தான் அவர் மார்க்கண்டேய முனிவரை சந்தித்தார். மார்க்கண்டேயர் அவருக்கு உத்திரக்கிரியை சடங்குகள் பற்றி அறிவுரை பகர்ந்தார்.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!
