வராஹ புராணம் பகுதி 18 துவாதசி

671

(ஏகாதசி விரதத்தை பூர்த்தி செய்யும் நாள் இதனை துவாதசி பரனை என்பர் காலை 6 முதல் 7 க்குள் பெருமாள் சேவித்து உணவு உண்டால் தான் விரததின் பலன். கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி கெளசிக துவாதசி வராஹனுக்கு மிக உகந்த நாள் )

சுக்கிலபட்சம் பன்னிரண்டாம் நாள் அனுஷ்டிப்பது துவாதசி திதி. வாயுதேவன் வேண்டிக் கொண்டதால், நாராயணன் விஷ்ணுவாக அவதரித்தார். லட்சுமி தேவி விஷ்ணுவை மணந்து கொண்டது துவாதசி அன்றுதான். இவர்கள் இருவரையும் துவாதசி அன்று வழிபடுவது நல்லது.

திரயோதசி

சுக்கிலபட்சம் பதின்மூன்றாம் நாள் திரயோதசி எனப்படும். பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தி பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு வலப்பக்கமிருந்து தோன்றினவன் தர்மதேவன். அவனுக்கு நான்கு கால்களும், மூன்று கொம்புகளும் இருந்தன. எருது வடிவில் தோன்றி யிருந்தான். மக்கள் நல்வழியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதே தர்மதேவனின் கடமையாகும். மக்கள் தவறான பாதையில் சென்றால், தர்ம தேவதையின் ஒரு கால் இல்லாமல் போகும். அதாவது சத்யயுகத்தில் தர்ம தேவதைக்கு நான்கு கால்களும், திரேதா யுகத்தில் மூன்று கால்களும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களும், கலியுகத்தில் ஒரு காலும் இருக்கும்.

ஒரு சமயம் பிரஹஸ்பதியின் மனைவியாகிய தாராவை, சந்திரன் கவர்ந்து சென்றான். இதைக் கேள்வியுற்ற தர்மதேவன் மிகவும் மனம் வருந்தி காட்டில் சென்று தவம் புரியலானான். தர்மத்தின் தலைவனான தர்மதேவன் இல்லாமையால், எங்கும் சட்டம் சீர்கெட்டு, கொடுரமான நிகழ்ச்சிகளே நடைபெற்றன. இதைக் கண்ட பிரம்மன், திரயோதசி திதி என்ற தர்மதேவனைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். ஆதலால் இத்திதி மிகச் சிறப்புப் பெற்றதாகும். சுக்கிலபட்சம் பதினான்காம் நாள் ருத்திரனைப் பற்றி நினைப்பவர்கள் விரதம் அனுஷ்டிப்பவர்கள், எல்லாப் பாவங்களினின்றும் விடுதலை பெறுவர்.

அமாவாசை

பிரம்மனிடத்து தோன்றியவர்களாகிய தன்மாத்திரர்கள் என்பவர்கள் ஆகாயத்திலே தங்கி சோமபானத்தை உணவாகக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களே மக்கள் அனைவருக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களைத் திருப்திப்படுத்த அமாவாசை அன்றைக்கு எள், தண்ணிர், தர்ப்பை என்பவற்றைப் படைத்து வழிபடுவதால் இவர்கள் திருப்தி அடைகிறார்கள். இதற்குத் தர்ப்பணம் என்பது பெயர்.

பெளர்ணமி

சோமன் அல்லது சந்திரன் என்று அழைக்கப்படும் தேவன், அத்ரி முனிவரின் மகனாவான். தட்சனின் பெண்களுள் இருபத்தி ஏழு பெண்களை மணந்து கொண்டவன். அவர்களுள் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு செலுத்தியதால், மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். தட்சன் அறிவுரை கூறியும், சோமன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. கடும் கோபம் கொண்ட தட்சன் சாபமிட்டான். ஆகையால் சந்திரன் சிறிது சிறிதாகத் தேய்ந்து பதினைந்தாம் நாள் அமாவாசை அன்று மறைந்து விடுகிறான். மருந்தாகும் மூலிகைச் செடிகள், சந்திரன் மறைந்து விடுவதால் தங்களின் ஆற்றலை இழந்து விட்டன. தேவர்கள் சென்று விஷ்ணுவிடம் முறையிட, அவர் பாற்கடலைக் கடையும்படி கூறினார்.