வராஹ புராணம் – பகுதி 28 -கைசிக புராணம்

164

வராக அவதாரம் எடுத்து பகவான் விஷ்ணு பூமாதேவியை ரக்ஷித்தபோது, பூமாதேவி, பூமியிலுள்ள மக்கள் சம்சாரபந்தம் என்ற கடலிலிருந்து கரை ஏற ஓர் உபாயம் அருளுமாறு கேட்க, பகவான் தன்னைப் பாடி உகப்பித்தால் சம்சாரக் கடலிலிருந்து கரை ஏறலாம் என்று கான ரூபமான உபாயத்தை நம்பாடுவான் என்கிற பரம பாகவதோத்தமனின் சரிதையைக் கூறி மெய்ப்பிக்கிறான்.

திருக்குறுங்குடியில் அலைமகள், நிலமகள் இருபுறமிருக்க பெருமாள் கோயில் கொண்டிருக்கிறான். அவ்வூரின் வெளியில் ஒரு சண்டாளன் பகவத் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நாடோறும் கையில் வீணையோடு அபர ராத்திரியில் புறப்பட்டு சந்நிதிக்கருகில் அனுமதிக்கப்பட்ட தூரத்தில் நின்று எம்பெருமான் புகழை வீணையோடு இசையுடன் பாடுவது வழக்கம். எம்பெருமான் புகழையே பாடி வந்ததால் இவனுக்கு நம்பாடுவான் என்ற பெயர் வழங்கலாயிற்று. இவ்வாறு பல ஆண்டுகள் நடைபெற்று வர ஒரு கார்த்திகை சுக்கிலபக்ஷ ஏகாதசியன்று ராத்திரி ஜாகரவிரதத்தை உடையவனாய் வீணையும், கையுமாய் திருக்குறுங்குடி எம்பெருமானை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது சோமசர்மா என்பவன் அந்தணனாய் பிறந்தும் யாகம் செய்கையில் தவறு நேர்ந்ததால் பிரம்மாராக்ஷசனாகி அகோர பசி, தாகத்துடன் நின்று கொண்டு, அவ்வழி வந்த நம் பாடுவானை உண்ணப் போவதாகக் கூறிட பற்றற்ற பக்தன் மகிழ்ச்சி அடைந்து தான் கைக்கொண்டிருக்கும் ஜாகர விரதத்தை முடிக்க எண்ணி பிரம்மராக்ஷசிடம் கீழ்வருமாறு கூறினான்.

நீ என்னை உண்டு பசியாறுவதில் எனக்கு மகிழ்ச்சியே. எனினும், நான் திருக்குறுங்குடி பெருமானைப் பாடி உகப்பித்து ஜாகர விரதத்தை முடித்துக் கொண்டு வருமளவும் அவகாசம் கொடுக்க வேண்டும் என வேண்டினான். அப்போது அவன் தப்பிப் போக முயல்வதாக எண்ணி பிரம்மராக்ஷசன் அவனை விடமாட்டேன் என்றது. அப்போது நம் பாடுவான் பல உறுதிமொழிகளைக் கூறிட, அது அவனைப் போக விட்டது. அவனும் தன் விரதப்படி எம்பெருமானைக் கிட்டி, பல பண்களால் பாடி மகிழ்வித்து தன்னுடல் ஒரு நற்காரியத்துக்குப் பயன்படுவது பற்றிச் சந்தோஷத்துடன் விரைந்து வந்து பிரம்மராக்ஷசிடம் தன்னை விரைவில் உண்ணுமாறு கூறினான். இவன் பெருமையைப் பிரம்மராக்ஷசன் அறிந்து அவனைத் தலை வணங்கி தன் பாவம் நீங்கித் தான் நற்கதி பெற பாடுவானின் பாட்டின் பயனைத் தனக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டது. பாடுவான் இசையாதபோது அவன் காலில் விழுந்து அன்றிரவு பாடின பாட்டுக்களில் ஒன்றின் பயனையாவது தனக்குத் தந்து தன்னைக் கரை எற்ற வேண்டும் என்று மன்றாடியது. பாடுவானும் கைசிகப் பண்ணை வைத்துப் பாடிய பாட்டின் பலனை அளிக்க, அதனால் அந்தப் பிரம்மராக்ஷசன் அச்சரீரம் நீங்கி நற்பேறு பெற்றான்.

நம்பாடுவானும் முன் போலவே எம்பெருமானைப் பாடி உகப்பித்துக் கொண்டிருந்த சண்டாள சரீரம் போன பிறகு தேவசரீரம் பெற்று சொர்க்கம் அடைந்தான். அங்கும் பகவானையே பாடிப் பிறகு உயர்ந்த குலத்தில் பிறந்து மோக்ஷம் அடைந்தான். இதனால் சம்சார சாகரத்திலிருந்து கரையேற சுலபமான வழி எம்பெருமானைப் பாடி மகிழ்விப்பதே ஆகும் என அறியலாம்.

நம்பாடுவான் பிரம்மராக்ஷனிடம் தான் திரும்பி வருவதாக உறுதிமொழி கூறும்போது அவ்வாறு செய்யாவிட்டால் தான் பாவம் செய்தவனாகி நரகம் அடைவதாகக் கூறினான். அவன் பதினெட்டு வகைப் பாவங்களைப் பற்றிக் கூறுகிறான்.

1) சத்தியத்தை மீறுதல்.

2) மாற்றான் மனைவியைப் புணர்தல்.

3) தனக்கும் உடன் உண்போனுக்கும் உணவில் ஏற்றத்தாழ்வு காட்டுவது.

4) பிராமணனுக்கு பூதானம் பண்ணி அதனைத் திரும்பப் பெறுவது.

5) அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து அனுபவித்து, அவளது முதுமையில் அவள் மீது குற்றம் சுமத்திக் கைவிடுவது.

6) அமாவாசை அன்று தர்ப்பண ரூபத்தில் பித்ரு சிராத்தம் செய்து அன்றிரவு மனைவியிடம் சுகித்து இருப்பது.

7) உணவிட்டவனை நிந்திப்பது.

8) ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்விப்பதாகக் கூறி, அவ்வாறு செய்யாதது.

9) ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்பது.

10) வாக்களித்தபடி தானம் செய்யாதிருத்தல்.

11) நண்பன் மனைவி மீது காமபரவசனாகிப் புணர்தல்.

12) குரு பத்தினியையும், மன்னன் மனைவியையும் காமபரவசனாகிப் புணர்தல்.

13) இரண்டு மனைவியரை விவாகம் செய்து கொண்டு ஒருத்தியிடம் அன்பு கொண்டு, மற்றவளைத் தள்ளி வைத்தல்.

14) கற்புக்கரசியான தன் மனைவியை இளமையில் விட்டு விடுதல்.

15) தாகத்துடன் வரும் பசுக்கூட்டத்தைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.

16) பிரம்மஹத்தியை ஒன்றைச் செய்தவனுக்குப் பெரியோர் இடும் சாபம்.

17) வாசுதேவனை விட்டு இதர தேவதைகளை உபாசனை செய்வது.

18) ஸ்ரீமந்நாராயணனோடு மற்ற தேவதைகளைச் சமமாக நினைத்தல்.

மேற்கூறிய பாவங்கள் ஒன்றைவிட மற்றொன்று அதிகபாவம் உடையது.
பாவங்கள் அனைத்திலும் மிகக்கொடுமையானது ஸ்ரீமந்நாராயணனையும் இதர தேவர்களையும் சமமாக நினைப்பதே ஆகும். மேற்படி பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக்க வேண்டும் என்பதே வராஹ புராணத்தின் உள்ளீடான கைசிக புராணத்தின் சாரமாகும். இப்புராணம் திவ்ய தேசங்களில் கைசிக ஏகாதசி அன்று இரவில் ஸேவிக்கப்படுவதுடன், திருக்குறுங்குடியில் நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.

ஓம் பூவராஹாய வித்மஹே
ஹிரண்ய கற்பாய தீமஹீ
தந்நோ க்ரோத ப்ரசோதயாத்!

ஸ்ரீவராக புராணத்திலுள்ளபடியான கைசிக மகாத்மியம்.

கைசிக ஏகாதசியன்றும், துவாதசியன்றும் இதை படித்தாலோ, பிறர் படிக்க கேட்டாலோ, ஏகாதசி விரதமிருந்த பலன் கிட்டும் என ஸ்ரீவராகமூர்த்தியே பூமிப் பிராட்டியாரிடம் சொல்லும் முகமாக அருளிச்செய்திருக்கிறார்.