ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 14

400

மறுநாள் முதல் ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி அரச மாளிகை ஆட்டு இடையன் எப்போதும் போல மாடு மேய்க்க வனத்துக்குப் போகும்போது நாரதர் ஒரு இடையன் போன்ற இன்னொரு வேஷத்தில் வனத்துக்குச் சென்று அவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, பேசிக்கொண்டே செல்வது போல அவன் செல்லும் பாதையை திசை திருப்பி விஷ்ணு அமர்ந்து இருந்த புற்றின் அருகில் இருந்த புற்கள் மீது சென்று மாடுகளை மேய வைக்க ஏற்பாடு செய்தார். அங்கு நிறையப் புற்கள் இருந்ததினால் இடையனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பசுக்களை அந்தப் பகுதியில் இருந்தப் புற்கள் மீது மேய விட்டான்.

அந்த தறுமணத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட பசுவும் கன்றுமாக இருந்த சிவனும், பிரும்மாவும் விஷ்ணு அமர்ந்திருந்த புற்றின் அருகில் சென்று அதன் மீது ஒரு ஓட்டையை ஏற்படுத்தி அதன் மூலம் விஷ்ணுவின் வாயில் பாலை சுரந்து அவருக்கு பலமூட்டினார்கள். விஷ்ணுவும் லஷ்மி, லஷ்மி என முனகிக் கொண்டே அந்தப் பாலை பருகினாலும், அங்கேயே தன்னை மறந்து அமர்ந்திருந்தார். அடுத்த வேலை புற்றில் இருந்து அவரை வெளியில் வரவழைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை யோசனை செய்தவர்கள் இன்னோர் உபாயத்தை செய்ய கையாள வேண்டி இருந்தது.

சில நாட்கள் ஆன பின் அந்த மாடு கறக்கும் பால் மிகவும் குறைந்து போவதாக தொழுவத்தில் கூறினார்கள். ஆகவே அந்த மாட்டு இடையன் அந்தப் பசு நன்றாக புல்லைத் தின்கிறதா என்று கவனிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் ஆட்டு இடையன் ஒருநாள் எதேற்சையாக அந்த பசுவும் கன்றும் அந்தப் புற்றின் அருகில் சென்று தினமும் அதில் இருந்த ஒரு ஓட்டையில் பாலை சுரப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தான். ஆகவே அதைத் தடுக்க அவன் அவற்றை வேறு இடத்துக்கு வழிய இழுத்துச் சென்று மேய விட்டாலும் எப்படியாவது ஒரு முறை அவை அவனுடைய கவனத்தை திருப்பி அங்கு சென்று பாலை சுரப்பதைக் கண்டான். அவன் சில நாட்கள் அதை கவனித்தப் பின் அங்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெரிய புற்று உள்ளதையும், அதன் உள்ளே இருந்து எதோ குரல் வருவதையும் கண்டு அந்த செய்தியை மன்னனின் மன்னனின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தான்.

ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொண்டு அந்த பசு மாடு புற்றின் மீது பாலை
சுரந்து கொண்டு இருப்பதைப் பார்த்தான் மன்னும் மற்றவர்களும் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் தொழுவத்தில் இருந்தவர்கள் அந்த பசு சில நாட்களாக பால் சுறப்பதை பாதிக்கும் அதிகமாக குறைத்துக் கொண்டு விட்டது என்பதையும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க, அதற்கு எதோ ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணியவர்கள் மறுநாள் அந்தப் பசுவும் கன்றும் எந்த இடத்தில் சென்று பாலை சுரக்கிறதோ அங்கு சென்று அந்தப் புற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என முடிவு செய்தார்கள்.

அதற்கு முன்னால் மன்னன் அந்த ஆட்டு இடையனை அழைத்து ‘இன்று கடைசி முறையாக போய் அங்கு நடப்பதைப் பார். இன்றும் அப்படியே நடந்தால் என்னிடம் ஓடி வந்து உடனே செய்தியைக் கூறு. ஆனால் நீ கண்டது பொய்யாக இருந்தால் உன் தலையை வெட்டி விடுவேன்’ என பயமுறுத்தி அனுப்பி வைத்தான். ஆகவே அன்றும் எப்போதும் போல ஆட்டு இடையன் வனத்துக்கு பசுக்களை ஓட்டிச் சென்றான். மறைந்து இருந்து கொண்டு அந்த பசுவும் கன்றும் எங்கு சென்று பாலை சுரக்கிறது என்று கவனித்தப் பின் அது பாலை என்றும் சுரக்கும் இடத்திலேயே சென்று அன்றும் சுரக்கத் துவங்குவதைக் கண்டப் பின் மன்னனின் கண்டிப்பான எச்சரிக்கையினால் எங்கே தன் தலை வெட்டப்பட்டு விடுமோ என பயந்து, ஆத்திரம் அடைந்து அந்த மாட்டினால்தானே தனக்கு இத்தனை தொந்தரவும் வந்தது என்று எண்ணிக் கொண்டு பசுவையும் கன்றையும் தனது தடியால் அடிக்கப் பாய்ந்து சென்றான்.

புற்றின் மீது பாலை சுரந்த மாட்டை அடிக்க தடியுடன் ஓடிச் சென்றான் இடையன் அதை புற்றில் இருந்து கவனித்த விஷ்ணுவானவர் அப்படியே வெளியில் பாய்ந்து வந்து அந்த அடி மாட்டின் தலையில் விழாமல் தடுக்க முயல அந்த அடி அவர் தலையில் விழுந்தது. அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு மாட்டின் மீது வழிந்தது. அதைக் கண்ட இடையன் அப்படியே மூர்ச்சைப் போட்டு விழுந்தான்.

அடுத்த கணம் அந்த பசு மாடு கத்திக் கொண்டே அரண்மனைக்கு ஓடி மன்னன் முன்னால் சென்று நின்றது. மாட்டின் மீது ரத்தம் வழிந்து இருந்ததைக் கண்ட மன்னன் திடுக்கிட்டு எழுந்து என்ன நடந்தது எனக் கத்தியவாறு அதன் அருகில் செல்ல, அந்த மாடும் தன்னுடன் வருமாறு தலையால் ஒருவித செய்கையை காட்டி விட்டு ஓடத் துவங்கியது. அனைவரும் அதன் பின்னால் ஓட அது வனப் பகுதியில் இடையன் மயங்கிக் கிடந்த இடத்தை அடைந்தபோது, அங்கு இருந்த விஷ்ணு கோபத்துடன் அந்த அரசனுக்குக் காட்சி தந்தார். அதே நேரத்தில் ஆட்டு இடையனும் மூர்ச்சை தெளிந்து எழுந்து கொண்டு நடந்த விவரத்தைக் கூறினான். மன்னன் தன் எதிரில் நின்றிருந்த விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து வணங்கி நடந்த தவறுக்கு மன்னிப்பைக் கோரினான். ஆனால் அதற்குள் விஷ்ணு மக்கள் செய்யும் தவறு மகேசனையே சாரும் என்பதினால் தன்னை அடித்த இடையன் தானாக அதை செய்யவில்லை, அப்படி செய்ய அவன் உணர்ச்சிகளைத் தூண்டியதற்கான குற்றம் மன்னனையே போய் சேரும் என்பதினால் அவன் பிசாசாகக் கடவது என அவனுக்கு சாபமிட்டுவிட அந்தஷணமே மன்னன் ஒரு பிசாசாகி விட்டான்.

தான் தெரியாமல் செய்துவிட்ட தவறை மன்னித்து தனக்கு கருணைக் காட்டுமாறு பிசாசு வடிவில்
இருந்த மன்னன் விஷ்ணுவை வேண்டிக் கொண்டான் தன்னை மன்னித்து விட்டு மீண்டும் மனிதப் பிறவி எடுத்து பாப நிவாரணம் செய்ய அருள் புரியுமாறு அந்த பிசாசு உருவில் இருந்த மன்னன் விஷ்ணுவிடம் கெஞ்சத் துவங்க விஷ்ணுவும் அதன் மீது கருணைக் கொண்டு, இன்னும் சில காலத்திலேயே அந்த பிசாசின் வாழ்வு முடிந்து விடும் என்றும், அதன் பின்னர் அது சோழ வம்சத்திலேயே ஒரு மன்னனின் மகனாகப் பிறந்து சோழ நாட்டை அரசாள்வான் என்றும், அப்போது அவனுக்குப் பிறக்கும் அவனுடைய மகளை தான் மணப்பேன் என்றும் வாக்கு கொடுத்தார். அது போலவே, அந்த ஆட்டு இடையனும் எந்த தவறையும் தானாக செய்யாமல் அரசனின் பயமுறுத்தலால் உந்தப்பட்டு அப்படி செய்திருந்ததினால் தன்னை முதலில் தரிசனம் செய்தவன் அந்த இடையன் என்பதினால் தான் ஸ்ரீனிவாசராக அவதரித்து எந்த ஆலயத்தில் அமர்வேனோ அந்த ஆலயத்தில் அவன் வம்சத்தை சார்ந்தவர்களே முதல் தரிசனத்தைப் பெறுவார்கள் என்றும் அவனுக்கு அருள் புரிந்தார். ஆகவேதான் அந்த ஆட்டு இடையனின் வம்சாவளிகலே திருப்பதியில் முதல் தரிசனத்தைப் பெறுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இது பற்றி அதிக விவரம் தெரியவில்லை.

…..தொடரும்