நினைத்ததை நிறைவேற்றும் தசாவதார பிரார்த்தனை.

613

1. வேதங்களை கவர்ந்து சென்று கடலில் ஒளித்து வைத்த வலிமை மிக்க சோமகாசுரனை வதம் செய்வதற்காக மச்சாவதாரம் எடுத்து உலக உயிர்களை காத்தவனே..! துளசி மாலை அணிந்தவனே..! உன் திருவடிகளுக்கு வணக்கம்.!

2. அலைகளையுடைய திருப்பாற்கடலை அமிர்தம் வேண்டி கடைந்த போது தேவர்களின் உயிர் காப்பதற்காக மந்திர மலையைத் தாங்கும் ஆமை வடிவம் எடுத்தவனே..! உன் பாதங்களுக்கு வணக்கம்..!

3. பரந்த பூமியை பாயாகச் சுருட்டி பாதாளத்தில் மறைத்து வைத்த இரண்யாட்சனை வதம்; செய்வதற்காக கொம்புடையவராக அவதாரம் எடுத்து உலகை மீட்டவனே..! திருமகள் வீற்றிருக்கும் திருமார்பை உடையவனே..! உன் கமல பாதங்களுக்கு வணக்கம்..!

4. மலை போன்ற பெரிய மார்புடைய இரண்யனைக் கொன்று பக்தன் பிரகலாதனைக் காக்க தூணைப்பிளந்து கொண்டு வெளிவந்த நரசிம்ம மூர்த்தியே..! உன் பொற்பாதங்களுக்கு வணக்கம்..!

5. காஷ்யபருக்கும் அதிதிக்கும் புத்திரனாக பிறந்து ஆணவம் கொண்டிருந்த மகாபலி சக்கரவர்த்தியிடம் மண் கேட்டு சென்று உலகை ஈரடியால் அளந்து மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்து ஆட்கொண்ட வாமனனே..! உன் செந்தாமரை பாதங்களுக்கு வணக்கம்..!

6. தவ வலிமை மிக்க ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து மறையோர்களை மதிக்கத் தவறிய அசுரர்களை முழவதுமாக அழித்து, வேதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பரசுராமனே..! ஐவகை ஆயுதங்களை ஏந்தியவரே..! உன் வெண்பஞ்சு பாதங்களுக்கு வணக்கம்..!

7. அயோத்தி மன்னர் தசரதருக்கும் கௌசல்யாவுக்கும் மகனாகப் பிறந்து, விஸ்வாமித்ர முனிவருடன் சென்று யாகத்தைக் காத்து அகலிகைக்கு சாப விமோவனம் தந்து, ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்ந்து ஒழுக்கம் பேணிய உத்தம ராமபிரானே..! நின் செங்கமலப் பாதங்களுக்கு வணக்கம்..!

8. வசுதேவருடைய மனைவியாகிய தேவகியின் வயிற்றில் மூன்று மாதங்களும் பிறகு அவரது இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் ஏழு மாதங்களும் தங்கியிருந்து பிறந்தவராகிய பலராமனே..! உயிர்களை காக்கும் சிறப்புடையவனே..! பளிங்கு போன்ற வெண்ணிறம் கொண்ட மனத்தை உடையவனே..! தூயவனே..! உன் தங்கத் திருவடிகளுக்கு வணக்கம்..!

9. வட மதுரை நகரில் வசுதேவர் தேவகி புத்திரனாய் பிறந்து, யமுனைக் கரையில் யசோதையிடம் வளர்ந்து, தயிரும் வெண்ணெயும் திருடி உண்டு, காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடி, கோபியருடன் கொஞ்சி மகிழ்ந்து இபாண்டவர்களுக்காக போராடி தர்மத்தை காத்த தனிப்பெருஞ் செல்வமான கிருஷ்ணா! உன் ஒளி பொருந்திய திருவடிகளுக்கு வணக்கம்..!

10. தேவர்கள் துதிக்க ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் குதிரையில் வரும் கல்கி அவதாரமே! உனக்காக கொண்டு வந்த இந்த மலரை என் தும்பிக்கையின் சூடு பட்டு வாடுவதற்குள் வாங்கிச்செல் ஆதிமூலமே என்று கதறிய யானை வடிவிலான கஜேந்திர ஆழ்வாருக்கு உடனே வந்து அருள் செய்தவனே! அன்பர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுத்தருளும் லட்சுமி நாராயணனே..! உன் திருவடிகளுக்கு வணக்கம்..!

ஓம் நமோ நாராயணா !