கடன் வறுமையை போக்கும் சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்

383

சாகம்பரி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். தீராத கடன் பிரச்சினைகள் தீரும்.

கடன், வறுமையை போக்கும் சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்

சாகம்பரி தேவி

ஓம் சாகம்பர்யை வித்மஹே

சதாக்ஷ்யை ச தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்

சாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உடல் மற்றும் மன சுத்தியுடன் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையில் அம்பாளின் படம் முன்பாக பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றிற்கு எப்போதும் குறைவு உண்டாகாது. தீராத கடன் பிரச்சினைகள் தீரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.

சாகம்பரி தேவி

“சாகம்பரி” என்றால் “காய், கனிகளை தாங்கி இருப்பவள்” என்று ஒரு பொருள் உண்டு. சமஸ்கிருத மொழியில் “சாக” என்றால் “காய், கனிகள்” என்றும், “பரி” என்றால் “வைத்திருப்பவர், தாங்கி இருப்பவர், அணிந்திருப்பவர்” என்றும் பொருள் உண்டு.

சாகம்பரி தேவியைப் பற்றிய குறிப்புகள் தேவி மாஹாத்ம்யம் (அத்யாயம் 11), தேவி பாகவத புராணம் (அத்யாயம் 28) மற்றும் தேவி மாஹத்ம்யத்தின் இணைப்பான மூர்த்தி ரகஸ்யம் இவற்றில் கூறப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சாகம்பரி தேவியை, துர்க்கை அன்னையின் அவதாரமாக குறிப்பிடுகின்றன.

துர்கமாசுரன் (துர்கம்) என்னும் ஒரு அசுர அரசன் இருந்தான். கடும் தவம் செய்து வேதங்களைக் கைப்பற்றினான். மேலும் எந்த தெய்வங்களுக்கும் கொடுக்கும் ஆஹுதிகள் அனைத்தும் அவனுக்கே வந்து சேரும் என்ற வரத்தையும் பிரம்மா அவனுக்கு கொடுத்தார். இதன் விளைவாக அவனது பலம் அதிகமாகிக் கொண்டே போனது. அசுரனது கொடுமையான ஆட்சியின் விளைவாக எங்கும் பஞ்சம் ஏற்பட்டது. 100 வருடங்களுக்கு மேல் பூமியில் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிரினங்களும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாயின. முனிவர்கள் இமாலயத்தில் உள்ள குகைகளில் அன்னையை நோக்கி தவம் செய்தனர். அவர்கள் முன் அன்னை ஆயிரக்கணக்கான கண்களுடன் (ஷடாக்க்ஷி தேவி) காட்சி தந்தார். பூமியின் நிலையைக் கண்டு வருந்திய அன்னையின் ஆயிரக்கணக்கான கண்களில் இருந்து விழுந்த நீர்த்துளிகள் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு பூமியில் விழுந்து நதிகளாக மாறின. குகையில் இருந்த முனிவர்கள் வெளியே வந்து அன்னையை போற்றித் துதித்தனர். அதைக் கண்டு மகிழ்ந்த அன்னை (ஷடாக்க்ஷி தேவி) தன் வடிவத்தை, மிகவும் அழகான வடிவமாக மாற்றி, எட்டு கைகளில் தானியங்கள், காய்கள், கனிகள் மற்றும் மூலிகைகளுடன், அழகான வஸ்திரம் தரித்துக் கொண்டு காட்சி தந்தார். அன்று முதல் அன்னையை “காய், கனிகள்” கொடுத்து மீண்டும் அனைத்து உயிரினங்களையும் பஞ்சத்தில் இருந்து மீட்டதால் “சாகம்பரி தேவி” என்ற பெயருடன் வணங்கத் தொடங்கினர்.

இன்றும் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில், முக்கியமாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அன்னையை பலவித காய் கனிகளால் அலங்கரித்து சாகம்பரி தேவியாக பூஜித்து வருகின்றனர்.