‘லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க வேண்டும்’ என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. இப்படி லக்ஷ்மி பிராட்டியாரின் கருணை கிடைத்துவிட்டால், சகல சௌபாக்யங்களும் சந்தோஷமும் நிறைந்ததாக வாழ்க்கை வாசம் வீசுமே!
பிராட்டியாரின் கருணை கடாக்ஷம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக,
‘லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம் ரங்க தாமேஸ்வரீம் தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்’
ஸ்லோகத்தைச் சொல்லிப் பிரார்த்திக்கிறோம்.
தீபத்தின் ஒளியானது தன்னை மட்டும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் வெளிப்படுத்துகிறது. அதுபோல்தான் மஹாலக்ஷ்மியும்!
தன்னை வெளிப்படுத்திக்
கொள்வதுடன், தன்னைச் சரண் அடைந்தவர்களையும் சிறப்புறச் செய்வாள்! அவளுடைய திருவடிகளைப் பற்றிக்கொள்ள யாருடைய சிபாரிசும் தேவையில்லை. அவளுடைய கருணா கடாக்ஷத்தின் மகிமைகளைச் சொல்லி அவளிடம் பிரார்த்தித்துக்கொண்டோம் என்றால், அவளுடைய திருவடிகளை நமக்குக் கொடுத்துவிடுவாள்!
மஹாலக்ஷ்மிக்கு பிறந்த வீடு திருப்பாற்கடலாகவும், புகுந்த வீடு வைகுண்டமாகவும் இருந்தாலும், அவள் எப்போதும் நிரந்தரமாக இருப்பது எங்கே தெரியுமா? ரங்கத்தில்தான்! அதனால்தான் ‘ரங்க தாமேஸ்வரீம்’ என்று அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
