பிரதோஷம் ஸ்பெஷல் ! 3.6.20 !

134

ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை
ஆலதன்கீழ்அறம்நால்வர்க்கருள்செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமுமாகிப்
பைங்கரும்பாய்அங்கருந்தும் சுவையானானை
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே

-ஆறாம் திருமுறை

ஆலால நஞ்சினைத் தன் கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத் தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும் தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய் விளங்குபவனும், வேள்வியின் பயனாய் விளைபவனும், குற்ற மற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப் போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !