Saturday, October 14, 2023
HomeSlogamஸ்ரீ மஹா பெரியவா பக்தி பாமாலை!

ஸ்ரீ மஹா பெரியவா பக்தி பாமாலை!

ஸ்ரீ மஹா பெரியவா பக்தி பாமாலை!

உற்றுனை அடைந்துனை உயிரெனக் கொண்டிலேன்
பற்றியுன் பதமலர் துணையெனக் கொண்டிலேன்
நற்றவம் புரிந்திலேன் நாணிலேன் செத்திலேன்
குற்றமே பொறுத்தெனை அடிமையாய்க் கொள்வையோ? (1)

வித்தனே, நாதனே என்றுனை ஏத்திலேன்
சித்தமும் உன்பதம் வைத்திடக் கற்றிலேன்
பித்தனாய் ஆக்கியுன் பதமலர் என்சிரம்
அத்தனே வைத்தெனை உனதெனக் கொள்வையோ? (2)

பெரியவா சரணமென்றுளமதும் உருகிலேன்
அரியதாம் பதமலர் நினைவிலே கொண்டிலேன்
விரியவே உன்புகழ் கேட்டிலேன் ஓதிலேன்
பரிவுடன் வந்தெனை நினதெனக் கொள்வையோ? (3)

குருபதம் ஜபமெனக் கொண்டிலேன் கதியிலேன்
திருமுகம் அதனையே உளமதில் நினைவிலேன்
அறுபகை அவைவிடும் வழியிலேன் நாயினேன்
உறுபதம் தந்தெனைத் தனதெனக் கொள்வையோ? (4)

மதியிலேன், தவமிலேன், பாரிலே சீரிலேன்
கதியிலேன், பதியதாம் கஞ்சிவந்துற்றிலேன்
விதியினால் நல்வழி ஏதிலேன், பாவியேன்
துதிமலர்த் தாளிணை தந்தெனைக் கொள்வையோ? (5)

சிந்தனை உன்னுரை கொண்டிலேன் தீயினேன்
புந்தியில் உன்பெயர் ஓதிலேன் பேயினேன்
பந்தமோடாயிரம் பாசமும் விட்டிலேன்
எந்தையே! வந்து இங்கென்னையும் கொள்வையோ? (6)

அடியவர் அவரொடும் கூடிலேன் பாடிலேன்
கடிநகர் காஞ்சியும் வந்துனைக் கண்டிலேன்
மிடியுடை வாழ்வினை மாயமாய் எண்ணிலேன்
வடிவுடை சோதிநீ, தாளிலே கொள்வையோ? (7)

கண்டிலேன் நாதனின் தாளிணை மலரினை
விண்டிலேன் நாதனின் பெருமையை நாவுற
உண்டியோடுறக்கமே வாழ்க்கையாய்க் கொண்டனன்
அண்டிநீ வந்தெனை அணைத்துடன் கொள்வையோ? (8)

வெள்ளமேந்துறுபொருள் நீயெனக் கற்றிலன்
பள்ளிகொள் மாயனும் நீயெனக் கற்றிலன்
கள்ளமே உள்ளமாயிருக்குமித் தீயனை
அள்ளியே கொண்டுவுன் பதமலர் கொள்வையோ? (9)

உய்வழி அறிந்திலேன்; உண்மையும் உணர்ந்திலேன்
மெய்யதும் அறிகிலேன் பொய்யதாம் மெய்யதை
மெய்யென நினைத்துவாழ் மூடனாம் வீணனை
தெய்வமே! நீயும்வந்தணைத்துனுள் கொள்வையோ? (10)

தஞ்சமென்றுன் மலர்ப்பதம் பணிந்தேன் மனோ
ரஞ்சனனே அருள்வாய் சந்திரசேகரனே
பஞ்சமும் பிணியும் நீக்கியே அருள்வாய்
செஞ்சடாதரனே நிலவணிந்தவனே
நஞ்சுடைக் கண்டா, நாக பூஷணனே
கொஞ்சிடும் உமைதன் அகம் கொண்டவனே
மஞ்சிடைப் பனிமலை வாழ் சங்கரனே
அஞ்சுக மொழியாள் அவளானவனே
அஞ்சியே வருவோர்க் காறுதல் தருவாய்
கஞ்சிமா நகர்வாழ் சசிசேகரனே
குஞ்சித பாதமும் சிரசணிந்தவனே
கஞ்சமலர்ப்பாதம் பணிந்தேன் ஐயா!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர….
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 12 =

Most Popular