ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பொருள் விளக்கத்துடன்- நாமம் 4 : சித் அக்னி குண்ட சம்பூதா

214

*चितग्नि कुण्ड सम्भूता*

ஞானமாகிய அக்னி (யாக) குண்டத்திலிருந்து தோன்றியவள்.

பண்டாஸுரன் சிவனை நோக்கித் தவமிருந்தான். அதனால் மகிழ்ந்த சிவன் அவனுக்கு நன்மை தரும் வரங்கள் அளித்தார். அப்படிப்பட்ட பண்டன் தெய்வ வழிபாட்டை மறந்து மனதை மோஹினியிடம் கொடுத்துவிட்டான். நல்லது செய்வதை விட்டுவிட்டு தேவர்களை அழிக்க ஆரம்பித்தான்.

அதிலிருந்து மீள, மஹாவிஷ்ணு அவர்களிடம் சொன்னதுபோல், தேவர்கள் ஒரு சமுத்ரத்தை வற்றச் செய்து மற்ற சமுத்ரங்களிலிருக்கும் நீரை நெய்யாக்கி ஆஹூதி கொடுத்து தங்களது அவயவங்களை ஒவ்வொன்றாக அக்னி குண்டத்தில் இட்டு ஹோமம் செய்தார்கள். அப்போதும் தேவி வரவில்லை. பிறகு தங்களையே அந்த குண்டத்திலிட்டு ஹோமம் செய்ய ஆரம்பித்த உடனே தேவி அக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டாள்.

அகந்தையையும் மமதையையும் இழந்து தங்களையே அர்ப்பணம் செய்த குண்டம் சிதக்னி குண்டம். அந்த அக்னி ஞானாக்னி. அந்த ஞானாக்னி கஷ்டங்களைத் தரும் வினைகளையே அழித்து சாம்பலாக்கி விடும்.

‘சித்’ – ஞானம் என்பதே அக்னிக்கு சமமானது என்பது ப்ரஸித்தம். சித், அதாகிற அக்னிகுண்டம் அவித்யை ஆகிற இருட்டுக்கு விரோதியானதால் அதில் ஸம்பூதா (ஆவிர்பவித்தவள்). அந்த குண்டத்திலிருந்து உதித்தவள்.

கண்ணன் கீதையில் அர்ஜுனனிடம் – ‘ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே அர்ஜுன’ என்றார்.

அர்த்தம் – ஏ அர்ஜுனா இந்த ஞானமாகிய அக்னி எல்லா வினைகளையும் எரித்து சாம்பலாக்கி விடும். வினைகள் என்றால் இங்கு கஷ்டங்கள்.

ஸ்ரீ தேவி வழிபாட்டில் ரஹோயாகம் என்னும் முறை உண்டு. விறகுகளிலின்றித் தானே எரியும் ஞானமாகிய தீயை, வாஸனைகளாகிற விறகு கொண்டு பெருக்கி, அது கனிந்து நிற்கின்ற போது புண்யம், பாபம், செயல்கள், எண்ணங்கள், தர்மங்கள் அனைத்தையும் அதில் ஆஹூதி செய்து ஆன்மாவை புடமிட்ட ஒளிவடிவினதாக ஆக்குவது ரஹோயாகமாகும். அப்படிப்பட்ட புடமிட்ட தூய சக்தியாக வெளிப்பட்டவள் தேவி.

ஓம் சிதக்னிகுண்ட ஸம்பூதாயை நம:

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !