தசரத புத்ரா ஸ்ரீ ராமா
கோசலை மைந்தா ஸ்ரீ ராமா
நால்வரில் முதல்வா ஸ்ரீ ராமா
கைகேயிப் ப்ரியனே ஸ்ரீ ராமா
முனிவர்கள் யாகமே ஸ்ரீ ராமா
காத்திடச் சென்றாய் ஸ்ரீ ராமா
மாடத்தில் மைதிலி ஸ்ரீ ராமா
மனதுள் வரித்தால் ஸ்ரீ ராமா
சிவனார் தனுசை ஸ்ரீ ராமா
சட்டென் றிருத்தாய் ஸ்ரீ ராமா
மங்கை ஜானகி ஸ்ரீ ராமா
மாலையும் சூட்டினாள் ஸ்ரீ ராமா
மந்தரை மனதுள் ஸ்ரீ ராமா
மாசும் புகுந்தது ஸ்ரீ ராமா
பரதன் ஆளவும் ஸ்ரீ ராமா
வனம்நீ ஏகவும் ஸ்ரீ ராமா
வரங்களும் பெற்றாள் ஸ்ரீ ராமா
சிரமேல் ஏற்றாய் ஸ்ரீ ராமா
மரவுரி அணிந்தாய் ஸ்ரீ ராமா
மங்கையும் பணிந்தாள் ஸ்ரீ ராமா
இருவரின் பின்னே ஸ்ரீ ராமா
இளவலும் இணைந்தான் ஸ்ரீ ராமா
குகனையும் உன்னுடன் ஸ்ரீ ராமா
குளிர்ந்தே சேர்த்தாய் ஸ்ரீ ராமா
கல்லுள் பெண்ணை ஸ்ரீ ராமா
கருணையால் மீட்டாய் ஸ்ரீ ராமா
மானென வந்தான் ஸ்ரீ ராமா
மாதினை மயக்கினான் ஸ்ரீ ராமா
லக்ஷ்மண ரேகையை ஸ்ரீ ராமா
அலட்சியம் செய்தாள் ஸ்ரீ ராமா
இலங்கை மன்னனும் ஸ்ரீ ராமா
இலகுவாய்க் கொண்டான் ஸ்ரீ ராமா
கால்கள் நோகவே ஸ்ரீ ராமா
கானகம் அலைந்தாய் ஸ்ரீ ராமா
தந்தைபோல் ஜடாயு ஸ்ரீ ராமா
தக்க துரைத்தார் ஸ்ரீ ராமா
வானரர் பூமியும் ஸ்ரீ ராமா
வந்தே சேர்ந்தாய் ஸ்ரீ ராமா
வாலியின் வதமும் ஸ்ரீ ராமா
வருந்தியே செய்தாய் ஸ்ரீ ராமா
அஞ்சனை மைந்தனை ஸ்ரீ ராமா
ஆசியோ டனுப்பினாய் ஸ்ரீ ராமா
உன் கணையாழியும் ஸ்ரீ ராமா
உவந்தே தந்தனை ஸ்ரீ ராமா
உன் திரு நாமமே ஸ்ரீ ராமா
உறுதுணை செய்தது ஸ்ரீ ராமா
மும்மதில் நகருள் ஸ்ரீ ராமா
மாருதி நுழைந்தான் ஸ்ரீ ராமா
அன்னையைத் தேடி ஸ்ரீ ராமா
அவனும் அலைந்தான் ஸ்ரீ ராமா
அசோக வனமதில் ஸ்ரீ ராமா
அவளும் இருந்தாள் ஸ்ரீ ராமா
விவர மனைத்துமே ஸ்ரீ ராமா
வணங்கியே உரைத்தான் ஸ்ரீ ராமா
தீயவன் நகரினை ஸ்ரீ ராமா
தீக்கிரை யாக்கினான் ஸ்ரீ ராமா
கண்ட நற்செய்தியை ஸ்ரீ ராமா
விண்டே யுரைத்தான் ஸ்ரீ ராமா
அணிலும் பணி செய்ய ஸ்ரீ ராமா
அமைத்தாய் சேதுவை ஸ்ரீ ராமா
வந்தனன் போருக்கு ஸ்ரீ ராமா
தந்தனை பொழுதும் ஸ்ரீ ராமா
இன்றுபோய் நாளையே ஸ்ரீ ராமா
வாவென் றியம்பினாய் ஸ்ரீ ராமா
இலங்கை வேந்தன் ஸ்ரீ ராமா
இறையோ டிணைந்தான் ஸ்ரீ ராமா
பாதுகை காத்தே ஸ்ரீ ராமா
பரத னிருந்தான் ஸ்ரீ ராமா
தீக்குள் புகுமுன் ஸ்ரீ ராமா
அனுமனும் சென்றான் ஸ்ரீ ராமா
அனைவரும் மகிழவே ஸ்ரீ ராமா
அரியணை அமர்ந்தாய் ஸ்ரீ ராமா
ராம ராம ஜெய ராஜாராம்
ராம் ராம ஜெய சீதா ராம்.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
