தைப்பூசம் ஸ்பெஷல் !

592

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து …… மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து …… மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று …… மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி …… யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த …… மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று …… வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த …… குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற …… பெருமாளே.

உலகளந்த திருமால் மகிழ்ந்த மருகனே! திருஞான
சம்பந்தராகத் திரு அவதாரம் புரிந்தவரே! பரவை
நாச்சியாருக்காக தூது சென்ற பரமனது திருப்புதல்வரே!
பழனி மலையில் என்றும் , இன்பம் தருமாறு எழுந்தருளிய
பெருமாளே! அடியேன் கருவிலிருந்து பிறந்து கலைகள்
பல தெரிந்து, அதனால் கருத்தழிந்து சிவநாமங்களை
நினையாமல், ஆறு சமயங்களின் நீதிகளில் ஒன்றையேனும்
அறிந்துகொள்ளாமல், சோறு போடுபவர்கள் இல்லங்கள்
தோறும் சென்று நாள்தோறும் சிறிதும் வெட்கமில்லாமல்,
அலைந்து உழன்ன்று அழிவேனோ? அவ்வாறு அழியாதுஉமது
அருட் சோற்றை நாடி ஆலயத்தின் முன் வந்து நிற்கக் கடவேன்.