Thursday, October 19, 2023
HomeSlogamதிருஅங்கமாலை திருப்பதிகம் !

திருஅங்கமாலை திருப்பதிகம் !

உடலின் உள்ள உறுப்புகளை எவ்வாறு நல்வழிப்படுத்தி இறை பணியில் ஈடுபடுத்துவது என்பதை கூறுவதால், இந்த பதிகத்திற்கு அங்கமாலை என்ற பெயர் வந்தது.

பாடல் எண் : 01
தலையே நீ வணங்காய் – தலை மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய்.

பாடல் விளக்கம்:
தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் பிச்சைக்கு உலாவும், தலைவனைத் தலையே நீ வணங்குவாயாக.

பாடல் எண் : 02
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ.

பாடல் விளக்கம்:
கண்களே, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், எட்டு தோள்களை வீசி நின்றாடுபவனும் ஆகிய சிவபிரானை நீங்கள் காணுங்கள்.

பாடல் எண் : 03
செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம்மிறை செம்பவள
எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ.

பாடல் விளக்கம்:
செவிகளே, எமது தலைவனாகிய சிவபெருமான், செம்பவளம் போன்றும் தீயினைப் போன்றும் சிவந்த நிறம் கொண்டவர். பெருமைக்குரிய அவரது பண்புகளையும், செயல்களையும் எப்போதும் நீங்கள் கேளுங்கள்.

பாடல் எண் : 04
மூக்கே நீ முரலாய் – முதுகாடு உறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.

பாடல் விளக்கம்:
மூக்கே, சுடுகாட்டில் உறைபவனும், வேதங்களின் பொருளை மிகவும் கவனமாக கேட்டு உணர்ந்த பார்வதி தேவியின் மணாளனும், ஆகிய முக்கண்ணனின் பெருமைகளை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.

பாடல் எண் : 05
வாயே வாழ்த்துக் கண்டாய் – மதயானை உரி போர்த்து
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்.

பாடல் விளக்கம்:
வாயே, மதயானையின் தோலினை உரித்து அதன் பசுமையான தோலினை தனது உடலில் போர்த்துக் கொண்டவரும், பேய்கள் வாழும் காட்டில் விருப்பமுடன் நடமாடுபவரும் ஆகிய பெருமானை, நீ எப்போதும் வாழ்த்துவாயாக.

பாடல் எண் : 06
நெஞ்சே நீ நினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்.

பாடல் விளக்கம்:
நெஞ்சமே, மேல் நோக்கிய செஞ்சடை உடைய நின்மலனை, மேகங்கள் தவழும் இமயமலையின் மகளாகிய பார்வதி தேவியின் கணவனை, நீ எப்பொழுதும் நினைப்பாயாக.

பாடல் எண் : 07
கைகாள் கூப்பித் தொழீர் – கடி மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்.

பாடல் விளக்கம்:
கைகளே, படம் எடுக்கும் பாம்பினைத் தனது இடுப்பில் கச்சையாக இறுகக் கட்டிய பிரானை. நறுமணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி, கைகளைக் கூப்பித் தொழுவீர்களாக.

பாடல் எண் : 08
ஆக்கையால் பயன் என் – அரன் கோயில் வலம் வந்து.
பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என்.

பாடல் விளக்கம்:
சிவபெருமான் உறையும் கோயிலை வலம் வந்து, பூக்களைக் கையால் இறைவனின் திருமேனி மேல் தூவி அவனை வணங்காத உடம்பினால் நமக்கு பயன் ஏதும் இல்லை.

பாடல் எண் : 09
கால்களால் பயன் என் – கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்.

பாடல் விளக்கம்:
அழகான கோபுரத்தை உடைய, நீலகண்டனாகிய எம்பெருமான் உறையும், கோகர்ணம் என்று அழைக்கப்படும் தலத்தில் உள்ள திருக்கோயிலை வலம் வராத கால்களால் என்ன பயன்.

பாடல் எண் : 10
உற்றார் ஆர் உளரோ – உயிர் கொண்டு போம் பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ.

பாடல் விளக்கம்:
நாம் இறக்கும் தருவாயில், நம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள் எவரும் உதவமுடியாத நிலையில் இருப்பதால், அவர்கள் எவரையும் உற்றார்களாக கருதமுடியாது. அந்த சமயத்தில், குற்றாலத்தில் உறையும் கூத்தன் தவிர, வேறு எவரும் நமக்கு உதவி செய்யக்கூடிய உற்றார் இல்லை.

பாடல் எண் : 11
இறுமாந்து இருப்பன் கொலோ – ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ.

பாடல் விளக்கம்:
தாருகவனத்து முனிவர்கள் ஏவிய போர்க்குணம் கொண்ட மான் கன்றின், கோபத்தைத் தணிவித்து, அதனைத் தனது கையில் ஏந்திய சிவபிரானின், பெருமை வாய்ந்த திருவடியைச் சென்றடைந்து, சிவகணத்துள் ஒருவராக, கருதப்படும் நிலையினை அடைந்து, இறுமாப்புடன் இருப்பேன்.

பாடல் எண் : 12
தேடிக் கண்டு கொண்டேன் – திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்.

பாடல் விளக்கம்:
திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி, அவன் என் நெஞ்சத்தினுள்ளே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.

.”ஓம் நமசிவாய…! சிவாய நம ஓம்…!”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 15 =

Most Popular