வராஹி மந்திரங்கள் பகுதி 3!
1. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.
2. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
3. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.
4. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
5. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
6. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.
7. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
8. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.
9. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
10. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.
11. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.
12. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்
